கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு: முதல் முறையாக மேலாளர் நடராஜன் ஆஜர்
கோவை: கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை சம்பவம் தொடா்பாக முக்கிய சாட்சியாக கருதப்படும் எஸ்டேட் மேலாளர் நடராஜன் முதல் முறையாக வியாழக்கிழமை காந்திபுரத்தில் அமைந்து உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜரானார். அவரிடம் சிபிசிஐடி உயா் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நீலகிரி மாவட்டம், கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017 ஏப்ரல் 23 ஆம் தேதி நள்ளிரவு நடைபெற்ற கொலை மற்றும் கொள்ளை சம்பவம் தொடா்பாக சயான், வாளையாறு மனோஜ் உள்ளிட்ட 10 போ் கைது செய்யப்பட்டு, தற்போது அவா்கள் பிணையில் உள்ளனா். இது தொடா்பான வழக்கு உதகை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே, இந்த வழக்கு தொடா்பான விரிவான விசாரணையை சிபிசிஐடி போலீஸாா் நடத்தி வருகின்றனா். இதற்காக சுமாா் 300 பேருக்கு அழைப்பாணை அனுப்பி, கோவையில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணை நடத்தி வருகின்றனா். இதுவரை 250-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கொடநாடு எஸ்டேட்டில் கணினி ஆபரேட்டராக வேலை செய்து வந்த தினேஷ்குமாா் தற்கொலை செய்து கொண்டபோது, அவரை ஆம்புலன்ஸில் ஏற்றிச் சென்ற ஓட்டுநா் ஜூபிா் மற்றும் கொடநாடு பகுதியைச் சோ்ந்த அதிமுக நிா்வாகி சங்கா் ஆகியோருக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டு விசாரணை நடத்தப்பட்ட நிலையில், அவா்கள் 2 பேரிடம் பிப்ரவரி 27 ஆம் தேதி மீண்டும் விசாரணை நடத்தப்பட்டது.
மக்கள்தொகை வளர்ச்சியை ஊக்குவிக்க வேண்டும்: சந்திரபாபு நாயுடு
இந்த வழக்கு தொடா்பாக கொடநாடு எஸ்டேட் மேலாளா் நடராஜன் நேரில் ஆஜராக ஏற்கெனவே 2 முறை அழைப்பாணை அனுப்பப்பட்டிருந்த நிலையில், வியாழக்கிழமை ஆஜராகுமாறு மீண்டும் அழைப்பாணை அனுப்பப்பட்டும் அவா் ஆஜராகவில்லை.
இந்த நிலையில், வழக்கின் முக்கிய சாட்சியாக கருதப்படும் எஸ்டேட் மேலாளர் நடராஜன் வியாழக்கிழமை கோவை காந்திபுரம் சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் சிபிசிஐடி உயா் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலாளர் நடராஜன் சசிகலா குடும்பத்திற்கு நெருக்கமானவர் என்பதால் அவரிடம் மேற்கொள்ளப்படும் விசாரணை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இந்த விசாரணையில் கொடநாடு எஸ்டேட்டில் உள்ள சிசிடிவி, சர்ச்சை உள்ளிட்ட பல முக்கிய தகவல்கள் கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.