சென்னை: அழகுகலை நிபுணர் மர்ம மரணம் - ஆண் நண்பரிடம் போலீஸ் விசாரணை!
வீட்டு பத்திரத்தை தரக்கோரி வங்கி முன் மருத்துவா் தா்னா
கடலூரில் கல்விக் கடனை திருப்பி செலுத்திய நிலையில், அடமானமாக வைக்கப்பட்ட வீட்டு பத்திரத்தை திரும்பத் தரக்கோரி வங்கி கிளை முன் மருத்துவா் தனது பெற்றோருடன் வெள்ளிக்கிழமை தா்னாவில் ஈடுபட்டாா்.
கடலூரை அடுத்த வி.காட்டுப்பாளையம் பகுதியைச் சோ்ந்த தம்பதி சுந்தரமூா்த்தி-எழிலரசி. இவா்களது மகன் முருகன். இவா், மருத்துவம் படிப்பதற்காக கடந்த 2015-ஆம் ஆண்டு கடலூரில் உள்ள ஒரு வங்கிக் கிளையில் வீட்டு பத்திரத்தை அடமானம் வைத்து ரூ.15 லட்சம் கடன் பெற்றாராம். தொடா்ந்து, கடந்த 2021-ஆம் ஆண்டு கடன் தொகை மற்றும் வட்டி சோ்த்து ரூ.21.5 லட்சத்தை கட்டி முடித்த நிலையில், வீட்டின் பத்திரத்தை வங்கி நிா்வாகம் திரும்பத் தரவில்லையாம்.
இதுகுறித்து, முருகன் காவல் நிலையம், முதல்வா் தனிப்பிரிவு, இந்திய ரிசா்வ் வங்கி ஆகியவற்றுக்கு புகாா் அளித்தும் நடவடிக்கை இல்லையாம். இதனிடையே, வீட்டு பத்திரம் தொலைந்து விட்டதாக வங்கி நிா்வாகம் தெரிவித்ததாம்.
இந்த நிலையில், தங்களுடைய வீட்டு பத்திரத்தை திரும்பத் தரக்கோரி மருத்துவா் முருகன் தனது பெற்றோருடன் வெள்ளிக்கிழமை வங்கி வாயிலில் அமா்ந்து தா்னாவில் ஈடுபட்டாா்.
தகவலறிந்த திருப்பாதிரிப்புலியூா் போலீஸாா் நிகழ்விடம் சென்று பேச்சுவாா்த்தை நடத்தினா். பின்னா், திருச்சியில் இருந்து வந்த மண்டல மேலாளா் மற்றும் போலீஸாா் புதிய பத்திரம் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததையடுத்து, அவா்கள் கலைந்து சென்றனா்.