செய்திகள் :

பாலய்யா வஸ்தாவய்யா 4 : `ஆட்டமு தேரோட்டமு' - பிறந்த நாளுக்குக் குவிந்த கூட்டம்; சாட்டை எடுத்த பாலய்யா

post image
ஒரு 'பாலய்யாஜோக்' ஆந்திரா பக்கம் காலேஜ் அளவில் பாப்புலர்.

*"ஒருவேளை பாலய்யா இப்ப பிறக்காம 150 வருஷத்துக்கு முன்னாடி பிறந்திருந்தா என்ன ஆகியிருக்கும்?"*

*"இந்திய சுதந்திரத்துக்காக வெள்ளைக்காரங்க நம்மக்கிட்ட போராடியிருப்பாங்க!"*

ஆமாம். பாலய்யா அகராதியில் எல்லாமே தலைகீழாகத்தான் இருக்கும். அன்போ - வம்போ அவர் படங்களில் வருவது போல அவரிடமிருந்து நம்பவே முடியாத மீட்டரில் அது இருக்கும். அப்படி பாலய்யா  செய்த அட்ராசிட்டிகளில் முக்கியமானது என்ன தெரியுமா? கோபத்தைக் கன்ட்ரோல் செய்ய முடியாமல் எசகுபிசகாய் ஏதாவது வம்பில் மாட்டிக் கொள்வது. 

கோபத்தில் இருவகை உண்டு. நம் கோபம் பிறரைப் புண்படுத்தும். இரண்டாவது பிறரை பண்படுத்தும். இரண்டாவதில் ரைமிங்குக்காக அப்படிச் சொன்னாலும் கோபத்தில் பிறரை வழிநடத்துவது. பஸ் கன்டக்டர் படியில் தொங்கும் ஆட்களை கடிந்து கொள்வதுதான் இவ்வகைக் கோபத்தின் கம்மியான 'அளவீடு.' பாலய்யா இவ்வகையில் அதிகபட்சமாய் 'ஆளவிடு!'

பாலய்யா

லேபாக்‌ஷி ஜடாயு திருவிழாவை சிங்கிள் மேனாக நடத்திக் காட்டும்போது அத்தனை கோபப்படுவார். ஆனால், விழா சிறப்பாக நடந்து மீடியாக்களில் கொண்டாடப்படுவதைச் சொல்லலாம். ஆனால் துரதிருஷ்ட வசமாக முதல் வகை கோபமே அதிக அளவில் பாலய்யாவிடமிருந்து வெளிப்படும்!

2018-க்குப் பிறகு பாலய்யாவின் ஜூப்லி ஹில்ஸ் வீட்டின் முன் கூட்டம் கூட்டமாக யாரும் வாழ்த்து சொல்ல நிற்பதில்லை. பாசத்தலைவனுக்கு பாராட்டுவிழா போன்ற நிகழ்வுகளை நடத்தும்போது ரோஜாப்பூ மாலையில் சின்னதாய் முள்ளோ காம்போ குத்தினால்  மாலைபோட்ட ஆளையே அடிக்கப் பாயும் அளவுக்கு கோபத்தைக் காட்டிவிடுவார். 

இதனாலேயே அவருக்கு மாலை மரியாதை செய்யும்போது தெலுங்கு தேசம் கட்சிக்குள் இன்னொருவருக்கு மாலை போட்டு 'குவாலிட்டி செக்' பண்ண வேண்டிய காமெடிக் கூத்தும் நடக்கும். அன்புடன் பாயாசம், கேசரி போன்ற பட்சனங்கள் கொடுக்கப்படும் முன்னர் பார்த்துக் கொடுக்க வேண்டும். ஏனென்றால் ஆலகால விஷத்தை ஏக காலத்தில் குடிப்பதுபோல குடித்து `ஜென்டில்மேன்' படத்தில் செந்தில் மீது கவுண்டமணி துப்புவது போல முகத்திலேயே துப்பிய சம்பவமெல்லாம் நடந்தது பாலய்யாவின் பாய்சன் வரலாறு!

விஷயத்திற்கு வருவோம். 2018 ஜூன் 10-ம் தேதி பாலய்யாவின் பிறந்தநாள் கொண்டாட்டத்துக்காக ரசிகர் படை பாலய்யா வீட்டின் முன் குவிந்தது. "பாலய்யா... பாலய்யா... ஜெய் பாலய்யா!" கோஷங்கள் விண்ணை முட்டின. பால் காவடி பறவைக் காவடி எடுக்காத குறையாக 'ஆட்டமு தேரோட்டமு' என ரசிகர்கள், பாலய்யா மீது அன்பை ஏக்கர் கணக்கில் காட்டினர். 

பாலய்யா ai

ஆந்திரா தெலங்கானா மாநிலங்களின் மூலை முடுக்கிலிருந்தெல்லாம் வந்திருந்தனர். அன்றுகாலை எழுந்ததிலிருந்து ஒவ்வொரு மணி நேரத்துக்கு ஒருமுறை கேட் அருகே வந்து மக்கள் வெள்ளத்தில் மூழ்கி நனைந்து திளைத்து உள்ளே சென்ற வண்ணம் இருந்தார். உடம்பும் ஒத்துழைக்க மறுத்தது.  ஒரு கட்டத்தில் கூட்டம் கட்டுக்கடங்காமல் கட்டவிழ்க்கப்பட்ட காளை போல கேட்டைத்தாண்டி வீட்டின் உள்ளே வர எத்தனித்தது. பாலய்யாவுக்கு கோபம் தலைஉச்சிக்கு ஏறியது.

மைக் ஏற்பாடு செய்து கூட்டத்தைப் பார்த்து, தனக்கு களைப்பாக இருப்பதாகவும் ஓய்வெடுக்க வீட்டினுள் செல்வதால் எல்லோரும் அவரவர் வீட்டுக்குச் செல்லுங்கள் என்றும் கண்டிப்பான குரலில் சொன்னார். கடலில் கரைத்த பெருங்காயமாக அது கூட்டத்தை எதுவும் செய்யவில்லை. சொல்லப் போனால் 'தேவுடு தரிசனம் முடியப்போகுதா?' என விசனப்பட வைத்தது. எப்படியாவது பாலய்யாவை நெருங்கி தரிசிக்க வேண்டும் என  நெட்டித்தள்ளி அவரை கேட்டைத் தாண்டி உள்ளே வந்து நெருக்கியது. சிலர் அவர் கையை, கன்னத்தை 'பிரசாதமு' எனத் தொட்டனர். ஒருவரின் நகம் கையைக் கீறியது. போச்...!

பாலய்யா கண்களில் கனல். அகத்தில் அனல். 

விறுவிறுவென வீட்டுக்குள் சென்று எதையோ எடுத்து வந்தார். கைகளை பின்னுக்குள் கட்டியிருப்பதால் அவர் என்ன வைத்திருக்கிறார் என கூட்டத்தில் யாருக்கும் தெரியவில்லை. உதவியாளர்களிடம் சொல்லி கேட்டை சாத்தச் சொன்னார். வீட்டை பூட்டப் போறோம் போயிடுங்க என சொல்லியபடி கேட்டை இழுத்து சாத்தினர்.

உள்ளே சிலர் மட்டும் மாட்டிக் கொள்ள பாலய்யா ஆக்ரோஷமாக அந்தப் பொருளை எடுத்தார். அது ஒரு சாட்டை. அதைவைத்து எங்கள் வீட்டுப்பிள்ளை எம்.ஜி.ஆர் போல விளாசத் தொடங்க, எகிறிக்குதித்து உள்ளுக்குள் இங்கும் அங்கும் ஓடினர். "உர்ரே... தங்கத்தை திம்பிகளாடா?" என்று இந்தியன் 2-வில் குதிரை வர்மம் போட்டு  இந்தியன் தாத்தா சிதறவிட்டதைப்போல கூட்டத்தை ரவுண்டு கட்டினார். 

பாலய்யா

'நெல்லிக்காய் மூட்டை சிதறியதைபோல ஓட வீட்டுக்கு முன்னே இருந்த மினி தோட்டத்துச் செடிகால் நசுங்கின. அவ்வளவுதான் முடிச்சு விட்டீங்க போங்க...!' மொமண்டுக்குப் போனதோடு விட்டால்போதும் என எகிறிக்குதித்து எஸ்கேப் ஆகினர். விஷயம் பரவ அதுவே அவர் இமேஜை டேமேஜ் பண்ணியது. 

அடுத்தடுத்த ஆண்டுகளில் இன்றுவரை 'இந்தக் கேட்டைத் தாண்டி நாங்களும் வர மாட்டோம்... நீங்களும் வரக்கூடாது' மொமண்ட்டுக்கு ரசிகர்கள் போனார்கள். கூட்டம் வெளியே 50 அடி தள்ளி நின்று தரிசிக்கிறது. 'என்னதான் இருந்தாலும் பாலய்யா அப்படி செய்திருக்கக்கூடாது' என ஒருபக்கம் அவரைக் குற்றம் சொன்னாலும், "அடேய்களா ரத்தக்காவு வாங்கி பிராண்டி வெச்சீங்கன்னா அந்த மனுஷன் என்னதான் பண்ணுவான்?" என அவர் கோபத்தை நியாயப்படுத்தவும் செய்கிறார்கள். எது எப்படியோ இந்த கோபக்கோர கோங்குராவால் சில அதிரடியான 'நல்ல' விஷயங்களும் நடந்திருக்கிறது. 

ஒருமுறை பாலய்யாவைச் சந்திக்க அவரது எம்.எல்.ஏ அலுவலகத்துக்கு வயதான ஒரு மூதாட்டி வந்திருக்கிறார். அப்போது எம்.எல்.ஏ பாலகிருஷ்ணா, ஹைதராபாத்தில் ஷூட்டிங்கில் பிஸி. பாலய்யாவின் பி.ஏ.,  போன் காலில் பிஸியோ பிஸி. மூதாட்டியின் தோற்றமும் பி.ஏவுக்கு அவ்வளவு உவப்பானதாக இல்லை. மூதாட்டியின் கண்கள் கலங்கி, குரல் உடைந்த நிலையில் எதையோ சொல்ல முற்பட்டிருக்கிறார்.  பாலய்யாவின் பி.ஏ, மூதாட்டி தன்னிடம் பிச்சைக் கேட்பதாக நினைத்துக்கொண்டு,

"அடப் போம்மா அங்கிட்டு... இதே வேலையாப்போச்சு... போ போ..!" என விரட்டிவிட்டு,  போனில் லயித்து  பேச்சைக் கன்டினியூ பண்ணியிருக்கிறார். ஒரு மணி நேரம் கழித்து பாலய்யாவின் பிரைவேட் போன் நம்பரிலிருந்து கால் வர, பேச்சைத் துண்டித்துவிட்டு பவ்யமாக "சொல்லுங்க சார்!" எனப் பேசியிருக்கிறார். 

பாலய்யா

தெலுங்கு மொழியில் உள்ள கெட்டவார்த்தைகள் அத்தனையும் பிரயோகித்து வெளுத்துவாங்கியிருக்கிறார் பாலய்யா. 'ஒய் ப்ளட்...ஷேம் ப்ளட்' மொமண்ட்டுக்கு போய்விட்டார் அந்த பி.ஏ. அடுத்து பேசியதுதான் சடுகுடு சம்பவம்.

"கிறுக்குப் பயலே... அந்தம்மா யார் தெரியுமா? என் அப்பாவோடு பல படங்கள்ல துணை நடிகையாக நடிச்சவங்க... ரொம்ப நாள் கழிச்சு அவங்களே எங்கிட்ட உதவி  கேட்கலாமா வேணாமான்னு யோசனையோட உதவி கேட்டு நேத்து இங்கே வந்திருந்தாங்க.   நான் தான் இன்னிக்கு எம்.எல்.ஏ ஆபிஸுக்கு  வரச் சொல்லியிருந்தேன். வாழ்க்கையில நல்லது நடக்கும்னு நம்பிக்கையோட வந்திருப்பாங்க... இப்போ உன்னால எனக்குக் கெட்டப்பெயர். அவர் மகன் இப்போ அந்தம்மாவைக் கூட்டிக்கிட்டு திருப்பதிக்குப் போயிட்டான் டா! அட்ரஸ் வேற எங்கிட்ட இல்ல... 

ஒழுங்குமரியாதையா அந்தம்மாவை தேடிக் கண்டுபிடிச்சு  உன் அக்கவுன்ட்டில் இருக்கும் மொத்தப் பணத்தையும் எடுத்துக் கொடுத்துட்டு எனக்கு வாட்ஸ் அப்பில் போட்டோ அனுப்பி வை. சும்மா கண்துடைப்பா எதுனாச்சும் பண்ணினே... அவ்வளவுதான். அப்புறம் வழக்கம்போல என்னை ஏமாத்தணும்னு நினைச்சு அசால்ட்டா செய்யாம இருந்தேன்னு வெச்சிக்கோ... நாளைக்கு நான் தொகுதிக்கு வர்றேன்... உன்னைப் பார்த்த இடத்துல மிதிச்சே கொன்னு புதைச்சுட்டுத்தான்  மறுவேலையே பார்ப்பேன்!’’ என்று சொல்லியிருக்கிறார். நல்ல வேளையாக அந்த நேரம் வீடு கட்டுவதற்கென  பேங்கில் வாங்கின லோன் தொகை 30 லட்சம் ரூபாய் அவர் அக்கவுன்டில் இருந்தது. உதை வாங்கிய முன் அனுபவமும் உதவியாளருக்கு நிறையவே இருந்தது. 

`இதுக்கு மேலே தாங்க முடியாது குருநாதா!’ என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டு ஒரு பெரும்படையோடு திருப்பதியை சல்லடை போட்டுச் சலித்துத் தேடியிருக்கிறார் அந்த பி.ஏ. 

இளம் வயது பாலய்யா

சீஷன் களை கட்டிய சமயம் என்பதால் அந்த மூதாட்டியை அவரால் ரீச் பண்ண முடியவில்லை. மன்னிப்பு கேட்டு கால்ல விழுந்தா மன்னிச்சிடுற ஆளும் பாலய்யா இல்லை. அடிக்குப் பயந்தே அப்படியே  தலைமறைவாகிவிட்டார் அந்த அப்பாவி பி.ஏ.

அந்த பி.ஏ-வின் மனைவி கண்ணைக் கசக்கியபடி வந்து தன் கணவரைக் கண்டுபிடித்துத் தரச் சொல்லி பாலய்யாகிட்டவே மனு கொடுத்து கதறியழுது மன்றாடினார். கோபமாக பாலய்யா பேசிய 'கொன்னு புதைச்சுருவேன்' என்ற வார்த்தைகளை வேறு கெட்டியாக பிடித்துகொண்டு வேறு மாதிரி செய்தி பரவ ஆரம்பித்தது.

பாலய்யாவுக்கு வியர்த்துவிட்டது. மீடியாவும் இந்த விஷயத்தை பெரிதாக்க, 'தற்கொலை செய்து கொண்டாரா பாலய்யா பி.ஏ..?' என செய்தியாக்கின. பாலய்யாவுக்கு ஆகாத மீடியா ஒன்று ஒருபடி மேலே போய், 'தன் பி.ஏவைக் கொன்று புதைத்தாரா பாலய்யா?' என பரபரப்புக்கு பந்தி வைத்தது.

"தேவுடா என்னைக் காப்பாத்து!" என்று ஏழுமலையானை வேண்டியபடி மூன்று ஸ்பெஷல் டீம் அமைத்து தேடச் சொன்னார் பாலய்யா. சரியாக 5 நாட்கள் கழித்து, மூதாட்டியையும் பி.ஏ-வையும்,  இரண்டு வெவ்வேறு கிராமங்களிலிருந்து கண்டுபிடித்து  பாலய்யா முன் கொண்டுவந்து நிறுத்தினார்கள். அப்போதுதான் போன உயிர் அவருக்கு வந்தது. 'அப்பாடா' என்று பெருமூச்சு விட்டார். 

பாலய்யா பற்றி இந்த இரண்டு சம்பவங்களும் சின்ன சாம்பிள் தான். இதைவிட அவர் பண்ணிய சம்பவங்கள் நிறையவே இருக்கின்றன. அதை ஒவ்வொன்றாக பார்க்கலாம். 

சென்ற எபிசோடில் சிரஞ்சீவியுடன் அவருக்கு இருந்த சினிமா மோதல் பற்றி சொல்லியிருந்தேன். 16 முறை இவர்களின் படங்கள் போட்டிபோட்டு தியேட்டர்களில் மோதியபோது ஆந்திராவே அலறியது. 1985-ல் சிரஞ்சீவியின் 'சட்டம்தோ போராட்டம்' படமும்  பாலய்யாவின் 'ஆத்மபலம்' படமும் நேருக்கு நேராக மோதின. இப்போது போல் அப்போதெல்லாம் மல்ட்டிப்ளக்ஸ்கள் இல்லை. ஆனாலும் அருகருகே இருந்த தியேட்டர்களில் ரசிகச் சண்டை, மண்டை உடைப்பு, ஸ்க்ரீன் கிழிப்புமாக சட்ட ஒழுங்கு பிரச்னையாகவே மாறியது. சங்க்ராந்தி பண்டிகை இவர்களின் ரசிகர்களாலேயே சங்கடாந்தியாக வருடந்தோறும் மாறியது. 

 80-90 களில் வெளி வந்த சிரஞ்சீவியின் பல படங்கள்...  குறிப்பாக 'தொங்க மொகுடு', 'மஞ்சி தொங்கா', போன்ற திருடனை மையமாக வைத்த படங்கள் எல்லாம் மெகா ஸ்டார் என்ற பட்டத்தை சிரஞ்சீவிக்குக் கொடுக்க பாலய்யா படங்கள் பல ஸ்லீப்பர் ஹிட்டுகளாக மட்டும் நின்றன. 1989-ல் 'பலே தொங்கா' என்ற படத்தின் மூலம் அந்த 'திருட்டு' ஹிட் ஃபார்முலாவை தனதாக்கிக் கொண்டார் பாலய்யா. சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடித்த விஜயசாந்தி தான் இதில் பாலய்யாவுக்கு ஜோடி. படம் அதிரிபுதிரி ஹிட்டடிக்க பாலய்யா ரசிகர்கள் கொண்டாடிக் கொளுத்தினர்.

பாலய்யா, வெங்கடேஷ், சிரஞ்சீவி

சிரஞ்சீவியின் ஆரம்பகாலப் படங்கள் பாக்ஸ் ஆபிஸில் பாலய்யா படங்களை ஓவர்டேக் பண்ணினாலும் பாலய்யா ஆர்மி அவ்வளவு லேசில் தங்கள் தலைவனை விட்டுக்கொடுக்கவில்லை. சில படங்களின் வெற்றி சிரஞ்சீவி ரசிகர்களையே ஆட்டம் காண வைத்தது என்பதே நிஜம்.

2000-க்குப் பிறகு பாலய்யா படங்கள் ரிவெஞ்ச் மோடுக்கு மாறிவிட்டன. சொல்லப்போனால் கொஞ்சம் அட்வான்ஸாக 1999-லிருந்து தொட்டதெல்லாம் ஹிட் மோடுக்கு மாறினார் பாலய்யா. ஃப்ளாப் ஹிஸ்டரி இல்லாமல் ஆவரேஜாவாது ஓடிவிடும் ராசியான ஸ்டாராகவும் ஆனார். ஆனால் சிரஞ்சீவியின்  படங்கள் பல ஃப்ளாப் ஆகின. 1999-ல் பாலய்யாவின் சமரசிம்மா ரெட்டியும் சிரஞ்சீவியின் சினேகம் கோசமும் CLASH விட்டன.

நம்ம ஊர் நட்புக்காக படம் தான் `சினேகம் கோசம்'. ஆவரேஜாக ஓடியது. ஆனால் பாலய்யாவின் `சமரசிம்மா ரெட்டி' ஓடிய ஓட்டத்தில் ஆந்திராவின் ராயலசீமா பகுதியில் `சினேகம் கோசம்' படத்தை நிறுத்தி அங்கு சமரசிம்மா ரெட்டியை தியேட்டர்களில் ஓட்டினர்.

2001-ல் வெளியான பாலய்யாவின்  'நரசிம்ம நாயுடு' படம் சிரஞ்சீவியின் 'ம்ருக ராஜு'வை துடைத்தெறிந்தது. 

இந்த சங்க்ராந்தி சண்டையில் ரசிகர்கள் மண்டை உடைந்த கதை தெரியும். சிரஞ்சீவியும் பாலய்யாவும் நிஜத்தில் மோதிக்கொண்ட கதை தெரியுமா..?

(தொடரும்...) 

முந்தைய அத்தியாயம் படிக்க - பாலய்யா வஸ்தாவய்யா 3: ஒரு விக்குக்கு இத்தனை அக்கப்போரா? - போலீஸையே சுற்றலில் விட்ட பாலய்யா

பாலய்யா வஸ்தாவய்யா: லோகேஷ், சிவகார்த்திகேயன், கமல் - இது வேற லெவல் பாலய்யா

நம்ம பாலய்யாவின் அடுத்த ரிலீஸ் `டாகு மகாராஜ்' டீசரைப் பார்த்துட்டீங்களா..? என்னது பார்க்கலையா..? உடனே ஓடிப்போய் பார்த்திடுங்க!ஆந்திரா - தெலங்கானாவில் ஏகப்பட்ட எதிர்பார்ப்போடு 'ஜனவரி 12- சங்கராந்தி' ரி... மேலும் பார்க்க

Pushpa 2: `அவர் 6 அடி தங்கம்' - பிரபாஸ் குறித்து அல்லு அர்ஜுன் நெகிழ்ச்சி

தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் சமீபத்தில் பிரபாஸ் குறித்தி நெகிழ்வான கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.புஷ்பா 2 பட ரிலீஸை எதிர்நோக்கியிருக்கிறார் அல்லு அர்ஜுன். ராஷ்மிகா மந்தனா, ஃபஹத் பாசில் நடித்துள்ள ப... மேலும் பார்க்க

Ram Charan: சபரிமலை மாலையுடன் தர்காவில் வழிபட்ட ராம் சரண்; நெகிழ்ந்த ரசிகர்கள்

பிரபல நடிகரான ராம் சரண், இயக்குநர் ஷங்கரின் ' இயக்கத்தில் 'கேம் சேஞ்சர்' படத்தில் நடித்து முடித்திருக்கிறார்.சமீபத்தில் இதன் டீஸர் வெளியாகியிருந்த நிலையில், இத்திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் எனப் ப... மேலும் பார்க்க

பாலய்யா வஸ்தாவய்யா - 11: 'ஜென்ம விரோதிகள் இல்ல; ஆனா..' - அண்ணன் மகன் மீது ஏன் ஈகோ பாராட்டுகிறார்?

எல்லோரும் கங்குவா பார்த்து 'கங்கு' போலக் கொதித்துக் குமுறிக்கொண்டிருக்கிறீர்கள் தானே? அதை ஓரமாக வைத்துவிட்டு வேறொரு `கங்கு' பற்றி தெரிந்து கொள்ள ரெடியா..?தெலுங்கு சினிமா உலகில் சாம்பல் பூத்த 'கங்கு' ப... மேலும் பார்க்க

Mrunal Thakur: ``இப்போது எனக்காகவும் கதைகள் எழுதுகிறார்கள்!'' - நெகிழும் மிருணாள் தாக்கூர்

`சீதா ராமம்’ படம் மூலம் சினிமாவில் பிரபலமானவர் நடிகை மிருணாள் தாக்கூர்.இந்தப் படத்தின் வெற்றி அடுத்தடுத்த படவாய்ப்புகளை உருவாக்கித் தர, தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் ‘ஹாய் நான்னா’... மேலும் பார்க்க

பாலய்யா வஸ்தாவய்யா 10: "அவ்வளவுதான் நம்மள முடிச்சுவிட்டீங்க போங்க..!" - பாலய்யாவையே பதற வைத்த நடிகை

`பாலய்யாவுக்கு பன்ச் கொடுத்த ஆள்' என்றவுடன் அவரின் `லெஜண்ட்' பட ரயில்வே யார்ட் ஃபைட் ஞாபகத்துக்கு வந்தால் நான் பொறுப்பல்ல. ஏனென்றால் பாலய்யாவுக்கு அப்படிபன்ச் கொடுக்கும் அளவுக்கு தெலுங்கு சினிமா இன்டெ... மேலும் பார்க்க