செய்திகள் :

``அந்தப் பாவத்தை இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் செய்யமாட்டான்” – கடலூரில் முதல்வர் ஸ்டாலின்

post image
தமிழக முதல்வர் ஸ்டாலின் இரண்டு நாள் கள ஆய்வுப் பணிக்காக நேற்றும், இன்றும் கடலூர் மாவட்டத்திற்கு வருகை தந்திருந்தார். இன்று வேப்பூர் திருப்பெயரில் நடைபெற்ற பெற்றோர்களைக் கொண்டாடுவோம்’ நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் `அப்பா’ (Anaithu Palli Parents Teachers Association) என்ற செயலியை வெளியிட்டார்.

தொடர்ந்து பேசிய அவர், ` தமிழக அரசு செயல்படுத்தி வரும் பல்வேறு திட்டங்கள் மூலமாக பள்ளிக் கல்வி செழுமை பெற்றுவருகிறது. இப்படி தமிழ்நாட்டின் கல்வித் தரத்தை பொருளாதார ஆய்வறிக்கையில் பாராட்டியிருக்கிறது ஒன்றிய அரசு. ஒரு பக்கம் நம்மை பாராட்டும் மத்திய அரசு, மறுபக்கம் நமக்குத் தரவேண்டிய நிதியைத் தர மறுக்கிறது. ரூ.2,152 கோடி தராமல் நிறுத்தி வைத்திருக்கின்றனர்.

இது 43 லட்சம் பள்ளிக் குழந்தைகள் நலனுக்காக செலவு செய்யவேண்டிய தொகை. தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொள்ளவில்லை என்று தமிழ்நாட்டுக்குத் தரவேண்டிய நிதியைத் தர மறுக்கிறார்கள். தேசிய கல்விக் கொள்கை என்பது தமிழுக்கு வேட்டு வைக்கக்கூடிய கொள்கை. நம்முடைய குழந்தைகளின் எதிர்காலத்துக்கு அது ஆபத்து. எந்த மொழிக்கும் நாம் எதிரியில்லை. அதேசமயம் அதைத் திணிக்க நினைத்தால் நாம் எதிர்ப்போம்.  இந்தியைத் திணிக்கிறார்கள் என்ற ஒரே காரணத்துக்காக மட்டும் தேசிய கல்விக் கொள்கையை நாம் எதிர்க்கவில்லை. அது மாணவர்களை பள்ளிகளில் இருந்து விரட்டுகின்ற கொள்கை என்பதால் எதிர்க்கிறோம். ஒன்றிய அரசின் கொள்கையால் என்னென்ன பாதிப்பு ஏற்படும் என்பதில் சிலவற்றை மட்டும் சொல்கிறேன்.

நாம் கடைப்பிடித்து வரும் சமூகநீதிக் கொள்கையை இது நீர்த்துப் போகச் செய்யும். தற்போது பட்டியலின, பழங்குடி மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு கல்வி உதவித் தொகையை வழங்குகிறோம். ஆனால் ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கை திட்டம் அதை மறுக்கிறது. 3, 5 மற்றும் 8-ம் வகுப்புகளில் பொதுத்தேர்வு வைத்து பிள்ளைகளை வடிகட்டப் பார்க்கிறார்கள்.  9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அகில இந்தியத் தேர்வுபோல செமஸ்டர் தேர்வு முறையைக்கொண்டு வர நினைக்கிறார்கள். உங்கள் மகனோ அல்லது மகளோ 12-ம் வகுப்பு முடித்துவிட்டு, விரும்பிய கல்லூரிகளில் விரும்பிய பாடத்தில் உடனே சேர முடியாது. இப்போது மருத்துவக் கல்லூரிகளில் சேர்வதற்கு நீட் தேர்வு வைப்பதைப்போல, பொறியியல் மற்றும் கலைக் கல்லூரிகளுக்கும் தேர்வு வைத்துதான் எடுப்பார்கள்.

அந்தத் தேர்வுகளை கல்லூரிகள் நடத்தாது. தேசிய அளவில் தேர்வு ஏஜென்சிதான் நடத்தும். 6-ம் வகுப்பு முதல் தொழிற்கல்வி என்ற பெயரில் துணைக்கல்வி திட்டத்தை அறிமுகப்படுத்தப் போகிறார்கள். குலத்தொழில், சாதித்தொழில் என்று மனுநீதி சொல்லும் அநீதியைத் தொடராமல் படித்து முன்னேற நினைப்பவர்களை, மீண்டும் அதை நோக்கி தள்ளப் பார்க்கிறார்கள். இதற்கு பயந்துதான் தேசிய கல்விக் கொள்கையை ஏற்க மாட்டோம் என்பதில் உறுதியாக இருக்கிறோம்.

இந்த திட்டத்தில் கையெழுத்துப் போட்டால்தான் ரூ.2,000 கோடி கிடைக்கும் என்கிறார்கள். ஆனால் ரூ.10,000 கோடி கிடைக்கும் என்றாலும் நாங்கள் கையெழுத்து போட மாட்டோம். ரூ.2,000 கோடிக்கு கையெழுத்து போட்டால் என்ன ஆகும் ? நமது தமிழ்ச் சமூகம் 2,000 ஆண்டுகள் பின்னோக்கிச் சென்றுவிடும். அந்தப் பாவத்தை இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஒருபோதும் செய்ய மாட்டான். உங்கள் குழந்தைகளின் படிப்பு வளர வேண்டுமா அல்லது, மூன்றாவது மொழி திணிக்கப்பட்டு ஒவ்வொரு வகுப்பிலும் படிப்பு தடைப்பட வேண்டுமா ? எந்த மொழிக்கும் நாம் எதிரியில்லை. இந்தி மொழிக்கும் நாம் எதிரியில்லை. இந்தி மொழி படிக்க நினைப்பவர்கள் இந்தி பிரசார சபாவிலோ அல்லது கேந்திர வித்யாலயா பள்ளிகளுக்கோ சென்று படிப்பதை ஒருபோதும் தடுக்கவில்லை.

தேசிய கல்விக் கொள்கை - 2020

தடுக்கப்போவதும் இல்லை. ஆனால் இந்தியைத் திணிக்க நினைத்தால், `தமிழர் என்றோர் இனமுண்டு தனியே அவருக்கோர் குணமுண்டு' என்பதைத் தமிழ்நாடு காட்டிவிடும். இருமொழிக் கொள்கையால் தமிழ்நாடு மாணவர்களின் திறமை எந்த அளவுக்கு இருக்கிறது என்று, உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள் நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள். அனைத்து மாநிலங்களும் தேசிய கல்விக் கொள்கையையும், மும்மொழிக் கொள்கையையும் ஏற்றுக் கொள்ளும்போது தமிழ்நாடு மட்டும் ஏன் ஏற்றுக்கொள்ளவில்லை என்று ஒன்றிய கல்வியமைச்சர் கேட்கிறார். அவருக்குக் காரணத்தை நான் சொல்கிறேன். இது தமிழ்நாடு. தமிழை எங்கள் உயிரைவிட மேலாக மதிக்கின்றவர்கள் நாங்கள். 

எங்கள் மொழியை அழிக்க எந்த ஆதிக்க மொழி நினைத்தாலும் அதை அனுமதிக்க மாட்டோம். தமிழ் மொழியை காக்கும் அரணாக தி.மு.க இருக்கிறது. இந்தியாவில் கடந்த 75 ஆண்டுகளில் சுமார் 52 மொழிகள் அழிவின் விளிம்புக்குச் சென்றுவிட்டன. இந்தி பெஸ்ட் என்ற மாநிலங்களில் மட்டும் கிட்டத்தட்ட 25 மொழிகள் அழிந்து விட்டன. இந்தி ஆதிக்கத்திற்கு பலியான மாநிலங்கள் இப்போதுதான் விழுப்புணர்வு அடைந்துவருகின்றன. அப்படி அவை விழிப்புணர்வு அடைவதற்குக் காரணம் தமிழ்நாடுதான். நிதியைக் கொடுங்கள் என்று நாம் கேட்டால், பிரதமர் தமிழ் மீது அக்கறை கொண்டவர் என்கிறார் அமைச்சர்.

சமஸ்கிருத மொழி வளர்ச்சிக்காக ஒன்றிய அரசு ஒதுக்கிய தொகை ரூ.1,488 கோடி. அந்த மொழியைப் பேசுபவர்கள் சில ஆயிரம் பேர் இருக்கலாம். ஆனால் 8 கோடி மக்கள் பேசும் தமிழ் மொழிக்கு இவர்கள் ஒதுக்கிய தொகை வெறும் 74 கோடி ரூபாய். இதுதான் இவர்கள் தமிழை வளர்க்கும் லட்சணமா ? தமிழக கல்வித்துறைக்கு ஒன்றிய அரசு நிதி வழங்காவிட்டாலும், நாங்கள் தொடர்ந்து எங்கள் செயல்திட்டங்களை செயல்படுத்துவோம் என்பது உறுதி. திராவிடக் கொள்கையால்தான் நாங்கள்  இத்தனை பெரிய வளர்ச்சியை பெற்றிருக்கிறோம். நமது குழந்தைகள் மனவலிமை கொண்டவர்களாக வளர வேண்டும். தனித்தன்மை கொண்டவர்களாக அவர்களை உயர்த்த வேண்டும். அதற்காகத்தான் நான் முதல்வன் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது” என்றார்.

``காளியம்மாள் கட்சியிலிருந்து வெளியேற முழு சுதந்திரம் இருக்கிறது" - சீமான் ஓப்பன் டாக்

தமிழ்நாட்டில் இன்று நாம் தமிழர் கட்சி என்று சொன்னால் சீமானுக்கு அடுத்தபடியாக மக்கள் மத்தியில் பரவலாக அறியப்படும் முகங்களில், கட்சியின் மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் காளியம்மாள் முக்கியமானவர். இவ்வாறிர... மேலும் பார்க்க

"2026 சட்டமன்றத் தேர்தல் சிரமமாக இருக்கும்..." - திமுகவுக்கு பெ.சண்முகம் கொடுக்கும் மெசேஜ் என்ன?

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோவை ராஜவீதி பகுதியில் அகில இந்திய மாநாட்டு நிதியளிப்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அந்தக் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் பேசுகையில், “மத்திய அமைச்ச... மேலும் பார்க்க

NEP: "நீங்கள் வந்து வளர்ப்பீர்கள் எனத் தமிழ் கையேந்தி நிற்கவில்லை" - மத்திய அரசைச் சாடிய முதல்வர்

தமிழக முதல்வர் ஸ்டாலின் இரண்டு நாள் கள ஆய்வுப் பணிக்காக நேற்றும், இன்றும் கடலூர் மாவட்டத்திற்கு வருகை தந்திருக்கிறார். கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மேடையில் ரூ.1,476 கோடி... மேலும் பார்க்க

FBI-ன் இயக்குநர்; இந்திய வம்சாவளி; பகவத் கீதை வைத்து பதவிப் பிரமாணம் - யார் இந்த Kash Patel?

அமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்பான FBI-யின் இயக்குநராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த காஷ் படேலை (kash-patel) ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நியமனம் செய்திருக்கிறார்.அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பதவ... மேலும் பார்க்க

டெல்லி ரயில் நிலைய கூட்ட நெரிசல் விவகாரம்: "வீடியோக்களை நீக்குக" - எக்ஸ் தளத்துக்கு ரயில்வே நோட்டீஸ்

புது டெல்லி ரயில்வே நிலையத்தில் ஏற்பட்ட நெருக்கடி தொடர்பாக வெளியான 285 வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் இருந்து நீக்க வேண்டும் என மத்திய ரயில்வே அமைச்சகம் கோரியுள்ளது. எக்ஸ் தளத்தில் இக்கோரிக்கை வைத்து... மேலும் பார்க்க