சொத்துகள் முடக்கம் அமலாக்கத் துறையின் அதிகார துஷ்பிரயோகம்: இயக்குநர் ஷங்கர்
சென்னை: எந்திரன் திரைப்படத்தின் கதை தொடர்பான மதிப்புரிமை மீறல் குற்றச்சாட்டின் கீழ், சொத்துகள் முடக்கப்பட்டிருப்பது அமலாக்கத் துறையின் அதிகார துஷ்பிரயோகம் என்று இயக்குநர் ஷங்கர் குற்றம்சாட்டியிருக்கிறார்.
தமிழில் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான ஷங்கருக்கு சொந்தமான ரூ. 10 கோடியிலான அசையா சொத்துகள் முடக்கப்பட்டிருப்பதாக அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவித்தனர்.
இந்த நிலையில், இயக்குநர் ஷங்கர் வெளியிட்டிருக்கும் விளக்க அறிக்கையில், எந்திரன் கதையின் உரிமையாளராக அறிவிக்கக் கோரிய அரூர் தமிழ்நாடன் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக, அமலாக்கத் துறை நடவடிக்கை எடுத்திருப்பது சட்ட செயல்முறையின் அப்பட்டமான சதுஷ்பிரயோகம். அமலாக்கத் துறையின் தொடர் நடவடிக்கையால் வருத்தம் அடைந்துள்ளேன்.
அதிகாரிகள் தங்களது நடவடிக்கை மறுபரிசீலனை செய்வார்கள் என்று நம்புகிறேன். இல்லையென்றால், அமலாக்கத் துறை நடவடிக்கையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளேன்.
அசையா சொத்துக்கள் முடக்கம் தொடர்பாக அமலாக்கத் துறையிடம் இருந்து தகவல் இல்லை. எந்திரன் படம் தொடர்பாக ஆதரமற்ற குற்றச்சாட்டுகள் தொடர்பாக சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன. இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக நீதிமன்றம் முழுமையாக விசாரித்து தீர்ப்பளித்துள்ளது. எந்திரன் படக் கதையில் மதிப்புரிமை மீறல் நடக்கவில்லை என்ற நீதிமன்றத்தின் தீர்ப்பு இருந்தபோதிலும் சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன என்று குறிப்பிட்டுள்ளார்.
நேற்று அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்ததாவது, அமலாக்கத்துறையால் எஸ். ஷங்கருக்கு சொந்தமான அசையா சொத்துகளில் மூன்று முடக்கப்பட்டிருப்பதாகவும், இவற்றின் மதிப்பு ரூ. 10.11 கோடி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிஎம்எல்ஏ 2002 சட்டத்தின்கீழ், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
கடந்த 2010-ஆம் ஆண்டு வெளியான ‘எந்திரன்’ திரைப்படத்தின் கதை 1996-ஆம் ஆண்டு அரூர் தமிழ்நாடன் எழுதிய கதையை தழுவி எடுக்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டில் சென்னை உயர்நீதிமன்றத்தில் பதியப்பட்டுள்ள வழக்கு விசாரணையை அமலாக்கத்துறை மேற்கொண்ட நிலையில் பண முறைகேடு நடைபெற்றதாகவும் புகார் எழுந்தது. அதனடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணையில் எஸ். ஷங்கரின் சொத்துகள் அமலாக்கத் துறையால் முடக்கப்பட்டதாகவும் குறிப்படப்பட்டிருந்தது.