கர்நாடகத்தில் 7 மாவட்டங்களில் லோக்ஆயுக்தா அதிகாரிகள் சோதனை!
வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து குவித்தல், ஊழலில் ஈடுபடுவது குறித்த ரகசியத் தகவலைத் தொடர்ந்து கர்நாடக லோக்ஆயுக்தா ஏழு மாவட்டங்களில் உள்ள அரசு அதிகாரிகளுக்குச் சொந்தமாக இடங்களில் சோதனை நடத்தி வருகின்றது.
பெங்களூரு, கோலார், கலபுரகி, தாவணகெரே, தும்கூர், பாகல்கோட் மற்றும் விஜயபுரா மாவட்டங்களில் சோதனைகள் நடத்தப்பட்டன. எட்டு அதிகாரிகளின் வீடுகள் மற்றும் அவர்கள் சொத்துக்கள் இருக்கும் இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டதாக வட்டாரங்கள் தெரிவித்தன.
தாவணகெரே நகரில் நிஜலிங்கப்பா லேஅவுட்டில் உள்ள உணவு பாதுகாப்பு அதிகாரியின் வீடு மற்றும் அலுவலகத்தில் சோதனை நடத்தப்பட்டுள்ளது. லோக்ஆயுக்தா காவல் கண்காணிப்பாளர் கவலப்பூர் தலைமையிலான குழு சோதனைகளை நடத்திவருகின்றது.
கலாபுராகி நகரில், பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளரின் வீடு மற்றும் சொத்துக்கள் சோதனை செய்யப்பட்டு, கோடிக்கணக்கான மதிப்புள்ள சொத்துக்களின் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
பெங்களூருவில், புருஹத் பெங்களூரு மாநகர பாலிகே (BBMP) உடன் இணைக்கப்பட்ட ஒரு தலைமை பொறியாளர் மற்றும் ஒரு நிர்வாக பொறியாளரின் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டுள்ளது.
பெங்களூரு மின்சார விநியோக நிறுவனத்தில் (BESCOM) உதவி நிர்வாக பொறியாளருக்குச் சொந்தமான மூன்று இடங்களில் உள்ள சொத்துக்களும் சோதனை செய்யப்பட்டன.
தும்குருவில், தும்குருவ அரசு மருத்துவமனையில் இணைக்கப்பட்ட ஒரு மருத்துவரின் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. இதற்கிடையில், பாகல்கோட் மாவட்டத்தின் பிலாகி நகரில், பொதுப்பணித் துறை முதல் பிரிவு எழுத்தரின் வீடு மற்றும் அலுவலகத்தில் சோதனை நடத்தப்பட்டது.
சோதனைகள் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிக்கை கர்நாடக லோக்ஆயுக்தாவால் இன்னும் வெளியிடப்படவில்லை.