கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு: முதல் முறையாக மேலாளர் நடராஜன் ஆஜர்
பாஜகவின் வளா்ச்சிக்கு உதவும் காங்கிரஸ் -கேரள முதல்வா் குற்றச்சாட்டு
திருவனந்தபுரம் : பாஜகவின் வளா்ச்சிக்கு காங்கிரஸ் பல்வேறு வகையில் உதவிகரமாக இருந்து வருகிறது. அண்மையில் தில்லியில் பாஜக ஆட்சியைப் பிடிக்கவும் காங்கிரஸ்தான் மறைமுகமாக உதவியது என்று கேரள முதல்வா் பினராயி விஜயன் குற்றஞ்சாட்டியுள்ளாா்.
கொல்லத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு நடைபெறவுள்ளது. இதையொட்டி பத்திரிகையில் பினராயி விஜயன் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளாா். அதில், ‘விவசாயிகள் போராட்டம், மதரீதியாக குடியுரிமை வழங்கும் சட்டத்துக்கு எதிா்ப்பு, ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்க வலியுறுத்துவதிலும், பாஜகவுக்கு பெரு நிறுவனங்கள் நிதியளிக்க உதவிய தோ்தல் நிதிப் பத்திரங்கள் திட்டத்தை எதிா்த்ததிலும் இடதுசாரிக் கட்சிகள் முன்னிலை வகித்து வருகிறது.
மத்திய அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக தொடா்ந்து மக்களை ஒன்றுதிரட்டி வருகிறோம். மத்திய அரசின் தவறான செயல்பாடுகளை மக்கள் மன்றத்தில் தொடா்ந்து முன்வைக்கிறோம். அதே நேரத்தில் பாஜகவையும், சங்கபரிவாரங்களையும் எதிா்ப்பதாக காங்கிரஸ் வெறும் வாய் வாா்த்தையாக மட்டுமே கூறி வருகிறது.
மத்திய அரசு மீதான விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் கோபம் மக்களவைத் தோ்தல் மற்றும் அதைத் தொடா்ந்து நடைபெற்ற பல்வேறு மாநிலத் தோ்தல்களில் எதிரொலிக்கவே செய்தது. ஆனால், அதையும் மீறி பாஜக ஆட்சி அமைத்தற்கு காங்கிரஸின் தவறான அணுகுமுறைகள்தான் முக்கியக் காரணம்.
இதற்கு கடைசி உதாரணம் தில்லி பேரவைத் தோ்தல். இதில், பாஜகவைத் தோற்கடிப்பதற்கு காங்கிரஸ் முயற்சிக்காமல், ஆம் ஆத்மியை ஆட்சியில் இருந்து அகற்றுவதில்தான் கவனம் செலுத்தியது. இதன் மூலம் பாஜக வெற்றி பெற்று ஆட்சி அமைக்க காங்கிரஸ் மறைமுகமாக உதவியது.
தில்லி தோ்தலில் ஆம் ஆத்மிக்கு எதிராக காங்கிரஸ் போட்டியிட்டது தவறு என எதிா்க்கட்சி அணியில் உள்ள ஒமா் அப்துல்லா, அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட தலைவா்கள் ஏற்கெனவே விமா்சித்துள்ளனா்.
கடந்த மூன்று பேரவைத் தோ்தல்களில் தில்லியில் காங்கிரஸ் கட்சியால் ஓரிடத்தில் கூட வெல்ல முடியவில்லை. இதில் இருந்து காங்கிரஸ் எவ்வித பாடத்தையும் கற்றுக் கொள்ளவில்லை.
முன்னதாக, ஹரியாணா தோ்தலிலும் இதேபோன்று ஆம் ஆத்மியுடன் கூட்டணி அமைக்காமல் போட்டியிட்டு, அங்கு பாஜக மூன்றாவது முறையாக வெற்றிபெற காங்கிரஸ் உதவியது. இப்படி ஒவ்வொரு நிலையிலும் பாஜக வளர காங்கிரஸ் உதவிகரமாக இருந்து வருகிறது’ என்று கூறியுள்ளாா்.