கடலூர்: `சங்கத்தை மதிக்கவில்லை..!’ – திருநங்கை அடித்துக் கொலை; சக திருநங்கையர் உள்ளிட்ட 6 பேர் கைது!
கடலூர் மாவட்டம், கருவேப்பிலங்குறிச்சி பகுதியில் இருக்கும் காப்புக் காட்டில், உடல் முழுவதும் ரத்தக் காயங்களுடன் திருநங்கை ஒருவரின் சடலம் கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதையடுத்து அந்த உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த கருவேப்பிலங்குறிச்சி போலீஸார், சடலமாக கிடந்தவர் தஞ்சாவூரைச் சேர்ந்த திருநங்கை சங்கவி என்பதை கண்டுபிடித்தனர். மதுப் பழக்கத்திற்கு அடிமையான அவர் விருத்தாசலம் பகுதியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கியிருந்தார்.

இந்த நிலையில்தான் நேற்று மர்மமாக அவர் கொலை செய்யப்பட்டிருக்கிறார். அது குறித்து விசாரணை செய்த போலீஸார், நான்கு திருநங்கையர் உள்ளிட்ட 6 பேரை கைது செய்திருக்கின்றனர். கொலைக்கான காரணம் குறித்துப் பேசிய போலீஸார், ``திருநங்கை சங்கவி அவர்களுக்காக இருக்கும் சங்கத்திற்கு கட்டுப்படாமல் (அமைப்பு) தன்னிச்சையாக செயல்பட்டு வந்திருக்கிறார். அதனால் சில திருங்கையர் அவர் மீது கோபமாக இருந்திருக்கின்றனர்.
இந்த நிலையில்தான் நேற்று முன் தினம் மக்புல் ஷெரீப் என்பவரது வீட்டின் மொட்டை மாடிக்குச் சென்ற சங்கவி, அங்கிருந்து வெளியேறாமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார். அதனால் ஷெரீப், பூக்கடை சேகர் என்பவருக்கு போன் செய்திருக்கிறார். அதையடுத்து சில திருநங்கைகளுடன் அங்கு சென்ற சேகர், சங்கவியை அடித்தே கொன்றிருக்கிறார். அதையடுத்து அவரது சடலத்தை போர்வையில் சுற்றி ஆட்டோவில் வைத்து எடுத்துச் சென்றிருக்கின்றனர்.

ஆட்டோ காப்புக்காட்டுக்கு அருகில் சென்றதும், சங்கவியின் உடலை தூக்கி வீசிவிட்டு அங்கிருந்து தப்பியோடியிருக்கின்றனர். ஆட்டோ ஓட்டுநருக்கு இது எதுவும் தெரியாது என்றாலும், இந்த சம்பவத்தை போலீஸிடம் சொல்லாமல் மறைத்திருக்கிறார். அதனால் அவரையும் கைது செய்திருக்கிறோம். மேலும் தலைமறைவாக இருக்கும் முக்கிய குற்றவாளியான பூக்கடை சேகரை பிடிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்" என்றனர்.