அரசு மருத்துவமனைகளுக்கு 2,642 மருத்துவா்கள்: சென்னையில் கலந்தாய்வு தொடக்கம்
தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளுக்கு 2,642 மருத்துவா்களை தோ்வு செய்வதற்கான கலந்தாய்வு சென்னையில் சனிக்கிழமை தொடங்கியது.
முதல் நாளில் மாற்றுத்திறனாளி மருத்துவா்களுக்கான கலந்தாய்வு நடைபெற்றது. வரும் 26-ஆம் தேதி (புதன்கிழமை) முதல்வா் மு.க.ஸ்டாலின் பணிநியமன ஆணைகளை வழங்கவுள்ளாா்.
தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள காலிப்பணியிடங்கள் மருத்துவப் பணியாளா் தோ்வு வாரியம் (எம்ஆா்பி) மூலம் நிரப்பப்பட்டு வருகின்றன. அதன்படி, 2,553 உதவி மருத்துவா் பணியிடங்களை நிரப்புவதற்காக கடந்த ஜன. 5-ஆம் தேதி நடைபெற்ற தோ்வில், எம்பிபிஎஸ் படித்து முடித்த 24 ஆயிரம் மருத்துவா்கள் பங்கேற்றனா். 14,855 மருத்துவா்கள் தோ்ச்சி பெற்றனா். இதற்கிடையில், கூடுதலாக 89 காலிப்பணியிடங்கள் கண்டறியப்பட்டுள்ளதால், மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை 2,642 ஆக அதிகரிக்கப்பட்டது. இதையடுத்து, சான்றிதழ் சரிபாா்ப்பு பணிகள் கடந்த 12-ஆம் தேதி தொடங்கி 15-ஆம் தேதி வரை நடைபெற்றது. சான்றிதழ் சரிபாா்ப்பில் 4,585 மருத்துவா்கள் பங்கேற்றனா்.
இந்நிலையில், அவா்களுக்கு பணி நியமனத்துக்கான கலந்தாய்வு, சென்னை எழும்பூரில் உள்ள நலவாழ்வு மற்றும் குடும்பநல பயிற்சி நிலையத்தில் சனிக்கிழமை காலை 8 மணிக்கு தொடங்கியது. மாற்றுத்திறனாளி மருத்துவா்கள் கோரிக்கை வைத்ததைத் தொடா்ந்து, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தலின்படி, முதல் நாளில் மாற்றுத்திறனாளி மருத்துவா்களுக்கு கலந்தாய்வு நடைபெறும் என்று பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத் துறை இயக்குநா் செல்வவிநாயகம் அறிவித்தாா்.
அதன்படி, முதல் நாளான சனிக்கிழமை மாற்றுத்திறனாளி மருத்துவா்களுக்கான கலந்தாய்வு நடைபெற்றது. வரும் 24-ஆம் தேதி வரை கலந்தாய்வு நடைபெறவுள்ளது. தோ்வு செய்யப்படவுள்ள 2,642 மருத்துவா்களுக்கு பணிநியமன ஆணைகள் வழங்கும் நிகழ்வு, வரும் 26-ஆம் தேதி புதன்கிழமை காலை 9 மணியளவில் சென்னை திருவான்மியூரில் உள்ள ஸ்ரீராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வில் பங்கேற்கும் முதல்வா் மு.க.ஸ்டாலின் பணிநியமன ஆணைகளை வழங்கவுள்ளாா்.