Bollywood: ``நாங்கள் இணைந்து நடிக்கும் படம் ?'' - ஒரே மேடையில் பாலிவுட்டின் கான்...
தீபாவளி: இந்த நேரத்தில் நீராடினால் லட்சுமி கடாட்சம் நிச்சயம்!- லட்சுமி குபேர பூஜை செய்ய உகந்த நேரம்
ஒவ்வோர் ஆண்டும் ஐப்பசி மாதம் வரும் பண்டிகைகளில் மிகவும் முக்கியமானது தீபாவளி. ஐப்பசி மாத அமாவாசைக்கு முன் தினம் சதுர்த்தசி திதி நாளில் கொண்டாடப்படும் எனவேதான் இதற்கு, 'நரக சதுர்த்தசி' என்கிற பெயரும் உண்டு. இந்த நாள் வெறும் கொண்டாட்டம் மட்டுமல்ல வாழ்வை வளமாக்கும் ஒரு வழிபாடு நாள் என்கின்றன ஞான நூல்கள். பட்டாசு, பலகாரம், புதுத்துணி என்று கொண்டாடி மகிழும் தினத்தில் கொஞ்சம் வழிபாட்டையும் கடைப்பிடிக்க சகலவிதமான செல்வ வளங்களும் சேரும் என்கிறார்கள் பெரியோர்கள்.
பொதுவாக, அமாவாசைக்கு முன் திதியான சதுர்த்தசி அன்று அதிகாலை வேளையில் தீபாவளி கொண்டாடப்பட வேண்டும். சில நாள்களில் காலை வேளையிலேயே சதுர்த்தசி முடிந்து அந்த நாளிலேயே அமாவாசை வந்துவிடுவது உண்டு. அமாவாசை என்று வந்துவிட்டால் அன்றைய நாளில் முன்னோர் வழிபாட்டையும் மேற்கொள்ள வேண்டும். அதற்காக அந்த நாளில் இரண்டு முறை நீராட வேண்டும் என்று பல நியதிகள் உள்ளன. ஆனால் இந்த ஆண்டு தீபாவளியின் பெரும்பான்மையான நாள் சதுர்த்தசி திதியாகவே அமைகிறது. 20.10.25 அன்று மாலை 4.14 வரை சதுர்த்தசி திதி அமைந்திருப்பதால் மறுநாளே அமாவாசை ஆகும். எனவே தீபாவளியைக் கோலாகலமாகக் கொண்டாடலாம்.

தூய்மை செய்யும் கங்கை நீராடல்... திருஷ்டி போக்கும் நாயுறுவி
தீபாவளி நாளில் அதிகாலையில் அனைத்து நீர் நிலைகளிலும் கங்கையே நிறைந்திருப்பாள் என்கின்றன புராணங்கள். இது இறைவன் கங்கைக்கும் மக்களுக்கும் அளித்த வரம். எனவே அந்த நாளில் சூரிய உதயத்துக்கு முன்பாக எண்ணெய் தேய்த்துக்குளித்து வெந்நீரில் நீராட வேண்டும். தலைக்கு சீயக்காய் தேய்த்தே குளிக்க வேண்டும் என்கிறார்கள் பெரியோர்கள். மற்ற நாள்களில் இந்த வேளையில் எண்ணெய் தேய்த்துக்குளிப்பது கூடாது என்கிறது சாஸ்திரம். எனவே தீபாவளி தனித்துவம் வாய்ந்த ஒரு நாள் என்பதில் சந்தேகமேயில்லை.
நீராடுவதற்கு முன்பாக நாயுறுவியைக் கையில் எடுத்துக்கொண்டு நமக்கு நாமே மூன்றுமுறை தலையைச் சுற்றிப் பிறகு அதைத் தூரப்போட்டுவிடவேண்டும். அதன்பின் நீராடினால் நமக்கு உள்ள கண் திருஷ்டிகள் விலகும் என்கிறார்கள். மேலும் இந்த நாளில் செய்யும் புனித நீராடல் நம் உடல் அழுக்கை மட்டுமல்ல மன அழுக்கையும் போக்குவது என்பதனால் இதற்கு, 'மல (அழுக்கு) அபகர்ஷ்ண ஸ்நானம்' என்கிற பெயரும் உண்டு.
தீபாவளி நீராடல் எப்போதும் அருணோதயகாலத்தில் நிகழ வேண்டும். அதாவது சூரியனுக்கு முன்பாக அவனது தேரோட்டியான அருணன் உதயமாவார். அந்த வேளை என்பது காலை 4 மணி முதல் 5.30 மணிக்குள் ஆகும். எனவே இந்த வேளையில் நீராடுவது விசேஷம். அதிலும் இந்த ஆண்டு 20.10.25 அன்று அதிகாலை 4மணி முதல் 5 மணிக்குள் சுக்ர ஹோரையில் நீராடினால் சுக்கிரனின் அனுக்கிரகம் கிடைக்கும். சுக்கிரனே மகாலட்சுமியின் அருளை நமக்கு வாரிவழங்குபவர். எனவே சுக்ர ஹோரையில் புனித நீராடி, புத்தாடை உடுத்தி சுவாமியை வணங்கினால் சகலவிதமான லட்சுமி கடாட்சங்களும் நமக்குக் கிடைக்கும் என்கிறார்கள் பெரியோர்கள்.
லட்சுமி - குபேர பூஜை
வட இந்தியாவில் இந்த நாளில் புதுக்கணக்கும் தொடங்கும் வழக்கம் உள்ளது. அதற்கு முன்பாக மகாலட்சுமித் தாயாருக்கும் குபேரருக்கும் பூஜை செய்வார்கள். இந்த ஆண்டு அமாவாசை அக்டோபர் 20 -ம் தேதி மாலையே வந்துவிடுவதால் அன்று மாலையும் பூஜை செய்யலாம். அடுத்த நாள்மாலையும் பூஜை செய்யலாம். அக்டோபர் 20 அன்று செய்பவர்கள் மாலை 6-7 குரு ஹோரையிலோ அல்லது திங்கட்கிழமை 6-7 சுக்கிர ஹோரையிலோ இந்த பூஜையைச் செய்வது மிகுந்த நற்பலன்களைத் தரும் என்கிறார்கள்.
கேதார கௌரி விரதம் அமாவாசை நாளிலேயே செய்யப்பபட வேண்டும் என்றாலும் தீபாவளி நாளிலேயே அமாவாசை இருப்பதாலும் அன்றே 21 நாள்கள் ஆகிவிடுவதாலும் அன்றே அந்த விரதத்தைக் கடைப்பிடிக்கலாம். திங்கட்கிழமை செய்வதும் சரியே.

இப்படி தீபாவளிப் பண்டிகையைத் தொடர்ந்துவரும் சகலவிதமான வழிபாடுகளையும் கடைப்பிடித்து அனைவரும் செல்வவளமும் நலமும் பெறலாம்.
தீபாவளி நல்வாழ்த்துகள்