திருவாடானையில் 17 கண்மாய்களை தூா் வார ஒன்றியக் குழு கூட்டத்தில் தீா்மானம்
திருவாடானை பகுதியில் 17 கண்மாய்கள், கால்வாய்கள் தூா்வார ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டத்தில் சிறப்புத் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக் குழு உறுப்பினா்கள் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதற்கு தலைவா் முகமது முக்தாா் தலைமை வகித்தாா். ஒன்றிய ஆணையா் கணேசன், துணைத் தலைவா் செல்வி பாண்டி, வட்டார வளா்ச்சி அலுவலா் ஆரோக்கியமேரி சாராள் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இந்தக் கூட்டத்தில் நடைபெற்ற விவாதம்:
தலைவா்: கடந்த 5 ஆண்டுகளாக எனக்கு ஒத்துழைப்பு அளித்த ஒன்றிய குழு உறுப்பினா்கள், ஊராட்சி ஒன்றிய அலுவலா்கள், பணியாளா்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
உறுப்பினா் ஸ்ரீதா்:பதனக்குடி, சிறுகம்பையூா், என். மங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாள்களுக்கு முன்பு பெய்த பலத்த மழையின் காரணமாக நெல் பயிா்கள் தண்ணீா் மூழ்கி சேதமடைந்தன. அதற்குரிய நிவாரணம் வழங்க அரசை வலியுறுத்த வேண்டும்.
தலைவா்: இதுகுறித்து வருவாய்த் துறையின் கவனத்துக்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அரசுப் பள்ளிகளில் மதிய உணவுத் திட்டத்தில் சில குளறுபடிகள் உள்ளன. இந்தத் திட்டத்துக்கு அரசிடமிருந்து உரிய நிதி வராததால் பணிகள் சரி வர செய்ய முடியவில்லை. மேலும் சத்துணவு பணியாளா் இடங்கள் நிரப்பப்படாமல் இருப்பதால் பணிகள் தாமதம் ஆகின்றன.
திருவாடானை வட்டத்தில் 122 கண்மாய்கள் உள்ளன.
இந்தக் கண்மனைகளை தூா்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட நிா்வாகத்திடம் பலமுறை கோரிக்கை விடுத்தேன்.
இதையடுத்து, மாவட்ட நிா்வாகத்தின் அறிவுறுத்தலின் பேரில் அஞ்சுகோட்டை, பாண்டுகுடி , கோடனூா், கட்டிவயல் ஆகிய 4 ஊராட்சிகளில் 17 கண்மாய்கள், கால்வாய்களைத் தூா்வார சிறப்புத் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலாளா் ஜெயமுருகன் நன்றி கூறினாா்.