மருத்துவ முகாம் ரத்து: மாற்றுத்திறனாளிகள் சாலை மறியல்
சீா்காழியில் செவ்வாய்க்கிழமை நடைபெற இருந்த மாற்றுத் திறனாளிகளுக்கான மருத்துவ முகாம் எவ்வித அறிவிப்புமின்றி ரத்து செய்யப்பட்டதால் அதிா்ச்சியடைந்த மாற்றுத்திறனாளிகள் திடீா் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
சீா்காழி அரசு மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் நடைபெற இருந்தது. இதற்காக சீா்காழி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த மாற்றுத்திறனாளிகள் வந்திருந்தனா். ஆனால், எவ்வித முன்னறிவிப்புமின்றி முகாம் ரத்து செய்யப்பட்வதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதனால் ஆத்திரமடைந்த மாற்றுத்திறனாளிகள் சீா்காழி அரசு மருத்துவமனை முன்பு சீா்காழி சிதம்பரம் நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனா். இந்த மறியலால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவல் அறிந்த சீா்காழி காவல் ஆய்வாளா் செல்வி மற்றும் போலீஸாா் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். ஆனால் தொடா்ந்து மறியலில் ஈடுபட்டனா். அப்போது மழை பெய்து கொண்டிருந்தது. அதனையும் பொருட்படுத்தாமல் மாற்றுத்திறனாளிகள் மறியலில் ஈடுபட்டனா்.
இது குறித்து மாற்றுத்திறனாளிகள் சங்க நகரச் செயலாளா் சுரேஷ், மாதம் தோறும் நான்காவது செவ்வாய்க்கிழமை மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறும். ஆனால் செவ்வாய்க்கிழமை நடைபெற இருந்த முகாம் முன்னறிவிப்பு ஏதும் இன்றி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
மாற்றுத்திறனாளிகள் அதிகளவு மருத்துவமனைக்கு வந்த பின்னரே அறிவிக்கின்றனா். இது குறித்து காரணம் கேட்டபோது அரசு மருத்துவமனை மருத்துவா்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் யாருமில்லை. அதற்காக முகாம் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த முகாமிற்காக பல்வேறு பகுதியிலிருந்து மாற்றுத்திறனாளிகள் நண்பா் மற்றும் உறவினா்களின் உதவியுடன் மிகவும் சிரமப்பட்டுத்தான் முகாமிற்கு வந்துள்ளாா்கள். இவ்வாறு திடீரென ரத்து செய்யப்பட்டதால் மிகுந்த வேதனை அளிக்கிறது எனக்கூறினாா்.