மதுரை: அடுத்த மேயர் யார்? - மதுரை திமுக-வில் நீடிக்கும் குழப்பம்!
தவெக: விரைவில் கரூர் பயணம்? - விஜய் கொடுத்த அப்டேட்!
கரூர் துயர சம்பவத்தில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்துக்கு தமிழக வெற்றிக் கழகம் சார்பாக தலா 20 லட்சம் வழங்கப்படும் எனத் தெரிவித்திருந்தார் அந்தக் கட்சியின் தலைவர் விஜய்.
அதன்படி இன்று 39 பேரின் குடும்பத்தினருக்கு வங்கிக்கணக்கில் 20 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர்களுக்கு அறிவிக்கப்பட்ட 2 லட்சம் விரைவில் வழங்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. அத்துடன் விஜய் சார்பாக வழங்கப்பட்ட கடிதத்தில் விரைவில் அவர் கரூர் வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
கடிதத்தில் விஜய் கூறியிருப்பதாவது, "கரூரில் ஏற்பட்ட தாங்க முடியாத வேதனையான நிகழ்வில் நம் குடும்ப உறவுகளை இழந்து தவிக்கிறோம். இந்தச் சூழலில் உங்களுக்கு ஆறுதலாகவும் ஆதரவாகவும் எல்லா வகையிலும் இருப்போம் என்பதை மீண்டும் உறுதிபடத் தெரிவித்துக்கொள்கிறோம்.

சென்ற வாரம் உங்களுடனான நம் துக்கத்தைப் பகிர்ந்துகொள்ள மேற்கொண்ட காணொளி அழைப்பில் நாம் சொன்னது போலவே, நமது சந்திப்பிற்காக, அதற்கான சட்டரீதியான அனுமதி முன்னெடுப்புகளை எடுத்து வருகிறோம். அனுமதி கிடைத்ததும் நிச்சயமாகச் சந்திப்போம்.
இதனிடையே, நாம் ஏற்கனவே (28.9.2025 அன்று) அறிவித்தபடி குடும்ப நல நிதியாக ரூ.20 லட்சத்தை வங்கியின் RTGS வழியாகத் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக (18.10.2025) அனுப்பி வைத்துள்ளோம். அதை நமது உதவிக் கரமாக ஏற்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
இறைவன் அருளுடன் இந்தக் கடினமான தருணத்தைக் கடந்து வருவோம்".