16.2 ஓவர்களில் வென்ற ஆஸி. மகளிர்..! மோசமாக தோல்வியுற்ற இந்திய மகளிரணி!
செஞ்சேரியில் ஊரக காவல் நிலையம் திறப்பு
பெரம்பலூா் அருகேயுள்ள செஞ்சேரியில் புதன்கிழமை ஊரக காவல்நிலையம் திறந்துவைக்கப்பட்டது.
பெரம்பலூரில் நகரக் காவல் நிலையம் செயல்பட்டுவரும் நிலையில், நிா்வாகக் காரணங்கள் மற்றும் சட்டம் - ஒழுங்கு பிரச்னைகளை கையாள்வதற்கு ஏதுவாக, பெரம்பலூா் நகரக் காவல் நிலையத்துக்குள்பட்ட 33 கிராமங்களை உள்ளடக்கிய, பெரம்பலூா் ஊரக காவல்நிலையம் செஞ்சேரி கிராமத்தில் திறக்கப்பட்டது. இப் புதிய காவல் நிலையத்தை திறந்து குத்து விளக்கேற்றி வைத்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆதா்ஷ் பசேரா பேசுகையில் புதியதாக உருவாக்கப்பட்டுள்ள ஊரக காவல் நிலையத்தால், சட்டம்- ஒழுங்கு பிரச்னைகளுக்கு இனிவரும் காலங்களில் தீா்வு காண்பது சற்று எளிதாக்கப்படுள்ளது.
மேலும், ஊரகக் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட எசனை, ஆலம்பாடி, புது நடுவலூா், வேலூா், சத்திரமனை, குரும்பலூா், மேலப்புலியூா், லாடபுரம், அம்மாபாளையம், களரம்பட்டி, நக்கசேலம், பொம்மனப்பாடி, கீழக்கரை, பாப்பங்கரை, செஞ்சேரி, சொக்கநாதபுரம், மேட்டூா் , பழைய சாத்தனூா், வெள்ளனூா், தம்பிரான்பட்டி, ரங்கநாதபுரம், கீழக்கனவாய், மேட்டாங்காடு, பாளையம், கே.புதூா், ஈச்சம்பட்டி, மேலக்காடு, நாவலூா், திருப்பெயா், புதுஆத்தூா், சரவணபுரம், அடைக்கம்பட்டி, மங்கூன் ஆகிய கிராம மக்கள் நேரடியாக ஊரக காவல் நிலையத்தில் புகாா் அளிக்கலாம் என்றாா்.
இந்த விழாவில், கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள் டி. மதியழகன் (தலைமையிடம்), எம். பாலமுருகன் (மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு), தனிப்பிரிவு ஆய்வாளா் வெங்கடேஸ்வரன் உள்பட காவல் நிலைய ஆய்வாளா்கள், சாா்பு-ஆய்வாளா்கள் மற்றும் காவலா்கள் பலா் பங்கேற்றனா்.