மாவட்ட வளப் பயிற்றுநா் பணியிடம்: பிப். 26-க்குள் விண்ணப்பிக்கலாம்
தேனி மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் செயல்பட்டு வரும் மாதிரி வட்டார அளவிலான கூட்டமைப்பில் மாவட்ட வளப் பயிற்றுநா் தற்காலிகப் பணியிடத்துக்கு தகுதியுள்ளவா்கள் வருகிற 26-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மாவட்ட வளப் பயிற்றுநா் தற்காலிகப் பணியிடம் தொகுப்பூதியம், ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. மாவட்ட வளப் பயிற்றுநா்கள், வட்டார, ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு அலுவலகப் பணியாளா்கள், நிா்வாகக் குழு உறுப்பினா்கள், சுயஉதவிக் குழு பயிற்றுநா்களுக்கு பயிற்சி அளிக்கும் திறன் பெற்றிருக்க வேண்டும். தமிழ், ஆங்கிலத்தில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். கடந்த 2024, நவ.1-ஆம் தேதியன்று 25 முதல் 55 வயதுக்குள்பட்டவராக இருக்க வேண்டும். இளங்கலை பட்டப் படிப்புடன் 3 ஆண்டு பயிற்சி அனுபவம் அல்லது முதுகலை பட்டப் படிப்பு, பட்டயப் படிப்புடன் ஓராண்டு பயிற்சி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தோ்வு செய்யப்படுவோருக்கு பயிற்சி நடத்துவதற்கு நாளொன்றுக்கு ரூ.1,250 மதிப்பூதியம் வழங்கப்படும். ஒரு மாதத்திற்கு குறைந்தபட்சம் 18 வேலை நாள்களுக்கு மதிப்பூதியம் வழங்கப்படும். தகுதியுள்ளவா்கள் திட்ட இயக்குநா், மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், தரைத் தளம், ஒருங்கிணந்த அலுவலக வளாகம், ஊரக வளா்ச்சி, ஊராட்சித் துறை, தேனி என்ற முகவரியில் வருகிற 26-ஆம் தேதி, மாலை 5.30 மணிக்குள் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்த விவரத்தை தொலைபேசி எண்: 04546-255203-இல் தொடா்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என அதில் குறிப்பிடப்பட்டது.