போப் பிரான்சிஸுக்கு ரத்த மாற்று சிகிச்சை
போப் பிரான்சிஸுக்கு ரத்த மாற்று சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாகவும், ஆக்சிஜன் உதவியுடன் தற்போது சீராக சுவாசித்துவருவதாகவும் வாடிகன் தெரிவித்துள்ளது.
அத்துடன் நேற்று இரவு அவர் சுமூகமான தூக்கத்தைக் கொண்டிருந்ததாகவும் வாடிகன் குறிப்பிட்டுள்ளது.
கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸ் (88), சுவாசக் கோளாறு காரணமாக பிப். 14ஆம் தேதி ரோம் நகரிலுள்ள கெமிளி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து 9 நாள்களாக மருத்துவமனையில் இருந்தவாறு சிகிச்சை பெற்று வருகிறார்.
அவருக்கு, சமீபத்தில் சுவாசக்குழாய் அழற்சி (ப்ரொன்சிடிஸ்) நோயிக்கான சிகிச்சையளிக்கப்பட்டதாக வாடிகன் தெரிவித்திருந்தது.
எனினும் நுரையீரல் கடுமையாக பாதிக்கப்பட்டதால், நிம்மோனியா தொற்று உறுதி செய்யப்பட்டது. நுரையீரலின் ஒரு பகுதி பல ஆண்டுகளுக்கு முன்பே அகற்றப்பட்டுவிட்ட நிலையில், தற்போது நோயின் தீவிரம் அதிகரித்துள்ளதாக செய்திகள் வெளியாகின.
இதனிடையே அவருக்கு ரத்தம் உறைதலுக்குத் தேவையான ரத்தத்தட்டுகளின் எண்ணிக்கை குறைந்ததால், ரத்த மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக வாடிகன் செய்தித்தொடர்பாளர் மேட்டியோ புரூனி தெரிவித்துள்ளார்.
தற்போது அவருக்கு ஆக்சிஜன் உதவியுடன் சீராக சுவாசித்துவருவதாகவும், அவரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் கூறியதையும் குறிப்பிட்டார்.