ஜார்க்கண்ட்: புதிய அரசு பதவியேற்பு தேதி அறிவிப்பு!
ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா(ஜேஎம்எம்) தலைமையிலான ‘இந்தியா’ கூட்டணி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைக்க உள்ளது. மொத்தமுள்ள 81 தொகுதிகளில் இக்கூட்டணிக்கு 56 இடங்கள் கிடைத்துள்ளன.
சனிக்கிழமை (நவ. 23) வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்டன. ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா 34 இடங்களைக் கைப்பற்றி, தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. காங்கிரஸ் 16, ராஷ்ட்ரீய ஜனதா தளம் 4, இந்திய கம்யூனிஸ்ட் (மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் விடுதலை) 2 இடங்களில் வெற்றி பெற்றன.
இந்த நிலையில், புதிய அரசு பதவியேற்கும் விழா வரும் 28-ஆம் தேதி நடைபெறும் என்று ஜேஎம்எம் தலைவர் ஹேமந்த் சோரன் இன்று(நவ. 24) தெரிவித்துள்ளார். முன்னதாக, ஜார்க்கண்ட் மாநில முதல்வர் பதவியை அவர் இன்று ராஜிநாமா செய்துள்ளார். இதற்காக மாநில ஆளுநரை சந்திக்க சென்றபோது செய்தியாளர்களுடன் பேசிய ஹேமந்த் சோரன், மேற்கண்ட தகவலை தெரிவித்துள்ளார்.
ஜார்க்கண்ட் முதல்வராக ஹேமந்த் சோரன் நவ. 26-ஆம் தேதி பதவியேற்கவிருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில், பதவியேற்பு விழா 28-ஆம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.