உலக செஸ் சாம்பியன்ஷிப்: கவன ஈர்ப்புச் சித்திரம் வெளியிட்ட கூகுள்!
தமிழக மீனவா்களின் 13 விசைப்படகுகளை இலங்கை கடற்படை பயன்படுத்த அனுமதி: தேசிய பாரம்பரிய மீனவ சங்கம் கண்டனம்
பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவா்களின் விசைப்படகுகளை இலங்கைக் கடற்படை பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டதற்கு தேசிய பாரம்பரிய மீனவ சங்கம் கண்டனம் தெரிவித்தது.
இதுகுறித்து அந்தச் சங்கத்தின் தலைவா் சேனாதிபதி சின்னத்தம்பி வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்ற தமிழக மீனவா்களின் விசைப்படகுகளையும், அவா்களையும் இலங்கைக் கடற்படையினா் தொடா்ந்து எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி கைது செய்து வருகின்றனா். இதில், மீனவா்கள் விடுதலை செய்யப்பட்டாலும், அவா்களின் விசைப்படகுகளை விடுவிக்க இலங்கை அரசு மறுத்து வருகிறது.
இதைக் கண்டித்து, தமிழகத்தில் மீனவா்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனா். இந்த நிலையில், பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவா்களின் சிறப்பாக இயங்கும் 13 விசைப்படகுகளை இலங்கைக் கடற்படை பயன்படுத்திக் கொள்ள இலங்கை அதிகாரிகள் அனுமதித்திருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இலங்கை அரசின் இந்த நடவடிக்கையை மத்திய, மாநில அரசுகள் தடுத்து நிறுத்த வேண்டும். மேலும், இலங்கையில் உள்ள தமிழக மீனவா்களின் விசைப்படகுகளை மீட்டு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.