ராமேசுவரம் மீனவா்களை மீட்க வேண்டும்: மத்திய அமைச்சருக்கு அண்ணாமலை கடிதம்
கடின உழைப்பு, கடவுள் நம்பிக்கை: நடிகை மணிமேகலையின் புதிய முயற்சி!
சின்ன திரை நடிகை மணிமேகலை தனது வாழ்கையில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளார்.
விஜய் தொலைக்காட்சியில் பணியாற்றிவந்த அவர், தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியின் நிகழ்ச்சித் தொகுப்பாளராகத் தனது பயணத்தைத் தொடங்கியுள்ளார்.
சின்ன திரை தொகுப்பாளர்களில் பலரால் அறியப்படுபவர் மணிமேகலை. சன் தொலைக்காட்சியின் அரைமணிநேர நேரலை நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி, சின்ன திரையில் தனது பயணத்தை தொடங்கினார்.
அதில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளரானார். குறிப்பாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாகப் பங்கேற்றது ரசிகர்கள் பலரைப் பெற்றுத்தந்தது.
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ஆண் கலைஞர்களில் நடிகர் புகழ் முக்கிய இடம் பெற்றுள்ளதைப் போல, பெண்களில் மணிமேகலை முக்கிய நபராக விளங்கினார். அவரால் அந்நிகழ்ச்சிக்கு கூடிய ரசிகர்களும் அதிகம்.
இதனிடையே குக்வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக நடிகை மணிமேகலை அறிவித்தது சின்ன திரையில் விவாதத்தை ஏற்படுத்தியது. அவரின் இந்த முடிவுக்கு தொகுப்பாளர் பிரியங்காவே காரணம் எனக் கூறப்பட்டது. இந்த விவகாரத்தில் பிரபலங்கள் பலரும் மணிமேகலைக்கு எதிராக விடியோக்களை வெளியிட்ட நிலையில், ரசிகர்கள் பலரும் மணிமேகலைக்கு ஆதரவாகவே கருத்துகளைப் பதிவிட்டுவந்தனர்.
இந்நிலையில், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தனது புதிய பயணத்தை மணிமேகலை தொடங்கியுள்ளார். ஜீ தமிழில் ஒளிபரப்பாகவுள்ள டான்ஸ் ஜோடி டான்ஸ் என்ற பிரமாண்ட நடன நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவுள்ளார். அவருடன் நடிகர் விஜே விஜய்-யும் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குகிறார்.
இந்நிகழ்ச்சியின் படப்பிடிப்புதளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களைப் பகிர்ந்து ரசிகர்களுக்கு இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
அதில் ''எனது தொழிலில் புதிய அத்தியாயம். ஜீ தமிழ் தொலைக்காட்சியின் டான்ஸ் ஜோடி டான்ஸ் உருவாகிவருகிறது. உங்கள் அனைத்து ஆசிர்வாதங்களும் தேவை. என்றும் அன்புடன்'' எனப் பதிவிட்டுள்ளார்.
மேலும், ''கடினமாக உழையுங்கள் கடவுளை நம்புங்கள்'' எனப் பதிவிட்டுள்ளார். அவரின் இந்தப் பதிவுக்கு ரசிகர்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.