மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வைரம் மற்றும் தங்க துறை 8.5% பங்களிக்கும்: அவினாஷ் குப்தா
புதுதில்லி : இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வைரம் மற்றும் தங்கம் ஏற்கனவே 7.5% பங்களிப்பை வழங்கி வரும் நிலையில், தங்கத்தின் விலை அதிகரித்து வருவதால், இது 8.5% எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றார் ஜெம் அண்டு ஜூவல்லரி கவுன்சில் துணைத் தலைவரான அவினாஷ் குப்தா.
வட இந்தியாவின் நகை வர்த்தகத்திற்கான முக்கிய மையமாக தில்லி உருவெடுத்துள்ளது. இது நாடு முழுவதும் உள்ள நகை வியாபாரிகளுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது. இதனிடையில் பிரதமரின் விக்ஸித் பாரத் உடன் ஒத்துப்போகும் வகையில், வைரம் மற்றும் தங்க தொழில் செல்வத்தை வளர்க்கும் என்றனர்.
தில்லி ஜுவல்லரி & ஜெம் ஃபேர் சிக்னேச்சரின் முதல் பதிப்பு பாரத் மண்டபத்தில் தொடங்கியது. இந்த நிகழ்வில், சுமார் 120 பிரீமியம் கண்காட்சியாளர்கள் பங்கேற்றனர். 2035ல் இந்த துறையில் 225 முதல் 245 பில்லியன் டாலர் மதிப்பீடு எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டின் முன்னணி பிசினஸ்-டு-பிசினஸ் நிகழ்வு ஏற்பாட்டாளரான இன்ஃபார்மா மார்க்கெட்ஸ், இந்தியாவில் கண்காட்சியாளர்கள் தங்கள் சமீபத்திய வடிவமைப்புகளை வெளியிடவும், பிரீமியம் பிரிவில் பிராண்ட் நிலைப்பாட்டை வலுப்படுத்தவும், நகைத் துறையில் முக்கிய பங்குதாரர்களுடன் ஈடுபடவும் ஒரு முக்கிய தளத்தை வழங்கும் நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளதாக தெரிவித்தது.
இந்தியாவின் மிகச்சிறந்த நகை கைவினைத்திறனை எடுத்துக்காட்டும் இந்த மூன்று நாள் நிகழ்வானது, சுமார் 1 லட்சம் சதுர அடி பரப்பளவில் 8,000க்கும் மேற்பட்ட வர்த்தக பார்வையாளர்களை ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க: இணைய வழியில் புதிய சேமிப்புக் கணக்கு: ஐஓபி அறிமுகம்