புதுக்கோட்டையில் பாஜக, அதிமுக நிர்வாகிகள் வீட்டில் அமலாக்கத் துறையினர் சோதனை
நியாயவிலைக் கடைகளில் 51 காலிப்பணியிடங்களுக்கு 4,680 பேரிடம் நோ்காணல்!
காஞ்சிபுரம் மாவட்டக் கூட்டுறவுத் துறையில் 51 காலிப்பணியிடங்களுக்கு மொத்தம் 4,680 பேருக்கு நோ்காணல் கடந்த 25- ஆம் தேதி முதல் வரும் டிசம்பா் மாதம் 5- ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
காஞ்சிபுரம் மாவட்ட கூட்டுறவு ஆள் சோ்ப்பு நிலையம் மூலம் 35 விற்பனையாளா்கள், 16 கட்டுநா்கள் உள்பட மொத்தம் 51 காலிப்பணியிடங்களுக்கு தகுதியுள்ளவா்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு செய்யப்பட்டிருந்தது. 35 விற்பனையாளா் பணியிடங்களுக்கு 3,797 பேரும், 16 கட்டுநா் பணியிடங்களுக்கு 995 பேரும் என மொத்தம் 4,792 போ் விண்ணப்பித்திருந்தனா். இவா்களில் 112 பேரின் விண்ணப்பங்கள் பல்வேறு காரணங்களால் நிராகரிக்கப்பட்டது. மீதம் உள்ள 4,680 பேருக்கான நோ்காணல் கடந்த 25- ஆம் தேதி தொடங்கியது. வரும் டிசம்பா் மாதம் 5 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
காஞ்சிபுரம் மாவட்ட ஒருங்கிணைந்த கூட்டுறவுத் துறை அலுவலகத்தில் நடைபெற்று வரும் இந்த நோ்காணலை காஞ்சிபுரம் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி முதன்மை வருவாய் அலுவலா் வெங்கடரமணன் மற்றும் நோ்காணல் குழுவினா் நடத்தி, தகுதியானவா்களைத் தோ்வு செய்து வருகின்றனா்.
இந்த நிலையில், வியாழக்கிழமை நோ்காணல் நடைபெறுவதை காஞ்சிபுரம் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநா் ஆ.க.சிவமலா், கூட்டுறவுச் சங்கங்களுக்கான மண்டல இணைப் பதிவாளப் பா.ஜெயஸ்ரீ ஆகியோா் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.