Ranveer Allahbadia: ``இவர் மூளையில் அழுக்கு..." - யூடியூபரை விளாசிய உச்ச நீதிமன்றம்!
India's Got Latent Show என்ற யூடியூப் நிகழ்ச்சியில் யூடியூபர் ரன்வீர் அல்லாபாடியா செய்த சர்ச்சைக்குரிய நகைச்சுவை குறித்த பல்வேறு வழக்குகள் இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தன.
சமய் ரெய்னா என்ற யூடியூபர் நடத்தும் இண்டியா'ஸ் காட் லேடண்ட் ரன்வீர் செய்த நகைச்சுவைக்கு நாடு முழுவதும் எதிர்ப்பலைகள் எழுந்ததை அடுத்து அவர்மீது புகார் அளிக்கப்பட்டது. தன் மீதான அனைத்து புகார்களையும் ஒரே விசாரணையில் கொண்டுவர ரன்வீர் அல்லாபாடியா உச்ச நீதிமன்றத்தை நாடியிருந்தார். அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் அவரை கடுமையாக சாடியுள்ளது.
ரன்வீர் குறித்து, "இது ஆபாசம் இல்லை என்றால் எது ஆபாசம்? நீங்கள் எங்கு வேண்டுமானாலும் எப்போதுவேண்டுமானாலும் உங்கள் அநாகரீகத்தையும் ஒழுக்கக்கேட்டையும் காட்டுவதா." என கடிந்துகொண்டார் நீதிபதி சூர்யா காந்த்.
மேலும் அவரது மனு குறித்து, "வெறும் இரண்டு FIRகள் தான் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஒன்று மும்பையில், மற்றொன்று அசாமில். 100 FIRகள் இருந்தாலும் அவரால் அவரை பாதுகாத்துக்கொள்ள முடியும்" எனத் தெரிவித்தார்.
அத்துடன், "இந்த மாதிரியான நடத்தை கண்டிக்கப்பட வேண்டும். நீங்கள் பிரபலமாக இருப்பதனால் சமூகத்தை எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது. நீங்கள் இப்படி பேசுவதை உலகத்தில் யாராவது ரசிப்பார்களா? இவர் மூளையில் மிகவும் அழுக்கான ஏதோ இருக்கிறது. அது வெளியேற்றப்பட வேண்டும். இவரை ஏன் நாம் பாதுகாக்க வேண்டும்" எனக் கேள்வி எழுப்பினார்.
"நீங்கள் பயன்படுத்திய வார்த்தைக்காக, உங்கள் பெற்றோர் அவமானப்படுவார்கள். மகள்களும் சகோதரிகளும் அவமானப்படுவார்கள். ஒட்டுமொத்த சமூகத்துக்கும் தலைகுனிவு.
உங்களுக்கும் உங்கள் அடியாள்களுக்கும் ஒழுக்கக்கேட்டில் எல்லையே இல்லை. சட்டத்தின் விதிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும்." என்றும்கண்டித்தார் நீதிபதி.
ரன்வீர் அல்லாபாடியாவின் கைதுக்கு உச்ச நீதிமன்றம் விலக்களித்தாலும், வேறு எந்த நிகழ்ச்சியிலும் கலந்துகொள்ளக் கூடாது என அறிவுறுத்தியிருக்கிறது. மேலும் அவரது பாஸ்போர்ட்டை தானே காவல்துறையில் ஒப்படைக்க வேண்டும் என்றும் அனுமதி இல்லாமல் வெளிநாடுகளுக்கு பயணிக்க கூடாது என்றும் கூறியுள்ளது.
அல்லாபாடியா 'பெற்றோர் - உடலுறவு' குறித்து பேசிய நிகழ்ச்சி இணையத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. அவர் தரப்பில் பொது மன்னிப்பு கேட்கப்பட்டுள்ளது.