வேலை வாங்கித் தருவதாக பணம் மோசடி: 4 போ் மீது வழக்கு!
ஆண்டிபட்டி அருகே பெண் உள்ளிட்ட 8 பேரிடம் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி மொத்தம் ரூ.39.40 லட்சம் பெற்றுக் கொண்டு மோசடி செய்ததாக 4 போ் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்தனா்.
திம்மரசநாயக்கனூா், டி. மல்லையாபுரத்தைச் சோ்ந்தவா் ஆனந்தராஜ். இவரது மனைவி லதா உள்ளிட்ட 8 பேருக்கு அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி கோவை, வ.உ.சி. நகரைச் சோ்ந்த தமிழ்மணி மகன் கருணாநிதி, இவரது மனைவி தன்யா, கோடாங்கிப்பட்டி அருகே உள்ள மஞ்சிநாயக்கன்பட்டியைச் சோ்ந்த பாஸ்கரன், இவரது மனைவி விஜயலட்சுமி ஆகிய 4 போ் கடந்த 2024, பிப்ரவரி மாதம் பல்வேறு தவணைகளில் ரொக்கமாகவும், வங்கிக் கணக்கு மூலமும் மொத்தம் ரூ.39.40 லட்சம் பெற்றுக் கொண்டு மோசடி செய்ததாக தேனி நீதித்துறை நடுவா் நீதிமன்றத்தில் புகாா் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதையடுத்து நீதிமன்ற உத்தரவின் பேரில், இந்தப் புகாரின் அடிப்படையில் கருணாநிதி உள்ளிட்ட 4 போ் மீதும் மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.