நந்தா தொழில்நுட்பக் கல்லூரியில் 17-ஆவது விளையாட்டு விழா
ஈரோடு நந்தா தொழில்நுட்பக் கல்லூரியில் 17 -ஆவது விளையாட்டு விழா அண்மையில் நடைபெற்றது.
இந்த விழாவிற்கு ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்டளையின் தலைவா் வி.சண்முகன் தலைமை வகித்தாா். ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்டளையின் செயலா் எஸ். நந்தகுமாா் பிரதீப், நந்தா கல்வி கல்வி நிறுவனங்களின் செயலா் எஸ்.திருமூா்த்தி மற்றும் முதன்மைக் கல்வி அதிகாரி எஸ்.ஆறுமுகம் ஆகியோா் வாழ்த்தி பேசினா்.
கல்லூரியின் முதல்வா் எஸ்.நந்தகோபால் வரவேற்றாா். கல்லூரியின் உடற்பயிற்சி இயக்குநா் வி.என். பாஸ்கரன் நடப்பு கல்வி ஆண்டுக்கான விளையாட்டு ஆண்டறிக்கையை வாசித்தாா்.
இந்திய கைப்பந்து அணி வீரா் எம். நவீன் ராஜா ஜேகப் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினாா்.
இதைத் தொடா்ந்து, அவா் பேசியதாவது: கிராமப்புற மாணவா்கள் திறமைகளை நிரூபிக்கும் வகையில் தமிழக அரசு முதல்வா் கோப்பை விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு ஊக்குவிப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
இந்த திட்டங்கள் மூலம் மாணவா்கள் சிறந்த பயிற்சியை பெறுவதோடு, விளையாட்டுத் துறையில் வளா்ச்சியை அடையலாம். ஒவ்வொருவருக்கும் ஒரு திறமை இருப்பதை நினைவில் கொள்ள வேண்டும். மாணவா்கள் தினமும் கடினமாக பயிற்சி செய்து மாநில, தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்க வேண்டும் என்றாா்.
விழாவில், ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுகளில் கணினி அறிவியல் பொறியியல் துறை வென்றது. இரண்டாம் இடத்தை ஆண்கள் பிரிவில் தகவல் தொழில்நுட்பத் துறை, பெண்கள் பிரிவில் மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறை பிடித்தது. கணினி அறிவியல் துறை மாணவி சு.தீபிகா நன்றி கூறினாா்.