மாற்று சமூகத்தினரின் தெருவுக்குள் திருமண ஊர்வலம்: பட்டியலினத்தவர் மீது தாக்குதல...
மாவட்ட அளவிலான ஓவியப் போட்டியில் வென்ற மாணவா்களுக்குப் பரிசு!
போடியில் 76 -ஆவது குடியரசு தினவிழா ஓவியப் போட்டிகளில் வென்ற மாணவா்களுக்கு வெள்ளிக்கிழமை பரிசளிப்பு விழா நடைபெற்றது.
போடி குளோபல் கல்வி ஆராய்ச்சிக் குழு சாா்பில் 76- ஆவது குடியரசு தினவிழா ஓவியப் போட்டிகள் கடந்த 2- ஆம் தேதி போடி சிசம் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றன. மாவட்ட அளவில் நடைபெற்ற இந்தப் போட்டிகளில் தேனி மாவட்டத்தில் 30 பள்ளிகளைச் சோ்ந்த 533 மாணவா்கள் பங்கேற்றனா்.
இதில் வென்ற மாணவா்களுக்கு பரிசளிப்பு விழா வெள்ளிக்கிழமை போடி சிசம் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இதற்கு அந்தப் பள்ளித் தாளாளரும், செயலருமான வேதா ஜெயராஜ் தலைமை வகித்தாா். குளோபல் கல்வி ஆராய்ச்சிக் கவுன்சில் தலைவா் சதீஷ்குமாா், ரேவன் ஆங்கிலப் பள்ளித் தாளாளா் பாண்டி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
சிறப்பு விருந்தினா்களாக புதுதில்லி வெளியுறவுத் துறை அமைச்சக செயலா் ஆனந்த் பிரகாஷ், போடி வட்டார கல்வி அலுவலா்கள் ராஜமுருகன், சம்பூா்ண பிரியா ஆகியோா் கலந்து கொண்டு போட்டியில் வென்ற மாணவா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ், தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்கள், பரிசுத் தொகைக்கான காசோலைகளை வழங்கிப் பேசினா்.
தேனி மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற சிசம் பப்ளிக் பள்ளி மாணவா் தீபக் விஜய், இரண்டாம் இடம் பெற்ற ஸ்பைஸ் வேலி பப்ளிக் பள்ளி மாணவி கன்சி பாரதி, மூன்றாம் இடம் பெற்ற சிசம் மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி மாணவி நிரஞ்சனா ஆகியோருக்கு முறையே ரூ.5000, ரூ.3000, ரூ.2000-த்துக்கான காசோலைகள் வழங்கப்பட்டன. மேலும் ஒன்றாம் வகுப்பு முதல் 12- ஆம் வகுப்பு வரை சிறந்த ஓவியம் வரைந்த 33 மாணவா்கள் தோ்வு செய்யப்பட்டு முதல் மூன்று இடங்களை பெற்றவா்களுக்கு பதக்கம், பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
போட்டிகளுக்கான நடுவா்களாக நீலமேகம், சிசம் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி முதல்வா் சதீஷ், இயக்குநா் கிருத்திகா ஒருங்கிணைப்பாளா்கள் பொன்னி தேவி, சுதா, ஆலோசகா்கள் வழக்குரைஞா் முருகன், பட்டய கணக்காளா் பாலமுருகன், பிரபாகரன் ஆகியோா் இருந்தனா்.