செய்திகள் :

பாலய்யா வஸ்தாவய்யா 2: `சூரியனுக்கு முன் உணவு' -MGR பெரியப்பா, சிவாஜி சித்தப்பா - சென்னையில் விருந்து

post image

நன்றி: விகடன்இணையதளம்.

வணக்கம் மக்களே... 'பாலய்யா வஸ்தாவய்யா' தொடருக்குக் கலவையான கமென்ட்டுகளும் ரகளையான ரியாக்‌ஷன்களுமாய் திக்குமுக்காட வைத்துவிட்டீர்கள்.

பலர், "செம சூப்பரு...ஃபுல் ஸ்கேனிங் ரிப்போர்ட் கொடு தல!" என்று வாழ்த்தினார்கள். சிலர், "இப்போ இன்னாத்துக்கு அந்த ஆளுக்குலாம் ரைட்-அப்...?' என்று செல்லமாய் கடிந்து கொண்டார்கள். கல்லூரி நண்பன்  கமலாகர் குச்சிவாடா
ரெட்டி  போன் செய்து, "தூரபு கொண்டலு நுனுப்பு ரா மச்சி!"(இக்கரைக்கு அக்கரை பச்சை) என்று சொன்னான்.

எது எப்படியோ நாணயத்துக்கு இரண்டு பக்கம் மாதிரி ஒரு ஸ்டாருக்கு பாசிட்டிவ் நெகட்டிவ் இரண்டு பக்கமும் இருக்கும். 50 வருடங்கள் தெலுங்கு சினிமா உலகில் பாலய்யா சாதித்தது, சறுக்கியது உள்ளிட்ட விஷயங்களோடு கொஞ்சம் அவரைப் பற்றி அதிகம் அறியாத விஷயங்களைப் பேசுவதே இத்தொடரின் நோக்கம்.
இன்னொன்றையும் இங்கே பதிவு செய்யக் கடமைப்பட்டுள்ளேன். கண்டிப்பாக சுவாரஸ்யத்துக்குப் பஞ்சமிருக்காது. ஏனென்றால் ஆளு அப்படி!
ஓ.கே... சீட்டு பெல்ட்டு சீஸ்கோரா! மன பாலய்யா ரைடு ஸ்டார்ட் ஆயுந்தி!

பாலய்யா | நிஜாம் கல்லூரி

பாலய்யா, ஹைதராபாத்திலிருக்கும் நிஜாம் கல்லூரியில் பி.காம் படிக்கப்போனது 1979ம் ஆண்டு. முதல் வருடம் சாந்த சொரூபமாக இருந்தவர், அடுத்த இரண்டு ஆண்டுகளில் பண்ணியதெல்லாம் 'சம்பவ'மி யுகே யுகே!

'சட்டென வரும் கோபம்...பட்டென மறையும் வேகம்' தான் அன்றும் இன்றும் என்றுமான அவரது பலம் - பலவீனம். அட்ரினலின் சுரப்பு அதிகமாய் இருக்கும் கல்லூரி காலத்தில் பாலய்யாவைச் சொல்லவா வேண்டும்..? யார் மீதாவது கோபமென்றால் முதலில் அடித்துவிட்டுதான் பேசுவார். "எதிராளிக்கு அவகாசம் கொடுக்கக்கூடாது. முதல் அடி நம்ம அடியா இருக்கணும்!" - இது பாலய்யா பாலிஸி.
"தெப்ப ச்சேசின மேலு அன்னதம்முலு ச்சேஸ்தாரா?" என்பார்! (அடி உதவுற மாதிரி அண்ணன் தம்பிகூட உதவ மாட்டார்கள்)

வீட்டில் எல்லோருக்கும் இவரின் மீது வருத்தம் உண்டு. அப்பா என்.டி.ஆர், ஒருநாளில் வேலை பார்க்க, அடுத்த நாளில் சில மணிநேரங்களைக் கடன்வாங்கி வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அவ்வளவு பிஸி. பெரிய குடும்பம் என்பதால் பாலய்யாவைக் கண்டிக்க ஆளே இல்லை.

ஒருநாள் சக மாணவனை அடித்து விட்டார். அடியென்றால் சும்மானாச்சுக்கும் அடி இல்லை. ஒவ்வொன்றும் இடி. கல்லூரியில் பெரிய பிரச்னையாகிவிட்டது. பாலய்யா மீது ஏற்கனவே பிராது கொடுத்தவர்கள் ஒன்றுசேர்ந்து கல்லூரியில் புகார் கொடுத்தார்கள்.

பிரபல நடிகரின் மகன் என்பதால் சலுகை கொடுப்பதாக அடிவாங்கிய பையன்களின் பெற்றோர் புகார் சொன்னார்கள். கல்லூரியிலிருந்து நின்றுவிடலாம் என ஜாலியாகத்தான் இருந்தார் பாலய்யா. ஆனால் நடந்தது வேறு.

வேலைகளை அப்படியே போட்டுவிட்டு கல்லூரி நிர்வாகத்தின் முன் நின்றார் என்.டி.ஆர். "ஏன் அடிச்சே?" என்று கேள்விகேட்டவருக்கு பாலய்யா சொன்ன பதிலில் சிரிப்பதா கோபப்படுவதா என்றே தெரியவில்லை.

"என்னோட குரு, கடவுள், வழிகாட்டி எல்லாமே நீங்கதான் அப்பா. இங்கே இருக்குறவங்க அக்கினேனி நாகேஸ்வர ராவையும் சோபன் பாபுவையும் வேணும்னே தூக்கி வெச்சுப் பேசி உங்களைக் கேலி பண்ணினதாலதான் அடிச்சேன்!" - இப்படி அவர் சொன்னதைப் பார்த்து கோபம் நியாயம் தானே எனத் தோன்றும். ஆனால் அது மட்டுமே காரணம் இல்லை.


"இவன் என்னைப் பாத்து முறைச்சான்!", "அவன் என்னைப் பார்த்து சிரிச்சான்!" என உப்பு பெறாத விஷயத்துக்லெல்லாம் அடித்திருக்கிறார். என்.டி. ஆருக்காக பாலய்யாவை மன்னித்து நடவடிக்கை எடுக்காமல் விட்டதே பெரிய விஷயமாகிப் போனது.

பாலய்யா AI சித்தரிப்பு

மகனின் கோபத்தைக் கட்டுப்படுத்த ஆன்மிகமே சரி... பகவத் கீதை சிறந்த வழியாக இருக்கும் என்று நம்பி வீட்டிலேயே பகவத் கீதை உபன்யாசம் பண்ண ஒருவரை ஏற்பாடு பண்ணினார் என்.டி.ஆர். அப்பா மீது அன்பையும் மரியாதையையும்
அன்லிமிட்டாக வைத்திருக்கும் பாலய்யா, பட்டப்படிப்பை முடிக்கும்வரை நல்ல பிள்ளையாய் இருந்தார். கோபம் என்பது பிறவிக்குணம். அதைக் கட்டுப்படுத்தும்போது ஒருநாள் பெரும் பிரளயமாக வெடிக்கும் என்று என்.டி.ஆர் அப்போது அறிந்திருக்கவில்லை.

'நானாவுக்கோசரம் ' என்று மட்டுமில்லாமல் பொதுவாகவே கோபக்காரரான பாலய்யாவுக்குப் பெற்றோரைத் தவிர யார் காலிலும் விழுவது பிடிக்காது. வீட்டில் உபன்னியாசம் பண்ணியவர் தன் காலில் விழச் சொன்னபோது பெரும் பாடமே எடுத்திருக்கிறார். "நீ சும்மாவே உட்காருப்பா!" எனச் சொல்லி புல்ஸ்டாப் வைத்திருக்கிறார் உபன்னியாசர்.  

கல்லூரி நாட்களில் அப்பா நடித்த 'ராமுடு'என டைட்டில் முடியும் படங்களை தியேட்டரில் போய் அலப்பறை கிளப்பிப் பார்ப்பதை வழக்கமாக்கி வைத்திருந்தார் பாலய்யா. ரிலீஸ் நாட்களில் வெறித்தனமான என்.டி.ஆர் ரசிகனாய் மாறிடுவார். உயரமான கட்-அவுட்டுகள் வைத்து வான வேடிக்கைவிட்டு மாஸ் காட்டுவார்.

சென்னையிலிருந்து ஹைதராபாத்துக்கு வீடு ஷிஃப்ட் ஆனபிறகு தி.நகர் வீட்டை ஒரு தொழிலதிபருக்கு விற்றுவிட்டார்கள். சென்னையை விட்டுப் போக வேண்டாம் என எம்.ஜி.ஆர் உரிமையோடு என்.டி.ஆரிடம் கோரிக்கை வைக்க... "நான் எப்ப வந்து தங்கணும்னாலும் உங்க வீடு இருக்குல்ல அண்ணா!" என சொல்லியிருக்கிறார் என்.டி.ஆர்.

என்.டி.ஆர், எம்.ஜி.ஆர்
எம்.ஜி.ஆரை பெரியப்பா என்றும் சிவாஜியை சித்தப்பா என்றும் உரிமையோடு அழைப்பார் பாலய்யா.

கமல் மட்டுமல்ல பாலய்யாவும் சிவாஜி யின் 'அன்னை இல்ல'த்தில் 'உண்டுறங்கி' விளையாடியவர் தான். சாப்பாட்டு பிரியரான பாலய்யா உரிமையோடு சிவாஜி வீட்டுக்கு சாப்பிடுவதற்காக மட்டுமே கிளம்பிப் போய் வருவார்.

அவுட்டோர் ஷூட்டிங்கில் சிவாஜி இருந்தால் விஷயம் கேள்விப்பட்டு போன் அடிப்பார். "அண்ணன் மவன் வருவான்... பெசல் அயிட்டம் செஞ்சு போடுங்கடா!" என்று உத்தரவு பறக்கும். தலை வாழை இலை போட்டு டெஸ்ட் மேட்சுக்கு வந்த பேட்ஸ்மேன் போல நிதானமாய் களமாடுவார் பாலய்யா. பலநாட்கள் உண்ட மயக்கத்தில் தூங்கி எழுந்து செல்வதை வாடிக்கையாகவும் வைத்திருந்தார்.

சிவாஜி, எம்.ஜி.ஆர், பாலய்யா AI

எம்.ஜி.ஆரும் நன்கு உபசரிப்பார் தான். ஆனால், அவர் வீட்டில் கூட்டமாய் இருக்கும். அதனால் அங்கு சாப்பிடுவதைத் தவிர்ப்பார்.  சாப்பிடும்போது யாரும் கண் வைக்கக்கூடாது என்பது பாலய்யாவின் பாலிசி. "சிவாஜி சித்தப்பாவைப் பார்த்து தான் ரசிச்சு ருசிச்சு சாப்பிடக் கத்துக்கிட்டேன்" என்பார் பாலய்யா.
"நல்லா வயிறுமுட்ட சாப்பிடணும். நல்லா ஓடணும்!" - இதுவும் அவர் பாலிசி தான். இப்படி எல்.ஐ.சியின் ஜீவன் தாரா, சுரக்‌ஷா பாலிசிகள் போல சாப்பாட்டு விஷயத்தில் பல பாலிசிகளை வைத்திருந்தார் பாலய்யா.

தன் தந்தை கடைபிடித்த வித்தியாசமான உணவுமுறை அதில் ஒன்று.  இப்போது வயதும் வயிறும் தர்ணா பண்ணுவதால் விட்டுவிட்டார். அது என்னவென்றால் ஒருநாளைக்குத் தேவையான உணவை அதிகாலை சூரியன் உதிப்பதற்குள் எடுத்துக்கொள்வது. ஒரு வறுத்த முழுக்கோழியை காலையில் எடுத்துக்கொண்டால் அன்றைய நாளில் ஆகாரமே தேவைப்படாது.  அது தரும் கலோரியில் அன்றைய நாள் முழுக்க நிற்காமல் வேலை பார்க்கலாம் என்பது என்.டி.ஆர் அப்போது கடைபிடித்த கடினமான உணவுப்பழக்கம். கரணம் தப்பினால் மரணம் போல அதை அவரின் கேரியர் உச்சத்தில் பண்ணியதைப் பார்த்து பாலய்யாவும் ஃபாலோ பண்ணினார்.

அந்த ஸ்டைலில் சாப்பிடுவதைத் தவிர்த்தால் அன்லிமிட் ராஜபோஜனம் தான்.சாப்பாட்டு விஷயத்தில் டயட் அது இது என்று வரைமுறை வைத்துக்கொள்ள மாட்டார். பறப்பன ஊர்வன தவழ்வன என எல்லாவற்றையும் சாப்பிடுவார். கெட்டி எருமைத் தயிரில் ஃபுல்ஸ்டாப் வைப்பார். ஒரே ஒரு கன்டிஷன்... யாரும் சாப்பிடும்போது தும்மி விடக்கூடாது. செமையாய் கோபமாகி பாதியில் எழுந்து போய்விடுவார். மற்றபடி சாப்பாட்டை விரயம் பண்ணுவது பிடிக்காது பாலய்யாவுக்கு.


இப்படி சாப்பாட்டு விஷயத்தில் தான் மட்டும் லயித்து சாப்பிடாமல் விருந்தினர்களை உபசரிப்பதிலும் பாலய்யா கில்லி தான். இன்றும் எம்.எல்.ஏவாக , முதல்வரின் மச்சானாகவும் சம்பந்தியாகவும் இருப்பதால் நேரம் கிடைக்கும்போதெல்லாம் தொகுதி மக்களுக்கு தலைவாழை விருந்து வைத்து அழகு பார்க்கிறார். தன்னை சந்திக்க வந்தவர்களை வயிறு முட்ட சாப்பிட வைத்து அன்பில் திக்குமுக்காட வைப்பது பாலய்யா ஸ்டைல். இதை ரொம்பவே உறுதியாக இன்றுவரை கடைபிடிக்கிறார். இதனால் சிலரின் கோபத்துக்கு ஆளானது தனிக்கதை.

இப்படி பேரன்பும் பெருங்காரமும் கொண்ட மனிதராய் இருந்த பாலய்யாவை கட்டுப்படுத்த என்.டி.ஆராலேயே முடியவில்லை. கில்லி பிரகாஷ் ராஜ் தன் அப்பாவை டீல் பண்ணுவதைப்போல போயிருப்பாரோ என்னவோ கால்கட்டுப் போட்டு கோபத்தைக் கட்டுப்படுத்தலாம் என முடிவெடுத்து 22 வயதிலேயே கல்யாணம் செய்து வைத்தார்கள்.

பாலய்யா, வசுந்தரா

தேவ்ரபள்ளி சூர்ய ராவ் என்ற டிராவல்ஸ் நிறுவன அதிபர் மகள் வசுந்தரா தேவிக்கு மணமுடித்து வைத்தார்கள். ஓரளவு அது ஒர்க்-அவுட்டும் ஆனது. திருமணத்துக்கு முன் ஒரு கரும்புக்காட்டையே எரிக்கும் கோபக்கனலோடு வளைய வந்தவர், கொஞ்சம் 'சாந்தமு லேதா சௌக்கியமு லேது' மோடுக்கு மாறினார்.

"வசுந்தரா வர்றதுக்கு முன்னாடிலாம் வேறமாதிரி இருந்தேன். இன்னிக்கு என்மேல கேசு கீசு இல்லாம இருக்கேன்னா அதுக்குக் காரணம் என் மனைவி தான். ரொம்ப கடவுள் பக்தி உள்ளவங்க. என்னை நல்லா புரிஞ்சு வெச்சுட்டு ஒரு குழந்தையைப்போல பார்த்துக்குறாங்க. நான் தப்புத்தண்டா போகமாட்டேன்னு நம்புறாங்க. அதனால என்மீது வரும் விமர்சனங்களைக் கண்டுக்குறதே இல்லை!" என்று சமீபத்திய பேட்டியொன்றில் சொல்லியிருக்கிறார் பாலய்யா.

கோபத்தைக் கன்ட்ரோல் பண்ண ஆரம்பித்து விட்டார். அதில் பாதி வெற்றியும் பெற்றுவிட்டார். அப்படின்னு யார் சொன்னா..? பாலய்யாவே தான்.!

ஆனால், 2018-ல்  நடந்த ஒரு சம்பவம் அதகளம். தன்னைப் பார்த்து ஷூட்டிங் ஸ்பாட்டில் சிரித்த உதவி இயக்குநரை அடிக்கப் பாய்ந்திருக்கிறார் பாலய்யா. நல்லவேளை நம்ம கே.எஸ்.ரவிக்குமார்தான் படத்தின் இயக்குநர் என்பதால் நடுவில் விழுந்து காப்பாற்றியிருக்கிறார்.

"அவன் என் அசிஸ்டெண்ட் சார்... உங்களைப் பார்த்துலாம் சிரிச்சிருக்க மாட்டான் சார். கோபப்படாதீங்க சார்!" என கட்டிப்பிடித்து விலக்கியிருக்கிறார். மழையில் நனைந்த கோழிபோல நடுநடுங்கி அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கிறார் அந்த உதவி இயக்குநர். ஆனாலும், "செப்புரா எந்துக்கா நகத்துனாரு...நீ ஆப்போசிட் கேங்கா?" என சத்தம் போட்டிருக்கிறார். சிரஞ்சீவி ரசிகர் தன்னை ஷூட்டிங் ஸ்பாட்டில் புகுந்து கலாய்க்க வாய்ப்பிருப்பதாக இப்போதும் நம்புகிறார் பாலய்யா!
அதென்ன சிரஞ்சீவி கேங்..?

பாலய்யா

பாலய்யா குழந்தை நட்சத்திரமாகக் கலக்கிய நாட்களைக் கடந்து ஹீரோவாய் மாஸ் எண்ட்ரி கொடுத்தபோது பெரும் தடைக்கல்லாய் இருந்தது சிரஞ்சீவி என்ற பிம்பம் தான்.  சிரஞ்சீவியால் தன்னுடைய வளர்ச்சி கொஞ்சம் மட்டுப்படுத்தப்பட்டதாக நம்புகிறார் பாலய்யா. அதில் உண்மையும் இருக்கிறது.
இன்றும் பாலகிருஷ்ணாவை அதிகம் ட்ரோல் செய்வது சிரஞ்சீவி ரசிகர்கள் தான்.

கோபத்துக்கு அது மட்டும் காரணம் இல்லை. அன்று உதவி இயக்குநர் தன்னைப் பார்த்து ஏன் சிரித்தார் என்று பாலய்யாவுக்கும் தெரியும். தன் தலையில் மாட்டியிருந்த விக் சரியாக பொருந்தாமல் கழன்று வந்ததுதான் காரணம்.

ஆம்...பாலய்யாவின் இன்னொரு வீக்னெஸ் அவர் தலையை அலங்கரிக்கும் அந்த 'விக்'. விக்குக்காக அவர் செய்த அட்ராசிட்டியால் ஹைதராபாத் போலீஸே ஆடிப்போன கதை தெரியுமா?

(தொடரும்...)

பாலய்யா வஸ்தாவய்யா 4 : `ஆட்டமு தேரோட்டமு' - பிறந்த நாளுக்குக் குவிந்த கூட்டம்; சாட்டை எடுத்த பாலய்யா

ஒரு 'பாலய்யாஜோக்' ஆந்திரா பக்கம் காலேஜ் அளவில் பாப்புலர்.*"ஒருவேளை பாலய்யா இப்ப பிறக்காம 150 வருஷத்துக்கு முன்னாடி பிறந்திருந்தா என்ன ஆகியிருக்கும்?"**"இந்திய சுதந்திரத்துக்காக வெள்ளைக்காரங்க நம்மக்கி... மேலும் பார்க்க

பாலய்யா வஸ்தாவய்யா 3: ஒரு விக்குக்கு இத்தனை அக்கப்போரா? - போலீஸையே சுற்றலில் விட்ட பாலய்யா

அது ஒரு ஏப்ரல் மாதத்தின் உச்சந்தலையில் உளி வைத்து அடிக்கும் வெயில் பொழுது...ஹைதராபாத் ஜூப்லி ஹில்ஸ் பகுதியில் இருக்கும் பாலய்யாவின் வீடு பரபரப்பில் இருந்தது. காவல்துறை வாகனங்களும், அவரது தனியார் பாதுக... மேலும் பார்க்க

Allu Arjun: 1600 கி.மீ சைக்கிள் பயணம்; அல்லு அர்ஜுனைக் காண வந்த உ.பி ரசிகர்

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அல்லு அர்ஜுன்.இவரது நடிப்பில் வெளியான 'புஷ்பா’ படம் ஹிட் ஆனதைத் தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். இப்படம் டிசம்பர் 6 ஆம் தேதி... மேலும் பார்க்க

Devara Review: பக்கா ஆந்திரா மீல்ஸ் உந்தி சார்... கானி காரம், சால்ட் மாத்ரம் லேது சார்!

செங்கடல் என்றொரு கடல். அதன் அருகில் நான்கு மலை கிராமங்கள் இருக்கின்றன.அந்த நான்கு கிராமங்களுக்கு ஒவ்வொரு தலைவர்கள். தேவரா (ஜூனியர் என்.டி.ஆர்), பைரா (சயீஃப் அலி கான்), குஞ்சாரா - கோரா (கலையரசன், சைன் ... மேலும் பார்க்க