தேர்தல் முறைகேடுகளைத் திசைதிருப்ப வன்முறையைத் தூண்டும் பாஜக: அகிலேஷ் யாதவ்!
தேர்தல் முறைகேடுகளைத் திசைதிருப்ப உ.பி.யில் ஜாமா மசூதி ஆய்வு விவகாரத்தில் பாஜக கலவரத்தைத் தூண்டிவிட்டுள்ளது என சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.
உத்தர பிரதேசத்தின் சம்பல் மாவட்டத்தில் பாரம்பரிய மிக்க ஹிந்து கோயிலை இடித்து ஜாமா மசூதி கட்டப்பட்டதாக உச்சநீதிமன்ற வழக்குரைஞருமான விஷ்ணு சங்கா் ஜெயின் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சம்பல் சிவில் நீதிமன்றம் மசூதியில் அய்வு நடத்த உத்தரவிட்டது.
இதனைத் தொடர்ந்து, நீதிமன்ற உத்தரவின்படி இரு தரப்பினரின் முன்னிலையில் நீதிமன்ற ஆணையா் கடந்த நவ. 5 மசூதியில் ஆய்வு நடத்தினாா். அன்றிலிருந்தே அந்தப் பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.
இன்று காலை 7 மணியளவில் ஜாமா மசூதியில் இரண்டாவது முறையாக ஆய்வு செய்ய போலீஸ் பாதுகாப்புடன் ஆய்வுக் குழுவினர் சென்றுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற வன்முறையில் ஊர்மக்கள் போலீசார் மீது கற்களை வீசித் தாக்குதல் நடத்தியும், வாகனங்களுக்கு தீ வைத்தும் வன்முறையில் ஈடுபட்டனர். போலீஸார் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசி அவர்களைக் கலைத்தனர். இந்த வன்முறையில் 10 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதையும் படிக்க | மசூதியில் ஆய்வு நடத்த எதிர்ப்பு: உ.பி.யில் பதற்றம்!
இந்த வன்முறை சம்பவம் தொடர்பாக பேசிய சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், “சம்பலில் ஒரு மோசமான சம்பவம் நடந்துள்ளது. தேர்தல் முறைகேடுகள் குறித்து விவாதங்கள் நடைபெறாமல் திசைதிருப்ப ஆய்வுக் குழுவினரை இன்று காலை வேண்டுமென்றே அங்கு அனுப்பி குழப்பத்தை உருவாக்கியுள்ளனர்.
ஏற்கனவே ஆய்வு செய்யப்பட்ட இடத்தில் மீண்டும் எதற்காக காலை நேரத்தில் எந்த முன்னறிவிப்பும் இன்றி மீண்டும் ஆய்வு செய்ய வந்தனர். அங்கு நடைபெற்ற வன்முறையில் ஏராளமானோர் காயமடைந்துள்ளனர்.
நான் எந்த சட்ட நடைமுறைகளுக்குள்ளும் செல்லவில்லை. ஆனால், இதன் மற்றொரு பக்கம் குறித்து பேசப்படாமலே உள்ளது. சம்பலில் நடந்த வன்முறை சம்பவம் தேர்தல் முறைகேடுகளில் இருந்து கவனத்தைத் திசைதிருப்ப பாஜகவால் தூண்டப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.
உ.பி.யில் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. இதில், சமாஜ்வாதி கட்சி 2 இடங்களிலும், மீதமுள்ள 7 இடங்களில் பாஜக கூட்டணியும் வெற்றி பெற்றது. இந்தத் தேர்தலில் முறைகேடுகள் நடந்துள்ளதாக அகிலேஷ் யாதவ் தீவிரமான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
மேலும் பேசிய அவர், ”வாக்குப்பதிவு நாளில், சமாஜ்வாதி கட்சியின் அனைத்து பூத் ஏஜெண்டுகள் மற்றும் வாக்களிக்க விரும்பிய பல ஆதரவாளர்களையும் காவல்துறையும் அரசு நிர்வாகம் அகற்றினார்கள்.
வாக்களிக்க விடாமல் அவர்களைத் தடுத்தபோது, அவர்களின் வாக்குகளை யார் பதிவு செய்தார்கள்? சமாஜ்வாடி கட்சி வாக்குகள் வாக்குச் சாவடிகளில் பதிவாகவில்லை என்றால், எங்கள் வேட்பாளருக்கு ஆதரவு கிடைக்கவில்லை என்றால், அங்கு வாக்களித்தது யார்? இது ஒரு தீவிரமான பிரச்சினை" என்று அகிலேஷ் யாதவ் குற்றச்சாட்டு வைத்தார்.
இதையும் படிக்க | உ.பி. அரசு மருத்துவமனையில் தீ விபத்து: பலி எண்ணிக்கை 17ஆக உயர்வு!
"வாக்குச் சாவடிகளில் இரண்டு வகையான வாக்குச் சீட்டுகள் இருந்தன. ஒன்று சிவப்பு குறியிட்டது. மற்றொன்று வழக்கமான சீட்டு. நாங்கள் இந்த பிரச்சினையை வாக்குப்பதிவு நாளிலேயே எழுப்பினோம். தேர்தல் நிர்வாகமே அத்தகைய ஏற்பாடுகளை உருவாக்கி எங்களை ஒடுக்க முயற்சித்தனர்" என்று யாதவ் குற்றம் சாட்டினார்.
குந்தர்கி சட்டமன்ற இடைத்தேர்தலில் சமாஜ்வாதி கட்சியின் வேட்பாளர் ஹாஜி ரிஸ்வானும் தனது ஆதரவாளர்களை வாக்களிக்க விடாமல் போலீஸார் தடுத்ததாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
குந்தர்கி தொகுதி இடைத்தேர்தலில் பாஜகவின் ராம்வீர் சிங் 1.45 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.