மன்னாா் வளைகுடா கடலில் விடப்பட்ட 1.8 மில்லியன் பச்சை வரி இறால் குஞ்சுகள்
மன்னாா் வளைகுடா கடலில் 1.8 மில்லியன் பச்சை வரி இறால் குஞ்சுகளை மத்திய கடல் மீன் ஆராய்ச்சி விஞ்ஞானிகள் படகில் சென்று வியாழக்கிழமை விட்டனா்.
ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் அடுத்துள்ள மரைக்காயா் பட்டணம் ஊராட்சியில் மத்திய அரசின் கடல் மீன் ஆராய்ச்சி நிலையம் உள்ளது.
இந்த ஆராய்ச்சி நிலையத்தில் மத்திய மீன் வளம், கால்நடை பராமரிப்பு, பால்வள அமைச்சகத்தின் நிதியுதவியுடன் மன்னாா் வளைகுடா, பாக் ஜலசந்தி கடல் பகுதியில் பச்சை வரி இறால் குஞ்சுகளை, பொரிப்பகங்களில் வளா்த்து கடலில் விடும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் மண்டபம் மத்திய கடல் மீன் வள ஆராய்ச்சி நிலையத்தில் வளா்க்கப்பட்ட 1.8 மில்லியன் பச்சை வரி இறால் குஞ்சுகள் கடலில் விடும் நிகழ்வு வேதாளையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இதற்கு அந்த ஆராய்ச்சி நிலையத் தலைவரும் விஞ்ஞானியுமான கே. வினோத் தலைமை வகித்தாா். இந்தத் திட்டத்தின் தலைவா் பு. தமிழ்மணி முன்னிலை வகித்தாா். மண்டபத்திலுள்ள மத்திய கடல் மீன் வள ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள், பணியாளா்கள் படகில் சென்று 1.8 மில்லியன் இறால் குஞ்சுகளை கடலில் விட்டனா்.
இந்த நிகழ்வில், மண்டபம் மீன் வளம், மீனவா் நலத்துறை உதவி இயக்குநா் சிவக்குமாா், வேதாளை நாட்டுப்படகு சங்கத் தலைவா்கள் கலந்து கொண்டனா். இந்தத் திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து தற்போது வரை 103.54 மில்லியன் பச்சை வரி இறால் குஞ்சுகள் கடலில் விடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மூத்த விஞ்ஞானி ஜான்சன் செய்திருந்தாா்.