Bank Scam: `மரண தண்டனையை ரத்துசெய்ய 9 பில்லியன் அமெரிக்க டாலர்' - ட்ருங் மை லான்...
போலி சான்றிதழ் கொடுத்து அரசு பணி; 78 பேர் அதிரடி பணி நீக்கம் - நெல்லை மண்டலத்தில் பரபரப்பு!
நெல்லை, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் பேரூராட்சி, நகராட்சிகளில் மாற்றுத்திறனாளிக்களுக்கான பணியிடத்தில் போலி சான்றிதழ் வழங்கி அரசு பணியில் சேர்ந்த 78 பேர் அதிரடியாக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த விவகாரத்தின் ஆரம்பத்தில், மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்த சமூக ஆர்வலரும், வழக்கறிஞருமான வெங்கடேஷ் இது குறித்து நம்மிடம் பேசினார். அப்போது அவர், "நெல்லை, தென்காசி மாவட்டங்களில் 2006 முதல் 2015 காலக்கட்டங்களில் நகராட்சி, பேரூராட்சி அலுவலகங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான காலிபணியிடத்தில் இனசுழற்சி முறை பின்பற்றப்படவில்லை. மாற்றுத்திறனாளி பணியிடத்துக்கு, போலி சான்றிதழ் வழங்கி ஆட்கள் படி நியமனம் செய்யப்பட்டனர். இதில் மிகப்பெரிய அளவில் பண முறைகேடும் நடந்திருந்தது. எனவே இது குறித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அப்போதைய நெல்லை மாவட்ட ஆட்சியர் கருணாகரனிடம் புகார் மனு அளித்தோம்.
தொடர்ந்து மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கின் அடிப்படையில், புகார் தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிட்டது. மேலும், குற்றம்சாட்டப்பட்ட நபர்களுக்கு தகுந்த மருத்துவ பரிசோதனை நடத்தவும் உத்தரவு வழங்கியது. அதன்படி நடந்த மருத்துவ பரிசோதனையில், மாற்றுத்திறனாளிகளுக்கான பணியிடத்தில் பணியமர்த்தப்பட்டவர்கள் உண்மையில் மாற்றுத்திறனாளிகள் இல்லை என தெரியவந்தது. எனவே, இது தொடர்பாக தமிழக அரசு உரிய விளக்கம் அளிக்கவும், போலி சான்றிதழ் கொடுத்து பணியில் அமர்த்தப்பட்டவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? என்பது குறித்து விளக்கம் அளிக்கவும் உயர் நீதிமன்றம் ஆணையிட்டது.
எனவே, மாற்றுத்திறனாளி என போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்தவர்களை பணிநீக்கம் செய்ய அந்தந்த பேரூராட்சி செயல் அலுவர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டது. அதன்படி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள் உள்பட தென்காசி மாவட்டத்தில் புதூர், வடகரை, அச்சன்புதூர், கீழப்பாவூர், சிவகிரி, ராயகிரி, இலஞ்சி உள்ளிட்ட பேரூராட்சிகளில் பணியாற்றுவோர் என 78 பேர் அதிரடியாக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த பணி நீக்கமும் கூட முழு அளவில் நடைபெறவில்லை, பலர் விடுபட்டுள்ளனர். யார், யார் எந்தெந்த பணியிடத்தில் உள்ளார்கள், எப்போது பணியில் சேர்ந்தார்கள் என்ற விவரமும் உள்ளது. ஆகவே, பேரூராட்சிகளை தொடர்ந்து நகராட்சிகளில் போலி சான்றிதழ் கொடுத்து பணியில் இணைந்தவர்களின் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்." என்றார்.