2026ஆம் ஆண்டில் தங்கம் விலை எப்படி இருக்கும்? - பாபா வங்காவின் கணிப்பு!
AI குக்கிங் அசிஸ்டன்ட்: `சமையல் ரெடி!' - நெட்டில் சமையல், தட்டில் சாப்பாடு!
' ஏங்க நான் சமையல் செய்றேன். கொஞ்சம் காய்கறி மட்டும் நறுக்கி கொடுத்துருங்க'என்கிற பேச்சுக்கே இனிமே இடமே இல்லை. நீ 50, நான் 50 என்று இல்லாமல் 100% சமையலையும் AI யே பார்த்துக்கொள்ளும் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா?
அரைப்பது, அவிப்பது, வதக்குறது, வறுக்குறதுன்னு எல்லா வசதியும் கொண்ட ஆல் இன் ஒன் ஏஐ ராஜாவாக களம் இறங்கி இருப்பது தான் ஸ்மார்ட் குக்கிங் அசிஸ்டன்ட், 'Upliance.ai.' இன்னும் இவன் எக்கச்சக்கமான வித்தைகளை வச்சுருக்கான். வாங்க ஒவ்வொன்னா பார்க்கலாம்.

பேச்சுலர்சின் கனிவான கவனத்திற்கு
'சாப்பிட தெரியும், சமைக்க தெரியாது. மூக்கு பிடிக்க வெட்ட தெரியும், முழுசா வெந்து இருக்கான்னு கூட பார்க்க தெரியாது..' அப்படின்னு சொல்ற பேச்சுலர் பட்டாளத்திற்கு என்றே சமைப்பதை எளிதாக்க வேண்டும் என்ற நோக்கத்துடனே உருவாக்கப்பட்டதுதான் இந்த இயந்திரம். இந்தியாவைச் சேர்ந்த மகேக் மோடி மற்றும் மோகித் ஷர்மா ஆகியோரால் 2021 ல் இந்த இயந்திரம் அறிமுகப்படுத்தப்பட்டது.
ஒரு டச் பண்ணா போதும்
உப்புக்கும் சர்க்கரைக்கும் கூட வித்தியாசம் தெரியாத டாட் லிட்டில் பிரின்சஸ்களுக்கு தேவையான அளவு உப்பு போடுன்னா எப்படிங்க புரியும்?
என்ன போட வேண்டும், எவ்வளவு போட வேண்டும் என்று துல்லியமாக, செயல்முறையோடு கிளிப் பிள்ளைக்கு கூறுவது போல் கூறுகிறது இந்த இயந்திரம்.
ஒரு டச் பண்ணா போதும். அதுவே எல்லாவற்றையும் பார்த்துக் கொள்ளும். இதில் தீயே எரியாது.. ஆனாலும் விர்ச்சுவல் ஃப்லேம்ஸ் (virtual flames) என்ற அமைப்பை கொடுத்திருக்கிறார்கள்.

அதாவது நீல நிறத்தில் லைட் எரிந்தால் வெந்து கொண்டிருக்கின்றது என்றும் பிங்க் என்றால் நறுக்கிக் கொண்டிருக்கின்றது என்றும் பச்சை என்றால் சமையல் ரெடி..! என்றும் அர்த்தமாம்.
இந்த பாத்திரத்தை மூடுவதற்கு கண்ணாடி மூடியும் (glass lid) கொடுத்திருக்கிறார்கள்.இதன் வழியே உள்ளே என்ன நடக்கிறது என்பதை பார்க்கலாம். பார்க்காவிட்டாலுமே அது தன் வேலையை சமத்தாக செய்து முடித்து விடும்.
ரில்ஸ் பார்த்திட்டு இருந்ததுனால குக்கரில் எத்தனை விசில் வந்ததுன்னே தெரியலையேன்னு இனிமே புலம்ப வேண்டாம். இந்த இயந்திரத்தின் டிஸ்ப்ளே ஸ்கிரீனில் ஒரு QR கோடு இருக்கிறது. அதை ஸ்கேன் செய்து உங்களது மொபைலை அந்த இயந்திரத்தோடு லிங்க் செய்தாலே போதும்.
மொபைலையே ரிமோட் ஆகவும் பயன்படுத்தி, கிட்ட தட்ட இதில் சமைப்பது ஒரு வீடியோ கேம் விளையாடுவது போன்ற ஃபீலை கொடுக்கிறது.

அதுமட்டுமல்லாமல் நாம் செய்யக்கூடிய ரெசிபியை செலக்ட் செய்த பிறகு அதுவே அந்த ரெசிபிக்கு தேவையான பொருட்களை இந்த அளவில் போட வேண்டும் என்று சொல்லும். அது சொன்னபடியே எல்லாவற்றையும் போட்டு மூடிவிட்டு நாம் நமது வேலையை பார்க்கலாம். சத்தமே இல்லாமல் கப் சிப் என்று வேலையை முடித்துவிட்டு உங்களுக்கு 'மட்டன் சுக்கா ரெடி!' என்று மொபைலிலேயே நோட்டிஃபிகேஷன் அனுப்பிவிடுகிறது.
இது என்ன பிரமாதம்..? ஸ்பெஷல் ஐட்டம் ஒன்னு இருக்கே..! குறைந்த எண்ணெய், அதிக புரதம், குழந்தைகளுக்குக்கான சமையல் என்று ஆளுக்கேத்த அசத்தலான சமையலையும் இந்த இயந்திரம் செய்து கொடுக்கிறது. நாம் சமைக்கும் உணவில் புரதம், கொழுப்பு, மாவுச்சத்து போன்றவற்றின் அளவையும் துல்லியமாக புட்டு புட்டு வைப்பதனால் டயட், கேலரி டெஃபிசிட் போன்றவற்றில் இருப்பவர்களோ இதைப் பற்றி கவலையே பட வேண்டாம்..
அது சரி சமைக்கிறதை விட பாத்திரம் கழுவுறது தானே பெரிய வேலையே, இதை எப்படி கழுவுவது என்று யோசிக்கிறீங்களா?அதுக்கும் இருக்கு ஆட்டோ கிளீனிங் அமைப்பு. எவ்வளவு தண்ணீர், டிஷ்வாஷ் லிக்விட் ஊற்ற வேண்டும் என்ற அளவையும் அதுவே சொல்லிவிடும். அதன்படி ஊற்றிவிட்டு மூடி விட்டாலே போதும், தானாகவே சுத்தம் செய்து தந்துவிடும்.

2021-ல் முதன்முதலாக அப்ளையன்ஸ் 1.0 அறிமுகப்படுத்தப்பட்டு பயங்கரமாக ட்ரெண்டாகி வெற்றியும் பெற்றது. அதைத்தொடர்ந்து செப்டம்பர், 2025-ல் அப்ளையன்ஸ் 2.0 வெர்ஷனும் கொண்டுவரப்பட்டது. அப்ளையன்ஸ் 1.0-வை விட அப்ளையன்ஸ் 2.0 அதிவேகத்தில் வேலை செய்கிறது. இந்த இயந்திரத்தின் விலையே 30 ஆயிரத்தில் இருந்து 40 ஆயிரத்தை தொட்டுவிடுகிறது.
எல்லா வேலையும் இதுவே பார்த்துக் கொண்டாலும் மனிதர்களை முற்றிலுமாக ரீப்ளேஸ் செய்ய முடியாது என்ற காரணத்தினால் இந்த விலை ஆடம்பரமாகவே இருக்கின்றது என்று பலரும் கூறுகின்றனர்.
தென்னிந்திய உணவு வகைகள் கொஞ்சம் குறைவாகவே இதில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது என்று ஆரம்பத்தில் பலரும் கூறியதால் தற்போது தென்னிந்திய உணவு வகைகளின் பட்டியலை விரிவுபடுத்தி இருக்கிறார்கள்.

இதை வாங்கி பயன்படுத்துபவர்கள், இதற்கு அதிகமாக பராமரிப்பு தேவைப்படுகிறது என்றும் லிட்டை மூடுவதற்கு பலமுறை அழுத்த வேண்டியதாக இருப்பதால் கொஞ்சம் சிரமமாக இருக்கின்றது என்றும் கூறுகிறார்கள்.
ஆசைக்கு கூட வங்கி பயன்படுத்த முடியாத ஆடம்பரமான விலை கொண்ட இந்த இயந்திரம், 2027-க்கு பிறகு மாதாந்திர சந்தா கட்டுவது போன்ற திட்டத்தையும் அறிமுகப்படுத்தலாம் என்றும் கூறப்படுகிறது. சோம்பேறி சிக்கன் சரி, மொத்த சமையலுமே சோம்பேறியாக மாறுவதால் உடல் உழைப்பே இல்லாமல் போகிறது என்றும் கையால் சமைப்பது போல அந்த அளவிற்கு சுவையும் இதில் இல்லை என்றும் சிலர் கூறி வருகிறார்கள்.















