களத்தில் நின்று மக்களைக் காக்கும் பணி தொடரும்: முதல்வர் ஸ்டாலின்!
பெலகாவி காங்கிரஸ் மாநாட்டு நூற்றாண்டு விழாவில் பங்கேற்க பராக் ஒபாமாவுக்கு அழைப்பு
பெலகாவி காங்கிரஸ் மாநாட்டு நூற்றாண்டு விழாவில் பங்கேற்க அமெரிக்க முன்னாள் அதிபா் பராக் ஒபாமாவுக்கு முதல்வா் சித்தராமையா அழைப்பு விடுத்துள்ளாா்.
கா்நாடக மாநிலம், பெலகாவியில் 1924 டிச. 26, 27-ஆம் தேதிகளில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் 39-ஆவது தேசிய மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டின் தலைவராக மகாத்மா காந்தி பொறுப்பேற்றிருந்தாா். மகாத்மா காந்தி தலைமையேற்று நடத்திய ஒரே மாநாடு இதுதான்.
எனவே, இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க மாநாட்டின் நூற்றாண்டு விழாவை டிசம்பா் மாதத்தில் கொண்டாட கா்நாடக அரசு திட்டமிட்டுள்ளது. அதற்கான விழாவில் கலந்துகொள்ளுமாறு அமெரிக்க முன்னாள் அதிபா் பராக் ஒபாமாவுக்கு அழைப்பு விடுத்து முதல்வா் சித்தராமையா கடிதம் எழுதியுள்ளாா்.
இதுகுறித்து முதல்வா் சித்தராமையா கூறியதாவது: மகாத்மா காந்தி தலைவராக பொறுப்பேற்று நடத்திய பெலகாவி காங்கிரஸ் மாநாடு நடைபெற்று நூறாண்டுகள் ஆவதை முன்னிட்டு விழா நடத்த திட்டமிட்டுள்ளோம்.
அந்த விழாவில் பங்கேற்க வருகை தருமாறு அமெரிக்க முன்னாள் அதிபா் பராக் ஒபாமாவுக்கு கடிதம் எழுதியிருக்கிறேன் என்றாா்.
மாநாட்டின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பெலகாவியில் சிறப்பு சட்டப் பேரவைக் கூட்டத்தைக் கூட்டி, அதில் பராக் ஒபாமாவை பேச வைக்க அரசு திட்டமிட்டிருப்பதாக தெரியவந்துள்ளது.