Sammoo : பல நூற்றாண்டுகளாக தீபாவளி கொண்டாடாத இந்திய கிராமம் பற்றி தெரியுமா?
மதுரை: அடுத்த மேயர் யார்? - மதுரை திமுக-வில் நீடிக்கும் குழப்பம்!
மேயர் இந்திராணி பொன் வசந்த் ராஜினாமா செய்ததன் மூலம் எதிர்க்கட்சிகளின் வாயை அடைத்தாலும், அடுத்த மேயரை தேர்வு செய்வதில் மதுரை தி.மு.க-வில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

மாநகராட்சி வரி மோசடி விவகாரத்தில் கணவர் பொன் வசந்த் கைது செய்யப்பட்ட பின்பு அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் மேயர் இந்திராணி புறக்கணிக்கப்பட்டார், இன்னொரு பக்கம் 'மேயர் மீது நடவடிக்கை எடுங்கள்' என்று பொதுவெளியில் அ.தி.மு.க-வினரும், கட்சிக்குள் தி.மு.க-வினரும் வலியுறுத்தி வந்தார்கள்.
'மரியாதை கொடுங்கள்....அல்லது வேறு மேயரை நியமியுங்கள்!' என்று, இந்திராணி ஆதரவாளர்களின் ஆதங்கத்தை கடந்த 9.9.2025 தேதியிட்ட ஜூ.வி-யில் வெளியிட்டிருந்தோம். அதைத்தொடர்ந்து புதிய மேயரை தேர்வு செய்ய மதுரையிலுள்ள இரண்டு அமைச்சர்களிடமும் அமைச்சர் நேரு கூற, ஒருமித்த கருத்து ஏற்பாடாததால் இழுத்துக்கொண்டே சென்றது.
'ஊழல் மேயரை மாற்ற வேண்டும்' என்று செல்லூர் ராஜூ முதல் எடப்பாடி பழனிசாமி வரை தொடர்ந்து பேசிக் கொண்டிருந்த நிலையில்தான், தற்போது மேயர் இந்திராணி ராஜினாமா செய்துள்ளார்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய தி.மு.க நிர்வாகிகள், "மாநகராட்சித் தேர்தலில் வெற்றிபெற்று சாதாரண கவுன்சிலராக மட்டும் எல்லோருக்கும் தெரிந்த இந்திராணி, கட்சியில் சீனியரான பொன் முத்துராமலிங்கம், அமைச்சர் பி.மூர்த்தி, தங்கம் தென்னரசு, கோ.தளபதி உள்ளிட்ட நிர்வாகிகளின் சிபாரிசுகளை புறம் தள்ளி மேயராக அறிவிக்கப்பட்டார். அதற்கு காரணம், அப்போது தி.மு.க தலைமையிடம் செல்வாக்காக இருந்த அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன். இதன் மூலம் மதுரை அரசியலில் தனக்கென்று ஒரு ஆதரவு கோஷ்டியை உருவாக்க நினைத்தார்.
இதனால் கடுப்பான தி.மு.க கவுன்சிலர்கள் ஆரம்பத்திலிருந்து மேயரோடு மோதல் போக்கை கடைபிடித்து வந்தனர். மாமன்றக் கூட்டத்தில் எதிர்க்கட்சிகளை விட அதிகமாக மேயருக்கு எதிராக பேசினார்கள். இதற்கிடையே தி.மு.க மாமன்றக் குழு உறுப்பினர்களின் தலைவர் என்ற பதவியை ஜெயராமுக்கு தலைமை வழங்கியது. அவரை மேயர் தரப்பு கண்டுகொள்ளவில்லை.

மேயரின் செயல்பாட்டை கண்காணிக்க பி.டி.ஆரு'ம் ஒரு பெண் உதவியாளரை நியமித்தார். ஆனால், அதையெல்லாம் கடந்து மேயரின் கணவர் பொன் வசந்த், நிர்வாகத்தில் ஆதிக்கம் செய்ய ஆரம்பித்தார். மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிடுவது, டெண்டர், போஸ்டிங், பிளான் அப்ரூவல், சொத்து வரி நிர்ணயம் என்று தலையிட ஆரம்பித்தார். இடையில் ஒரு விவகாரத்தில் கடுப்பான பி.டி.ஆர், தன்னுடைய நிகழ்ச்சிகளில் பொன் வசந்த் கலந்துகொள்ளக் கூடாது என்று உத்தரவிட்டார். சமீபத்தில் வரி மோசடி விவகாரம் வெளிக் கிளம்பியதும் மேயர் இந்திராணியும் தன் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளக் கூடாது என்று உத்தரவிட்டார்.
மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள வணிக கட்டடங்களுக்கு வரி நிர்ணயம் செய்ததில் ரூ 200 கோடி வரை முறைகேடு செய்து மாநகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியதை மத்திய குற்றப் பிரிவு போலீஸ் விசாரித்து வந்தது. இந்த விவகாரம் கட்சிக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தியதால் மாநகராட்சி குழுத் தலைவர்கள் 7 பேர் தங்கள் பதவியை ராஜினாமா செய்ய வைக்கப்பட்டனர். மேயர் கணவர் பொன் வசந்த், வரிவிதிப்பு குழுத் தலைவர் விஜயலட்சுமியின் கணவர் கண்ணன் உள்ளிட்ட, மாநகராட்சி அலுவலர், ஊழியர்கள் 23 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஆகஸ்ட் 12 ஆம் தேதி கைது செய்யப்பட்ட மேயரின் கணவர் பொன்வசந்த் சமீபத்தில்தான் ஜாமீனில் வெளியில் வந்தார். அதைத் தொடர்ந்து மாநகராட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் ஒதுங்கியிருந்த மேயரிடம் அமைச்சர் நேருவின் உத்தரவால் ராஜினாமா கடிதம் பெறப்பட்டுள்ளது" என்றனர்.
இதைத் தொடர்ந்து கடந்த 17-ஆம் தேதி நடைபெற்ற சிறப்பு மாமன்ற கூட்டத்தில், துணை மேயர் நாகராஜன் தலைமையில் கவுன்சிலர்கள் முன்னிலையில் மேயரின் ராஜினாமா கடிதம் அதிகாரப்பூர்வமாக ஏற்கப்பட்டது. விரைவில் அடுத்த மேயர் தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து எதிர்க்கட்சித் தலைவர் (அ.தி.மு.க) சோலைராஜாவிடம் பேசும்போது, "மாநகராட்சியில் நடைபெறும் முறைகேடுகளை ஒவ்வொரு மாமன்றக் கூட்டத்திலும் ஆதாரத்துடன் எழுப்பி வந்தோம். அதுபோலத்தான் இந்த பலகோடி ரூபாய் வரி முறைகேட்டையும் வெளியில் கொண்டு வந்தோம், அந்த அடிப்படையில்தான் பழைய கமிஷனர் போலீசில் புகார் அளித்தார். மேயரின் கணவர் உட்பட 23 பேரை கைது செய்தவர்கள் ஏன் மேயரை கைது செய்யவில்லை, பதவியிலிருந்து நீக்கவில்லை என்று தொடர்ந்து கேள்வி எழுப்பி ஆர்பாட்டம் நடத்தினோம்,

மாமன்றக் கூட்டத்தில் குரல் எழுப்பினோம், உயர் நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தோம். இப்பிரச்னையை திசை திருப்ப பார்த்தார்கள், மக்கள் நம்பவில்லை, மேயர் ராஜினாமா செய்ததை எங்கள் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றியாக பார்க்கிறோம். இந்த வரி முறைகேடு மட்டுமல்ல, நகரமைப்புக் குழுவிலும் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது, அதையும் வெளிக் கொண்டு வருவோம்" என்றார்.
மண்டலத்தலைவர்களாக இருந்து வரி மோசடி விவகாரத்தில் பதவி பறிக்கப்பட்ட கவுன்சிலர்கள் வாசுகி, சரவண புவனேஸ்வரி, பாண்டிசெல்வி ஆகியோருடன் இந்திரா காந்தி, பாமா ஆகியோரை பி.மூர்த்தி, பி.டி.ஆர், கோ.தளபதி ஆகியோர் சிபாரிசு இருந்தாலும், 79 - வது வார்டு கவுன்சிலர் லக்சிகாஸ்ரீ, 32 வது வார்டு விஜய மௌசுமி, ரோஹினி ஆகியோர் பெயரையும் தலைமை பரிசீலித்து வருவதாக கட்சியினர் பேசி வருகிறார்கள்.

அதுவரை துணை மேயரான சி.பி.எம்--மைச் சேர்ந்த நாகராஜன் பொறுப்பு மேயராக அறிவிக்கப்படலாம் என்றும் சொல்லப்படுகிறது.