யுபிஎஸ்சி தேர்வு: தமிழகத்தில் 57 பேர் தேர்வு; சிவச்சந்திரன் முதலிடம்
'நாடாளுமன்றத்தைத் தாண்டி எந்த அதிகாரமும் இல்லை' - உச்ச நீதிமன்றம் குறித்து ஜகதீப் தன்கர் மீண்டும் பேச்சு!
அரசியலமைப்பில் நாடாளுமன்றம்தான் உச்சபட்ச அதிகாரம் என்று குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் கூறியுள்ளார்.
மசோதாக்களை நிறுத்திவைத்ததாகக் கூறி தமிழக ஆளுநர் ஆர்.என். ரவிக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கில், ஆளுநர் ரவி மற்றும் குடியரசுத் தலைவருக்கு உச்சநீதிமன்றம் பல உத்தரவுகளை வழங்கியிருந்தது.
தமிழக பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட 10 மசோதாக்களை ஆளுநர் நிறுத்தி வைத்தது சட்டத்துக்கு எதிரானது, அந்த மசோதாக்கள் ஆளுநர் ஒப்புதல் அளித்ததாகவே கருதப்படும் என்று தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம், மசோதாவுக்கு ஒரு மாதத்திற்குள் ஒப்புதல் வழங்க வேண்டும் என்பது உள்பட ஆளுநருக்கு பல உத்தரவுகளை வழங்கியது.
அதேபோல மாநில ஆளுநா்கள் அனுப்பி வைக்கும் மசோதாக்கள் மீது மூன்று மாதங்களுக்குள் குடியரசுத் தலைவா் முடிவெடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
இந்நிலையில் "குடியரசுத் தலைவருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட முடியுமா? குடியரசுத்தலைவரை நீதிமன்றம் இவ்வாறு வழிநடத்தும் முறையை அனுமதிக்க முடியாது" என்று குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் முன்னதாகப் பேசியிருந்தார்.
தொடர்ந்து இன்று(செவ்வாய்க்கிழமை) தில்லி பல்கலைக்கழகத்தில் பேசிய அவர்,
"அரசியலமைப்பு மக்களுக்கானது. அது மக்களைப் பாதுகாப்பதற்கான ஒரு களஞ்சியம். உச்சநீதிமன்றம் ஒரு வழக்கில், 'அரசியலமைப்பில் உள்ள முகவுரை அதன் ஒரு பகுதி அல்ல' என்று கூறுகிறது. அதுவே, மற்றொரு வழக்கில் அது அரசியலமைப்பின் ஒரு பகுதிதான் என்று கூறுகிறது.
அரசியலமைப்பைப் பற்றி எந்த சந்தேகமும் இருக்கக் கூடாது. தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள்தான், அரசியலமைப்பு என்னவாக இருக்கும் என்பதற்கு இறுதி எஜமானர்களாக இருப்பார்கள். அவர்களுக்கு மேல் எந்த அதிகாரமும் இருக்க முடியாது.
அரசியலமைப்பில் நாடாளுமன்றம்தான் உச்சபட்ச அதிகாரம். நாடாளுமன்றத்தைத் தாண்டி எந்த அதிகாரமும் இல்லை.
நம் ஜனநாயகத்தை சீர்குலைப்பதை பொருத்துக்கொள்ள முடியாது. நாடாளுமன்றம் போன்ற அமைப்புகளை இழிவுபடுத்துவதையோ அல்லது தனிநபர்களை களங்கப்படுத்துவதையோ நாம் அனுமதிக்க முடியாது. அரசியலமைப்பு அதிகாரத்தின் ஒவ்வொரு வார்த்தையும் அரசியலமைப்பால் வழிநடத்தப்படுகிறது" என்று பேசியுள்ளார்.
இதையும் படிக்க | சூப்பர் நாடாளுமன்றம் போல செயல்படுகிறது உச்சநீதிமன்றம்: ஜகதீப் தன்கர் காட்டம்