அண்ணா பல்கலை., பாலியல் வழக்கு: ஞானசேகரன் மீது 7 திருட்டு வழக்குகள்; விசாரணையில் வெளியான பகீர் தகவல்
அண்ணா பல்கலைக்கழக மாணவிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த குற்றச்சாட்டில் தி.மு.க ஆதரவாளர் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கை வெளியானதற்குச் சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்ததோடு பெண் ஐ.பி.எஸ் அதிகாரிகள் தலைமையில் சிறப்புப் புலனாய்வுக் குழு ஒன்றையும் அமைத்து உத்தரவிட்டது.
இதையடுத்து அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கைச் சிறப்புப் புலனாய்வுக் குழுவினர் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் கைதான ஞானசேகரன் தொடர்புடைய ஆவணங்கள் அனைத்தும் கோட்டூர்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திலிருந்து பெற்ற சிறப்புப் புலனாய்வுக் குழுவினர், முதல் தகவல் அறிக்கை வெளியானது எப்படி என விசாரித்து வருகின்றனர்.

அதே நேரத்தில் கைதான ஞானசேகரன், மாணவிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த சமயத்தில் போனில் 'சார்' எனப் பேசியதாகத் தகவல் வெளியானது. அந்த சார் யார் என்ற கேள்வியை எதிர்க்கட்சிகள் எழுப்பினர். இதுதொடர்பாகவும் விசாரணை நடந்து வரும் வேளையில் ஞானசேகரனைக் காவலில் எடுத்தும் விசாரித்த போலீஸாருக்குப் புதிய தகவல்கள் கிடைத்திருக்கின்றன.
இதுகுறித்து ஞானசேகரனை விசாரிக்கும் போலீஸாரிடம் பேசினோம்
``கோட்டூர்புரத்தைச் சேர்ந்த ஞானசேகரன் மீது ஏற்கெனவே திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதனால் கோட்டூர்புரம் காவல் நிலைய சரித்திர ரௌடிகள் பட்டியலில் ஞானசேகரனின் பெயரும் இடம்பிடித்திருந்தது. ஒவ்வொரு குற்ற வழக்குகளிலும் ஞானசேகரன் சிறையில் அடைக்கப்படும்போது அவரை ஜாமீனில் எடுக்கத் தனியாக வழக்கறிஞர்கள் குழுவினர் செயல்பட்டு வந்திருக்கிறார்கள். அந்தளவுக்குச் செல்வாக்குடன் செயல்பட்ட ஞானசேகரன், பெரும்பாலும் பங்களா டைப் வீடுகளைக் குறி வைத்துத் திருடுவதை வழக்கமாக வைத்திருந்திருக்கிறார். கடந்த 2022-ம் ஆண்டு முதல் 2024-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் பள்ளிக்காரணை பகுதியில் உள்ள பங்களா டைப் வீடுகளில் திருட்டு சம்பவங்கள் நடந்தன. அதுதொடர்பாக காவல் நிலையங்களில் புகார்களும் வந்திருக்கின்றன.

இந்தச் சூழலில்தான் சிறையிலிருந்த ஞானசேகரனைச் சில தினங்களுக்கு முன்பு காவலில் எடுத்து விசாரித்தோம். அப்போது அவர் கார், வீடு என வசதியாக வாழ்ந்தது எப்படி எனக் கேள்வி கேட்டபோது, பள்ளிக்காரணை பகுதியில் காரில் சென்று திருடியதாகத் தெரிவித்தார். அவர் அளித்த தகவலின்படி ஏற்கெனவே பதிவான 7 வழக்குகளில் ஞானசேகரனுக்குத் தொடர்பு இருப்பது தெரியவந்திருக்கிறது. அந்த வீடுகளில் ஞானசேகரன் திருடிய பொருள்களின் விவரங்களையும், அதை யாரிடம் கொடுத்தார் போன்ற தகவல்களையும் சேகரித்து வருகிறோம். அதனால் அந்த ஏழு திருட்டு சம்பவங்களில் குற்றவாளியாக ஞானசேகரன் சேர்க்கப்பட்டிருக்கிறார். தொடர்ந்து விசாரித்து வருகிறோம்" என்றனர்.
இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்' பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்!
https://tinyurl.com/Velpari-Vikatan-Play