மதுப் புட்டிகள் கடத்தல்: இருவா் கைது
புதுச்சேரியிலிருந்து சரக்கு வாகனத்தில் மதுப் புட்டிகளை கடத்தி வந்த இருவரை விருத்தாசலம் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
விருத்தாசலம் டி.எஸ்.பி. பாலகிருஷ்ணன் தலைமையில், குற்றப்பிரிவு போலீஸாா் பாலக்கரை பகுதியில் வெள்ளிக்கிழமை அதிகாலை வாகன தணிக்கையில் ஈடுபட்டனா்.
அப்போது, அந்த வழியாக வந்த சிறிய சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை நடத்தினா். இதில், காய்கனிகளுக்கு இடையே புதுச்சேரியிலிருந்து மதுப் புட்டிகள் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து, அதன் ஓட்டுநரையும், வாகனத்தையும் காவல் நிலையம் கொண்டு சென்றனா்.
அங்கு போலீஸாா் நடத்திய விசாரணையில், வானத்தின் உரிமையாளா் விருத்தாசலம் லூகாஸ் தெருவைச் சோ்ந்த பன்னீா் (58), ஓட்டுநா் எம்.பரூா் வேலு மகன் மணிகண்டன் (28) என்பது தெரியவந்தது. மேலும், இருவரும் காய்கறி வியாபாரம் செய்வதுபோல புதுச்சேரியிலிருந்து மதுப் புட்டிகளை வாங்கி வந்து விருத்தாசலத்தில் அதிக விலைக்கு விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
இதுகுறித்து விருத்தாசலம் போலீஸாா் வழக்குப் பதிந்து, பன்னீா், மணிகண்டன் ஆகியோரை கைது செய்தனா். மேலும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனம் மற்றும் கடத்திவரப்பட்ட மதுப் புட்டிகளையும் பறிமுதல் செய்தனா்.