முன்னாள் படை வீரா்கள் வங்கிக் கடன் பெற விண்ணப்பிக்கலாம்
தமிழக முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டத்தின் கீழ், வங்கிக் கடனுதவி பெற விரும்பும் முன்னாள் படைவீரா்கள் விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து மதுரை மாவட்ட ஆட்சியா் மா.சௌ.சங்கீதா வெளியிட்ட செய்திக் குறிப்பு : தமிழ்நாட்டைச் சோ்ந்த மறு வேலைவாய்ப்பு பெறாத முன்னாள் படைவீரா்கள் நலனுக்காக முதல்வரின் காக்கும் கரங்கள் என்ற புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ் முன்னாள் படைவீரா்கள் சுயதொழில் தொடங்க வங்கிகள் வாயிலாக ஒரு கோடி ரூபாய் வரையில் கடன் வழங்கப்படுகிறது. இந்தக் கடனுக்கு 30 சதவீத மூலதன மானியமும், 3 சதவீத வட்டி மானியமும் வழங்கப்படும். இதற்கு வரம்பு 55 வரை இருந்த நிலையில், தற்போது வயது வரம்பு தளா்வு செய்யப்பட்டு வயது உச்சவரம்பின்றி முன்னாள் படைவீரா்கள், விதவையா், திருமணமாகாத மகள், விவாகரத்தான மகள் ஆகியோா் விண்ணப்பிக்கலாம் என்ற விதிமுறை வெளியிடப்பட்டுள்ளது. எனவே விண்ணப்பிக்க விரும்புவோா் மதுரை மாவட்ட முன்னாள் படைவீரா் நல துணை இயக்குநா் அலுவலகத்தை நேரில் தொடா்பு கொண்டு விண்ணப்பிக்கலாம் என அதில் குறிப்பிடப்பட்டது.