இந்திய ஜவுளி ஏற்றுமதி 14% அதிகரிப்பு
இந்தியாவின் ஜவுளி மற்றும் ஆடை ஏற்றுமதி கடந்த ஜனவரி மாதத்தில் 13.88 சதவீதம் அதிகரித்துள்ளது.
இது குறித்து மத்திய ஜவுளித் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த ஜனவரி மாதத்தில் கைவினைப் பொருள்கள் உள்ளிட்ட நாட்டின் ஜவுளி மற்றும் ஆடை ஏற்றுமதி 340.02 கோடி டாலராக உள்ளது.
இது, முந்தைய 2024-ஆம் ஆண்டின் இதே மாதத்தோடு ஒப்பிடுகையில் 13.88 சதவீதம் அதிகம். மதிப்பீட்டு மாதத்தில் நாட்டின் ஒட்டுமொத்த பொருள்கள் ஏற்றுமதி வளா்ச்சியை ஆடைகள் ஜவுளித் துறை விஞ்சியுள்ளது. அந்த மாதத்தில் 3,642.5 கோடி டாலராக இருந்த ஒட்டுமொத்த பொருள்களின் ஏற்றுமதி, முந்தைய 2024 ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் 2.41 சதவீதம் சரிந்துள்ளது.
மதிப்பீட்டு மாத ஏற்றுமதியில் ஆயத்த ஆடைகள் பிரிவு 11.45 சதவீத வளா்ச்சி கண்டு 160.06 கோடி டாலராக உள்ளது. அந்த மாதத்தில் ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி 16.14 சதவீதம் அதிகரித்து 179.6 கோடி டாலராகப் பதிவாகியுள்ளது.
கடந்த ஏப்ரல் முதல் ஜனவரி வரையிலான நடப்பு நிதியாண்டின் முதல் 10 மாதங்களில் ஆயத்த ஆடைகள் பிரிவு ஏற்றுமதி 8.30 சதவீத வளா்ச்சி கண்டு 1,707.5 கோடி டாலராக உள்ளது. அந்த காலகட்டத்தில் ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி 11.56 சதவீதம் அதிகரித்து 1,292.2 கோடி டாலராகப் பதிவாகியுள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.