விராட் கோலி ஃபார்முக்குத் திரும்ப சிரமப்படுவது ஏன்? முன்னாள் இந்திய கேப்டன் பதில்!
விராட் கோலியின் ஃபார்ம் குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அனில் கும்ப்ளே பேசியுள்ளார்.
கடந்த 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பைத் தொடருக்குப் பிறகு, விராட் கோலி இதுவரை விளையாடியுள்ள 6 ஒருநாள் போட்டிகளில் 137 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். 6 போட்டிகளில் அவர் ஒரே ஒரு அரைசதம் மட்டுமே எடுத்துள்ளார்.
சாம்பியன்ஸ் டிராபியில் வங்கதேசத்துக்கு எதிரான முதல் போட்டியில் விராட் கோலி தனது ரன் கணக்கைத் துவங்குவதற்கு சிரமப்பட்டார். நேற்றையப் போட்டியில் அவர் 38 பந்துகளில் 22 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இதையும் படிக்க: முகமது ஷமிக்கு ரிக்கி பாண்டிங் புகழாரம்!
ஃபார்முக்குத் திரும்ப சிரமப்படுவது ஏன்?
விராட் கோலி தனக்குத் தானே அழுத்தத்தை ஏற்படுத்திக் கொள்கிறார் எனவும், அவர் மனதளவில் கவலையின்றி இருக்க வேண்டும் எனவும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அனில் கும்ப்ளே தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: விராட் கோலி மிகவும் கஷ்டப்பட்டு ரன்கள் எடுக்க முயற்சிப்பதாக நினைக்கிறேன். அவர் விளையாடிய இன்னிங்ஸைப் பார்த்தால், அவர் ரன்கள் எடுக்க சிரமப்படுவது தெரியும். ஆனால், அவர் ரன்கள் எடுப்பது குறித்து கவலையடையக் கூடாது. ரோஹித் சர்மா களமிறங்கி கவலையின்றி சுதந்திரமாக விளையாடுகிறார். ஏனெனில், அணியில் பேட்டிங் செய்வதற்கு பின்னால் ஃபார்மில் உள்ள நிறைய வீரர்கள் இருக்கிறார்கள் என்பது அவருக்குத் தெரியும். ரோஹித் சர்மாவைப் போன்று விராட் கோலியும் விளையாட வேண்டும்.
இதையும் படிக்க: அதிவேகமாக 200 விக்கெட்டுகள் வீழ்த்தி முகமது ஷமி சாதனை!
அனைத்து வீரர்களும் அவர்களது பயணத்தில் கடினமான காலக் கட்டத்தை கடந்து வருவார்கள். ஆனால், விராட் கோலி விளையாடுவதைப் பார்க்கும்போது, அவருக்கு அவரே அழுத்தத்தை ஏற்படுத்திக் கொள்வதாக நினைக்கிறேன். அந்த மாதிரியான அழுத்தத்தை ஏற்படுத்திக் கொள்ளும்போது, வீரர்கள் ரிலாக்ஸாக விளையாடுவதில்லை என்றார்.