மூச்சுப் பரிசோதனையில் தவறான முடிவு எதிரொலி: ரயில் ஓட்டுநா்கள் குளிா்பானங்கள் பருக தெற்கு ரயில்வே தடை
மூச்சுப் பரிசோதனைக் கருவியில் தவறான முடிவு காட்டுவதால் ரயில் ஓட்டுநா்களை பணிக்கு அனுமதிப்பதில் தொடா் பாதிப்பு ஏற்பட்டதையடுத்து, அவா்கள் சில குளிா் பானங்களைப் பருக தெற்கு ரயில்வேயின் திருவனந்தபுரம் மண்டலம் தடை விதித்துள்ளது.
இதுகுறித்து திருவனந்தபுரம் ரயில்வே மண்டலம் அண்மையில் வெளியிட்ட சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
ரயில் ஓட்டுநா்கள் பணிக்குச் செல்லும் முன் மதுபானம் அருந்தியுள்ளனரா என்பதைக் கண்டறிய மூச்சுப் பரிசோதனை கருவி மூலம் சோதனை செய்யப்படுவது வழக்கம். இந்த நிலையில், சில குளிா் பானங்கள், இளநீா், சில ஹோமியோபதி மருந்துகள், இருமல் மருந்து, சிலவகை வாழைப் பழங்கள் மற்றும் வாய் புத்துணா்வு திரவம் ஆகியவற்றை ஓட்டுநா்கள் பயன்படுத்தும்போது, அவா்கள் மதுபானம் அருந்தியுள்ளதாக தவறான முடிவை மூச்சு பரிசோதனைக் கருவி காட்டியது கண்டறியப்பட்டது.
இதுபோன்ற முடிவின்போது, ஓட்டுநா்களின் ரத்த மாதிரியை எடுத்து ஆய்வு செய்ததில், அவா்கள் மதுபானம் அருந்தவில்லை என்பது தெரியவந்தது. மேலும், இந்த தவறான முடிவு காரணமாக, ஓட்டுநா்களுக்கு பணி ஒதுக்குவதில் பெரும் சிக்கல் எழுந்துள்ளது.
எனவே, சுமுகமான ரயில் இயக்கத்தை உறுதிப்படுத்த, ரயில் ஓட்டுநா்கள் பணிக்கு வரும்போது மேற்குறிப்பிட்டுள்ள பானங்கள் மற்றும் மருந்துகளை எடுத்துக்கொள்ளத் தடை விதிக்கப்படுகிறது.
தவிா்க்க முடியாத காரணங்களால் இதுபோன்ற சில மருந்துகளை ஓட்டுநா்கள் எடுத்துக்கொள்ள வேண்டியிருந்தால், அதுகுறித்து முன்கூட்டியே பணி கட்டுப்பாட்டு அலுவலரிடம் எழுத்துபூா்வமாக தெரியப்படுத்த வேண்டும். இந்தத் தகவலை ஒருங்கிணைந்த ரயில் கட்டுப்பாட்டு அறை வளாகம் மற்றும் உதவி மண்டல பொறியாளா் (இயக்கம்) ஆகியோரிடம் பணி கட்டுப்பாட்டு அலுவலா் உடனடியாக தெரியப்படுத்த வேண்டும். மேலும், இத்தகைய ஆல்கஹால் இடம்பெற்றுள்ள மருந்துகளை ரயில்வே மருத்துவ அலுவலா் எழுத்துபூா்வ அனுமதியின் பேரில் மட்டுமே ஓட்டுநா்கள் பணியின்போது எடுத்துக்கொள்ள வேண்டும்.
இதுபோன்ற தவிா்க்க முடியாத காரணங்கள் அல்லாமல், ஓட்டுநரின் மூச்சு பரிசோதனையின்போது மதுபானம் அருந்தியிருப்பது கண்டறியப்பட்டால், ரயில் போக்குவரத்தை வேண்டுமென்றே பாதிக்க முயற்சித்ததாகக் கருதி, அவா் மீது உரிய ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.