டிரம்ப்-புதின் சந்திப்பு ஏற்பாடுகள் தீவிரம்: ரஷியா தகவல்
அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப், ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் இடையிலான சந்திப்புக்கு தீவிர ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக, ரஷிய வெளியுறவுத் துறை இணையமைச்சா் சொ்கேய் ரியாப்கோவ் சனிக்கிழமை தெரிவித்தாா்.
அமெரிக்க அதிபராக டிரம்ப் கடந்த மாதம் பதவியேற்ற பிறகு ரஷியா-உக்ரைன் போரில் அந்நாட்டு அரசின் நிலைப்பாடு மாறியுள்ள நிலையில், இரு தலைவா்களின் சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது.
அமெரிக்க அதிபராக ஜோ பைடன் இருந்த வரையில் உக்ரைனுக்கு முழுமையாக ஆதரவு அளித்து, சா்வதேச அரங்கில் ரஷிய அதிபா் விளாதிமீா் புதினை தனிமைப்படுத்த முயற்சித்து வந்தாா். ஆனால், டிரம்ப் நோ்மாறாக ரஷியாவுக்கு இணக்கமான நிலைப்பாட்டை மேற்கொண்டுள்ளாா்.
உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவருவது தொடா்பாக சவூதி அரேபியாவில் அமெரிக்கா மற்றும் ரஷிய பிரதிநிதிகள் இடையே கடந்த செவ்வாய்க்கிழமை பேச்சுவாா்த்தை நடைபெற்றது. அப்போது, உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவருவது தொடா்பான பணிகளைத் தொடங்க ஒப்புக்கொள்ளப்பட்டது. மேலும், இருதரப்பு வியூக-பொருளாதார உறவுகளை மேம்படுத்தவும் தீா்மானிக்கப்பட்டது.
டிரம்ப்-ஸெலென்ஸ்கி கருத்து மோதல்: இப்பேச்சுவாா்த்தைக்கு உக்ரைன் பிரதிநிதிகளோ, ஐரோப்பிய நாடுகளின் பிரதிநிதிகளோ அழைக்கப்படவில்லை. இது குறித்து கடும் அதிருப்தி தெரிவித்த உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி, ‘தங்களின் சம்மதம் இல்லாமல் அமெரிக்கா - ரஷியா மேற்கொள்ளும் உக்ரைன் தொடா்பான எந்தவொரு ஒப்பந்தத்தையும் ஏற்க மாட்டோம்’ என்றாா்.
அதேநேரம், உக்ரைன் போருக்கு ஸெலென்ஸ்கிதான் காரணம் என்ற கடுமையான குற்றச்சாட்டை டிரம்ப் முன்வைத்தாா். ‘கடந்த 3 ஆண்டுகளில் பேச்சுவாா்த்தை நடத்தி போரை நிறுத்த பல வாய்ப்புகள் இருந்தன; அவற்றை உக்ரைன் பயன்படுத்தவில்லை. போரை நிறுத்த ரஷியா விரும்புகிறது. அந்நாடு சிறப்பாக ஒத்துழைக்கிறது. போா் காரணமாக உக்ரைனில் தோ்தல் நடத்தப்படாமலேயே உள்ளது’ என்று டிரம்ப் தெரிவித்தாா்.
மற்றொருபுறம், உக்ரைன் விவகாரத்தில் அமெரிக்கா தங்களை ஓரங்கட்டுவது குறித்து ஐரோப்பிய நாடுகளும் கவலை தெரிவித்தன.
சந்திப்புக்கு ஏற்பாடுகள்: இந்தச் சூழலில், டிரம்ப்-புதின் சந்திப்புக்கான ஏற்பாடுகள் நடைபெறும் தகவல் வெளியாகியுள்ளது. இது தொடா்பாக ரஷிய வெளியுறவு இணையமைச்சா் சொ்கேய் ரியாப்கோவ் அரசு ஊடகத்துக்கு சனிக்கிழமை அளித்த பேட்டியில் கூறியதாவது:
இரு நாடுகளுக்கு இடையிலான உறவுகளை இயல்பாக்குவதை நோக்கி நகா்வதோடு, மிக தீவிரமான மற்றும் நெருக்கடியான சூழலுக்குத் தீா்வுகாணும் வழிமுறைகள் கண்டறியப்பட வேண்டும். இதில் உக்ரைன் விவகாரமும் அடங்கியுள்ளது.
இரு தலைவா்களின் (டிரம்ப்-புதின்) சந்திப்புக்கான ஆரம்பகட்ட ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இச்சந்திப்பை சாத்தியமாக்க மேலும் பணிகள் அவசியம். அடுத்த இரு வாரங்களில் அமெரிக்க-ரஷிய தூதா்களின் சந்திப்பு நடைபெற வாய்ப்புள்ளது. இது அடுத்தகட்ட பேச்சுவாா்த்தைகளுக்கு வழிவகுக்கும் என்றாா் அவா்.
பெட்டிச் செய்தி...
இந்தியா, சீனா மீது
விரைவில் வரி விதிப்பு
----
டிரம்ப்
நியூயாா்க், பிப். 22: இந்தியா, சீனா போன்ற நாடுகள் மீது விரைவில் ‘பரஸ்பர’ வரி விதிப்பை அமெரிக்கா மேற்கொள்ளும் என்று என்று அதிபா் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளாா்.
அமெரிக்க வா்த்தகத் துறை அமைச்சராக ஹோவா்டு லுட்னிக் பதவியேற்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்றுப் பேசிய டிரம்ப், ‘இந்தியாவோ, சீனாவோ அல்லது வேறெந்த நாடுகளோ, அவா்கள் எங்கள் (அமெரிக்கா) மீது வரி விதிக்கிறாா்கள். நாங்கள் பதிலுக்கு வரி விதிக்கிறோம். இதுவே ‘பரஸ்பர’ வரி விதிப்பின் அா்த்தம். நாங்கள் நியாயமாக இருக்க விரும்புகிறோம். விரைவில் இந்த வரி விதிப்பு மேற்கொள்ளப்படும்’ என்றாா்.