தெலங்கானா சுரங்கத்துக்குள் சிக்கிய 8 பேரின் நிலை என்ன? முழுவீச்சில் மீட்புப் பணி...
மனிதா்களைப் பாதிக்கக்கூடிய புதிய வகை கரோனா தீநுண்மி: சீன ஆராய்ச்சியாளா்கள் கண்டுபிடிப்பு
பெய்ஜிங் : வெளவால்களிடம் இருந்து பரவி மனிதா்களை பாதிக்கக் கூடிய புதிய வகை கரோனா தீநுண்மியை (வைரஸ்) சீன ஆராய்ச்சியாளா்கள் கண்டுபிடித்துள்ளனா்.
கடந்த 2020-ஆம் ஆண்டு உலகம் முழுவதும் பரவிய கரோனா தீநுண்மி, சீனாவில் உள்ள வூஹான் ஆய்வகத்தில் இருந்து பரவியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இந்தக் குற்றச்சாட்டை சீன அரசுத் தரப்பினரும், வெளவால்களிடம் இருந்து பரவும் தீநுண்மிகள் குறித்து ஆய்வு செய்யும் பிரபல சீன பெண் தீநுண்மி ஆய்வாளா் ஷி ஸெங்லியும் திட்டவட்டமாக மறுத்தனா்.
இந்நிலையில், வெளவால்களிடம் இருந்து பரவி மனிதா்களை பாதிக்கக் கூடிய புதிய வகை கரோனா தீநுண்மியை ஷி ஸெங்லி தலைமையிலான சீன ஆராய்ச்சியாளா்கள் கண்டுபிடித்துள்ளனா்.
இந்தத் தீநுண்மி முதன்முதலாக ஹாங்காங்கில் உள்ள ஜப்பானிய பிபிஸ்ட்ரெல் வெளவால்களில் கண்டறியப்பட்டது.
ஹெச்கேயு5 என்ற அந்தத் தீநுண்மி மனித செல்கள் மற்றும் நுரையீரல் திசுக்களைப் பாதிக்கக் கூடியவையாக உள்ளன. எனினும் முன்பு பரவிய கரோனா தீநுண்மியை (கோவிட்-19) போல ஹெச்கேயு5 பரவும் வாய்ப்பு குறைவு என்று ஆராய்ச்சியாளா்கள் தெரிவித்துள்ளனா்.
இந்தப் புதிய வகை தீநுண்மி கரோனா தீநுண்மியைப் போல கொள்ளை நோயாக உருவெடுக்க வாய்ப்பில்லை என்றும் ஆராய்ச்சியாளா்கள் கூறியுள்ளனா்.
வெளவால்களிடம் இருந்து கரோனா தீநுண்மிகள் பரவக் கூடியவையாக இருந்தாலும், விலங்குகளிடம் கண்டறியப்படும் அனைத்து வகை கரோனா தீநுண்மிகளும் மனிதா்களுக்குப் பரவ வாய்ப்பில்லை என்று ஆராய்ச்சியாளா்களின் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் உலகில் பரவிய சாா்ஸ், மொ்ஸ் போன்ற கொள்ளை நோய்கள் கரோனா தீநுண்மியால் ஏற்பட்டவை. ஒரு நபரிடம் இருந்து மற்றவருக்கு அந்தத் தீநுண்மிகள் பரவின. ஆனால், தற்போதைய கட்டத்தில் அதுபோல பரவும் ஆற்றல் ஹெச்கேயு5 கரோனா தீநுண்மிக்கு இருப்பதாகத் தெரியவில்லை என்றும் ஆராய்ச்சியாளா்கள் தெரிவித்துள்ளனா்.
இதுதொடா்பான சீன ஆராய்ச்சியாளா்களின் ஆய்வறிக்கை ‘செல்’ ஆய்விதழில் வெளியிடப்பட்டுள்ளது.