ஹிந்தியைத் திணிக்க மத்திய அரசு துடித்துக் கொண்டிருக்கிறது: அமைச்சர் சாமிநாதன்
மூன்றாவது மொழியைத் திணிப்பதற்கு மத்திய அரசு துடித்துக் கொண்டிருப்பதாக கோவையில் அமைச்சர் சாமிநாதன் தெரிவித்தார்.
உலக தாய்மொழி தினத்தையொட்டி ஈச்சனாரி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் பட்டிமன்றம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் இன்று நடைபெறுகின்றன.
இதனை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன் துவக்கி வைத்தார். முன்னதாக உலக தாய்மொழி நாள் உறுதிமொழி ஏற்றுக்கொள்ளப்பட்டு தமிழ் வளர்ச்சிக்கு பங்காற்றியவர்களுக்கு சிறப்பு செய்யப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய அமைச்சர் சாமிநாதன், 'கோவையில் நடைபெற்ற செம்மொழி மாநாடு அனைவருக்கும் நினைவிருக்கும். அன்றைய நாளில் முன்னாள் முதல்வர் கருணாநிதி எதிர்க்கட்சித் தலைவராக இருந்தாலும்கூட அன்றைக்கு பிரதமராக இருந்த மன்மோகன் சிங்கிடம், தமிழை செம்மொழியாக அந்தஸ்து பெற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
இதையும் படிக்க | ஹிந்தியைத் திணிக்கும் மறைமுக முயற்சிதான் புதிய கல்விக் கொள்கை: அன்பில் மகேஸ்
கருணாநிதி முன்னெடுத்த ஹிந்தி திணிப்பு சட்ட நகல் எரிப்பு போராட்டத்தில் நானும் பங்கு பெற்று சிறைவாசம் சென்றேன்.
அண்ணா, கருணாநிதி எல்லாம் தமிழை எவ்வாறு பாதுகாக்க வேண்டும் என்று நினைத்தார்களோ அதன்படி தமிழக முதலமைச்சர் பல்வேறு வழிகளில் இந்த துறை சார்ந்த பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறார்.
தமிழ் மொழி அழியாமல் பாதுகாக்கப்பட வேண்டும். தற்போதைய காலகட்டத்தில் பிற மொழிகளின் ஆதிக்கம் அதிகரித்துவிட்டது. வணிக வளாகங்களில் உள்ள பெயர்ப் பலகைகளில் தமிழ் மொழியைவிட ஆங்கிலம் போன்ற மொழிகளே ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.
அதுமட்டுமின்றி மத்திய அரசு மூன்றாவது மொழியைத் திணிப்பதற்கு துடித்துக் கொண்டிருக்கிறது. இத்தகைய சூழலில் மீண்டும் நம்முடைய தமிழ் மொழிக்கான போராட்டம் நடைபெறுகிறது.
நம்முடைய தாயை எவ்வளவு மதிக்கிறோம், அதனைவிட நம்முடைய தாய் மொழியை நாம் மதிக்க வேண்டும். பிறக்கக்கூடிய குழந்தைகளுக்கு தமிழில் பெயர் சூட்டுவோம்' என தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் கோவை மாவட்ட ஆட்சியர், தமிழ் வளர்ச்சித் துறை செயலாளர், கோவை மாநகராட்சி மேயர், துணை மேயர் உள்பட பல்வேறு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.