`சிறகடிக்க ஆசை தமிழில் மட்டுமல்ல; இந்தியிலும்..!' - FICCI கருத்தரங்கில் விகடன் மேலாண் இயக்குநர்
சென்னையில் நடந்து வரும் இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பின் மீடியா அண்ட் என்டர்டெயின்மென்ட் பிசினஸ் கருத்தரங்கில் 'பவர் ஆஃப் டிவி இன் சவுத்' என்ற தலைப்பில் விகடன் குழும மேலாண் இயக்குநர் சீனிவாசன், ஜியோ ஸ்டார் தெற்கு மண்டல தலைவர் கிருஷ்ணன் குட்டி உள்ளிட்ட பலர் பேசினர்.
விகடன் மேலாண் இயக்குநர் சீனிவாசன், "தொலைகாட்சி துறையில் கதை சொல்லல் என்பது மிக மிக முக்கியம். தென்னிந்திய தொலைகாட்சி பழைமைவாதத்தை கொண்டிருக்கிறது என்று கூறுகிறார்கள். ஆனால், உண்மையில் இங்கே தான் கதை சொல்லலில் புதுமைகளை புகுத்தி அதிக ரிஸ்க் எடுக்கப்படுகிறது.

2003-ம் ஆண்டு நாங்கள் எடுத்த திருமதி செல்வம் நான்கு மொழிகளில் எடுக்கப்பட்டது. அது சாதாரண பண்புள்ள மனிதனின் கதை. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, நாங்கள் தொடங்கிய சிறகடிக்க ஆசைக்கூட அந்த மாதிரியான கதைக்களத்தைக் கொண்டது தான். சிறகடிக்க ஆசை தென்னிந்தியாவின் நம்பர் ஒன் தொடராக உள்ளது. இந்தியில் இதே கதையை தழுவி எடுக்கப்படும் 'உட்னே கி ஆஷா' ஸ்டார் பிளஸ்ஸில் நம்பர் ஒன் தொடராக உள்ளது. ஆக, இதில் தெற்கு, வடக்கு பிரிவினை இல்லை. மொத்தத்தில், கதை சொல்லலை விறுவிறுப்புடனும், மக்களுக்குப் பிடித்த மாதிரியும் வைத்திருக்க வேண்டும்.
மேலும், பார்வையாளர்களுக்கு என்ன கதை என்பது முக்கியமில்லை. யாருடைய பார்வையில் இருந்து சொல்லப்படுகிறது என்பதை மிகவும் கவனிக்கின்றனர். இளைஞர்களை எடுத்துக்கொண்டால், அவர்களுக்கு இளைஞர்களின் கதை தேவைப்படுவதில்லை. ஓர் இளைஞர் எப்படி கையாள்கிறார் என்பதை எதிர்பார்க்கின்றனர்" என்று பேசினார்.