கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு: முதல் முறையாக மேலாளர் நடராஜன் ஆஜர்
உ.பி.யில் கட்டப்படும் ஆதிதிராவிட, பழங்குடியின மாணவர் விடுதிகளுக்கு அம்பேத்கர் பெயர் சூட்டப்படும்
லக்னௌ: உத்தரப் பிரதேசத்தில் அனைத்து மாவட்டங்களிலும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்களுக்கு கட்டப்படும் விடுதிகளுக்கு அம்பேத்கரின் பெயர் சூட்டப்படும் என்று முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.
உத்தரப் பிரதேச சட்டப்பேரவையில் நிகழ் ஆண்டு நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தின்போது எதிர்க்கட்சிகளை விமர்சித்து முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசியதாவது: உத்தரப் பிரதேசத்தில் எனது தலைமையிலான அரசு அம்பேத்கர் சர்வதேச மையம், பஞ்ச தீர்த்தம் (அம்பேத்கர் பிறப்பு முதல் இறப்பு வரையிலான பகுதிகள்) உள்ளிட்ட பல வரலாற்று நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
அத்துடன் அனைத்து மாவட்டங்களிலும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கென்று கட்டப்படும் விடுதிகளுக்கு அம்பேத்கரின் பெயரே சூட்டப்படும்.
மாநிலத்தில் சமாஜவாதி கட்சி ஆட்சி அமைக்க பலமுறை வாய்ப்பு கிடைத்தும் அவர்கள் அம்பேத்கரின் பெயரில் எந்த கல்வி நிறுவனத்தையும் அமைக்கவில்லை. மாறாக அவர்கள் ஏற்கெனவே இருந்த பெயரை மாற்றினார்கள்.
ஆனால், எதிர்க்கட்சிகளைப்போல அல்லாமல் பிரதமர் மோடி தலைமையிலான எனது அரசு அம்பேத்கருக்கு பெருமை சேர்க்கும் விதமாக பஞ்ச தீர்த்தம் கட்டமைத்தோம். லக்னௌவில் அம்பேத்கர் சர்வதேச நினைவு மற்றும் கலாசார மையம் அமைத்து வருகிறோம். இம்மையம் மூலம் தலித் மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கப்படும்.
கன்னோசி அரசு மருத்துவக் கல்லூரிக்கு சூட்டப்பட்டிருந்த அம்பேத்கரின் பெயரை சமாஜவாதி கட்சி நீக்கியது. ஆனால், அந்த மருத்துவமனைக்கு நாங்கள் மீண்டும் அம்பேத்கரின் பெயரை சூட்டினோம். பிரயாக்ராஜ் ஷிரிங்வெர்பூர் பகுதியில் சமாஜவாதி கட்சியினரால் ஆக்ரமிக்க முயன்ற பகுதி மீட்கப்பட்டு அங்கு நிஷாத்ராஜ் குகன் முனையம் கட்டப்பட்டு, பிரதமர் மோடியால் திறந்துவைக்கப்பட்டது.
மகாராஜா சுகல்தேவ் வெற்றி நினைவு மண்டபம் கட்டுமானப் பணியை சமாஜவாதி கட்சியினர் தடுக்க முயன்றனர். ஆனால் நாங்கள் மாநிலத்தில் பஹ்ராஜிலும், ஸ்ரவாஸ்திலும் அவருக்கு நினைவு மண்டபம் கட்டினோம்.
இதுபோல வாரணாசியில் துறவி ரவிதாஸ் பிறந்த பகுதியில் அவருக்கு உருவச் சிலையும், முனையமும் அமைத்தோம்.
மகரிஷி வால்மீகி தவமிருந்த லால்பூரை சிறந்த சுற்றுலாத் தலமாக மாற்றினோம். முன்னர் இப்பகுதியில் வளர்ச்சியைத் தடுக்க சமாஜவாதி கட்சி முயன்றது. சட்ட மேதை அம்பேத்கருக்கு பெருமை சேர்க்கும் விதமாக நவம்பர் 26 ஆம் தேதியை அரசியலமைப்பு தினமாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார். அவருக்கு எனது பாராட்டை தெரிவித்து கொள்கிறேன்.
லோகமாதா அகில்யாபாய் ஹோல்கரின் 300 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு பெண்களுக்கென்று பிரத்யேகமாக 7 விடுதிகள் கட்டவும், சர்தார் வல்லபபாய் பட்டேல் 150 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு ஒவ்வொரு மாவட்டத்திலும் வேலைவாய்ப்பு மண்டலம் அமைக்கவும் முடிவு செய்துள்ளோம். பழங்குடியின பாரம்பரிய இடங்களை பாதுகாக்கும் வகையில் பகவான் பிர்சா முண்டாவின் 150 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு இம்லியா கோதர், பல்ராம்பூரில் பழங்குடியின அருங்காட்சியகம் அமைத்துள்ளோம். அதைத்தொடர்ந்து தற்போது மிர்சாபூரிலும், சோன்பத்ராவிலும் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டு வருகிறது.
அடல் பிகாரி வாஜ்பாயின் நூறாவது பிறந்த நாளை கொண்டாடும் வகையில் அனைத்து நகராட்சியிலும் எண்ம நூலகம் அமைக்கப்படும். இது, அறிவுசார் மையமாகத் திகழும்.
சமாஜவாதி கட்சி ஏழைகளுக்கான நலத் திட்டங்களை புறக்கணித்தது. ஆனால், பாஜக அரசு ஏழைகளுக்கு 56 லட்சம் வீடுகள் கட்டி வழங்கியது; ஏழைகளுக்கு வீடுகள் கட்டும் பணிக்கும், கழிப்பறை கட்டும் பணிக்கும் இடையூறு தந்த சமாஜவாதி கட்சி ஒரு குடும்பத்தின் அரசியலில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறது.
நிகழ் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை உத்தரபிரதேசத்தின் பாரம்பரியம் மற்றும் சமூக நீதியை நிலைநிறுத்துவதை பிரதிபலிப்பதாகும். பெரும் தலைவர்களை கௌரவிப்பதிலும், மாநிலத்தின் வளர்ச்சியில் உச்சம் எட்டவும் எங்கள் பணி தொடரும் என்றார்.