அரசு சட்டக் கல்லூரிகளில் பேராசிரியர் பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு!
கேரள நக்சல் இயக்கத்தின் கடைசி தலைவன் தமிழகத்தில் கைது
கேரள நக்சல் இயக்கத்தின் கடைசி தலைவன் தமிழகத்தில் கைது செய்யப்பட்டார்.
கேரளத்தில் செயல்பட்டு வந்த நக்சல் இயக்கத்தின் தலைவன் சந்தோஷ் குமார் (45) தமிழகத்தில் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்ததன் அடிப்படையில், கேரள மாநில நக்சல் தடுப்பு பிரிவு அதிகாரிகளும் தமிழக உளவுத்துறை காவல்துறையினரும் இணைந்து நக்சல் சந்தோஷின் நடவடிக்கைகளைத் தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.
இந்நிலையில், தமிழகத்தின் ஒசூர் பகுதியில் மறைந்திருந்த நக்சல் சந்தோஷை தமிழக காவல்துறையின் உதவியுடன் கேரள மாநில நக்சல் தடுப்பு பிரிவு காவல்துறை கைது செய்தது. இதன்மூலம், கேரளத்தில் செயல்பட்டு வந்த நக்சல்களின் கடைசித் தலைவனும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதையும் படிக்க:தொடரும் அட்டூழியம்... தமிழக மீனவர்கள் 32 பேரை கைது செய்த இலங்கை கடற்படை!
தமிழக - கேரள எல்லைக்கு அருகே காவல்துறையினர் மீது தாக்குதல், வனச்சரக அலுவலகத்தின் மீது தாக்குதல், பாலக்காட்டில் தனியார் உணவகம், கல்குவாரிகள் மீது தாக்குதல் என பல்வேறான வன்முறை செயல்களில் வயநாடு, மலப்புரம், கண்ணுார், பாலக்காடு வனப்பகுதிகளில் ஊடுருவியுள்ள நக்சலைட்டுகள் தொடர்ந்து ஈடுபட்டு வந்தனர். இந்த இயக்கத்தின் கும்பலுக்கு தமிழகத்தைச் சேர்ந்த சிலர் ஆதரவளிப்பதும் விசாரணை தெரிய வந்தது.
இந்த நக்சல் இயக்கத்தின் அனைத்து தலைவர்களும் கைது செய்யப்பட்ட நிலையில், சந்தோஷ் மட்டும் தமிழகத்துக்குள் பதுங்கியிருப்பதாக கேரள நக்சல் தடுப்புப் பிரிவு காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. நாட்டின் இறையாண்மைக்கு எதிராக செயல்பட்டு வந்த சந்தோஷை பற்றி தகவல் அளித்தால், ரூ. 2 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என்று தேசிய புலனாய்வு அமைப்பு (NIA) அறிவித்திருந்தது.
2014-ல் வீட்டைவிட்டு வெளியேறிய சந்தோஷ், நக்சல் இயக்கத்தில் சேர்ந்ததுடன், சமீபத்தில் கைது செய்யப்பட்ட நக்சல் இயக்கத் தலைவர்களான மொய்தீன், சோமன் இருவருடனும் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்.