நாட்டில் 80 கோடி மக்களுக்கு இலவச உணவுதானியம் வழங்கும் மோடி: பிரகலாத் ஜோஷி
`கந்தன் வள்ளியை மணந்த கானகம்’ - வள்ளிமலைக்கு புதிய அறங்காவலர் குழுத் தலைவர் நியமனம்
கந்தன் வள்ளியை மணந்த வள்ளிமலைக்குச் சென்று முருகவேளையும் வள்ளிக்குறமகளையும் தரிசிப்பது விசேஷத்திலும் விசேஷம் என்கிறார்கள் பெரியோர்கள். ராணிப்பேட்டையிலிருந்து பொன்னை செல்லும் வழியில் 22 கி.மீ தொலைவில் உள்ளது வள்ளிமலை. வேலூரிலிருந்து 27 கி.மீ தூரம். எல்லாப் பகுதிகளில் இருந்தும் பேருந்து வசதிகளும் உண்டு.
புகழ்பாடப் பெற்ற இக்கோயிலின் அறங்காவலர் குழுத் தலைவராக ராணிப்பேட்டை மாவட்ட தி.மு.க பொருளாளரும், ஆற்காடு ஸ்ரீ மூகாம்பிகை குழும நிறுவனங்களின் தலைவருமான ஏ.வி.சாரதி நியமிக்கப்பட்டுள்ளார். மார்ச் 10-ம் தேதி (திங்கள்கிழமை) மதியம் 12 மணியளவில், அறங்காவலர் குழுத் தலைவராக பொறுப்பேற்க உள்ளார் ஏ.வி.சாரதி. அறங்காவலர்கள் நியமனம் தொடர்பான முறையான அறிவிப்பை இந்து சமய அறநிலையத்துறை பிப்ரவரி 26-ம் தேதி வெளியிட்டிருந்த நிலையில், ஏ.வி.சாரதி தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

வள்ளிமலை சிறப்புகள்:
வள்ளிமலை வித்தியாசமான தோற்றம் கொண்டது. மனதுக்குள் சிக்காத மந்திரமலை வள்ளிமலை. மலையடிவார முருகன் கோயிலும், சரவணப்பொய்கைத் திருக்குளமும், மலையடிவாரத்தில் தமிழ்க் குறமகள் வள்ளி பிராட்டியின் தனிச்சந்நிதியும் காண்பதற்கு எழில் கொண்ட அற்புத சாந்நித்யம் கொண்ட இடங்கள்.
இவற்றையெல்லாம் தாண்டி மலைமீது படியேறிப் பயணித்தால் அடர்ந்த கானகத்துக்குள் வரும் இடங்கள் எல்லாம் அபூர்வமானவை. அவை பல யுகங்களுக்கு முன்பாக, முருகனைக் கரம் பற்றுவதற்காக வள்ளிக் குறமகள் அவதரித்து விளையாடிய மலை. புராதனச் சிறப்புகள் கொண்ட வள்ளிமலை, தமிழர்களுக்கான வரலாற்றுப் பொக்கிஷம் என்றே சொல்லலாம்.
வள்ளிமலைக்கு நடுவே, இயற்கையான சூழலில் சங்கு போன்ற வடிவத்தில் அமைந்திருக்கிறது முருகனின் திருக்கோயில்.
அழகும் அருளும் மிக்க வள்ளியை தரிசித்துவிட்டு, பிறகு விநாயகப் பெருமானையும் தரிசித்துவிட்டு, முருகப் பெருமானை தரிசிக்கலாம். மேலும் உச்சி நோக்கிப் பயணித்தால் வள்ளிமலை சித்தரின் ஜீவசமாதி, சூரியன் காணாத சுனை, வள்ளிசுனை, வள்ளியம்மை மஞ்சள் தேய்த்துக் குளித்த இடம், மலை உச்சியில் அழகிய மண்டபத்தின் கீழே அருளும் மல்லிகார்ஜுனர், அல்லிக் குளங்கள் என மலையைச் சுற்றிலும் காணக் காண இயற்கை அழகு நெஞ்சை அள்ளும்.

எங்கும் பசுமை, எங்கும் பிரமாண்ட மலைகள் என்று காட்சியளிக்கிறது வள்ளிமலை. சிவன், அம்பிகை, விஷ்ணு, முருகன், கணபதி, பொங்கியம்மன், வள்ளி என சகலரும் இங்கே வீற்றிருப்பதால் எல்லா தெய்வங்களின் சாந்நித்யமும் இங்கே கிடைக்கும் என்று சொல்லலாம். ஞானத்தின் வடிவாக முருகன் இருப்பதால் இங்கு வர, கல்வியிலும் கலையிலும் தேர்ச்சி பெறலாம். இச்சா சக்தியாக வள்ளி இருப்பதால் விரும்பிய அனைத்துமே கிடைக்கும் என்கிறார்கள் பக்தர்கள். குறிப்பாக விரும்பிய வேலை, பதவி உயர்வு, வெளிநாட்டுப் பயணம் விரும்புவோர் இங்கு வந்து உடனடியாகப் பலன் அடைகிறார்கள் என்கிறார்கள் இங்கு வரும் பக்தர்கள். ஆறு நாள் விரதமிருந்து ஆறுமுகனை வழிபடுவோர் இங்கு வந்து வேண்ட, வினைகள் யாவும் தீரும்; வேதனைகள் மாறும்!