Vikatan Tele Awards 2024: "விஜய் சார்ட்ட இந்தக் கேள்விதான் கேட்பேன்" - திவ்யதர்ஷ...
BB TAMIL 9: DAY 6: `மக்களே கைத்தட்டி திவாகரை கெடுக்காதீங்க' - விசே அட்வைஸ்; கண்கலங்கிய ஆதிரை, அராரோ!
விஜய்சேதுபதியின் விசாரணை பாணி மாறவேயில்லை. அப்படியேதான் இருக்கிறார். ‘கேட்ட கேள்விக்கு நேரா பதில் சொல்லுங்க. சுத்தாதீங்க.’. ‘தூக்கம் வருதா.. ஏன் சாய்ஞ்சு உக்காந்திருக்கீங்க’.. ‘பதில் வேணாம் .. உக்காருங்க’ என்றெல்லாம் வழக்கம் போல் ரோஸ்ட் செய்ய, போட்டியாளர்கள் அரண்டு கிடக்கிறார்கள். ஆதிரை, அராரோ போன்றவர்கள் கண்ணீர் சிந்தியதில் கூட ஆச்சரியமில்லை. ஆனானப்பட்ட பார்வதியையே கலங்கடித்து விட்டார் விசே.
கமலின் பாணி வாழைப்பழ ஊசி (சமயங்களில் கடப்பாரையும் உள்ளே இருக்கும்) என்றால் விசேவின் பாணி நேரடியான கத்திக்குத்து. விசே சொல்வதில் சில நல்ல விஷயங்கள் இருந்தாலும் இத்தனை கறாரான பாணி கோர்ட் ரூம் விசாரணை போல சலிப்பை ஏற்படுத்தி, எபிசோட் எப்போது முடியும் என்று தோன்ற வைத்து விடுகிறது.

“இந்த முறை ஆரம்பமே வேகமா இருக்குல்ல.. தண்ணிப் பிரச்னையை விட்டுட்டு ஆளாளுக்கு ஒரு பிரச்னையை கிளப்பியிருக்காங்க.
இந்த வாய்ப்பு அத்தனை சாதாரணமில்ல. பல சோதனைகள் கடந்துதான் வரணும். தனக்கான அடையாளத்தை தேடி வந்தவங்களுக்கு இன்னமும் கொஞ்சம் டைம் கொடுப்போம்” என்கிற முன்னுரையுடன் வெள்ளிக்கிழமை நிகழ்வுகளுக்கு சென்றார் விசே.
‘தவிர்க்க முடியாத காரணங்களினால் நந்தினி வெளியேறினார்’ என்கிற பிக் பாஸ் அறிவிப்பைத் தவிர வெள்ளிக்கிழமையில் புதிதாக எதுவுமில்லை.
அதே உதிரிச் சண்டைகள். டிமாண்ட், கோரிக்கை என்று இரண்டு சொல்லுக்குமான மொழி ஆராய்ச்சி நடந்தது. வீட்டின் கேப்டனாக துஷார் நிறைய தடுமாறுகிறார் என்பது ஆரம்பத்திலேயே தெரிந்து விட்டது. அவரால் வீட்டை கண்ட்ரோல் செய்ய முடியவில்லை. தோ்வான போது தூக்கி கொண்டாடிய எவரும் பிறகு துஷாரை சட்டையே செய்யவில்லை.
“உங்களுக்கும் எனக்கும் செட் ஆகலை. நான் திட்டினதுக்கு மன்னிப்பு” என்கிற சமாதான உடன்படிக்கையுடன் வந்தார் கம்ருதின் “அவனைப் பார்த்தாலே காண்டாவுது. போகச் சொல்லு” என்று முகத்தைச் சுளித்தபடி துரத்தினார் திவாகர்.
“சும்மா… சும்மா எங்க அண்ணனை சுரண்டிப் பார்க்காத. இந்த ஹீரோயிசத்தை வேற எங்காவது வெச்சுக்க” என்று பார்வதியும் இணைந்து கம்ருதீனை துரத்தினார்.
“என்ன.. பண்றது.. நான் பொறக்கும் போதே ஹீரோவா பொறந்துட்டேனே’ என்கிற தற்பெருமையுடன் சலித்துக் கொண்டார் கம்மு.
நம் வீடுகளுக்குள் தொலைக்காட்சி நுழைந்த காலம் மாறி, தொலைக்காட்சி வழியாக வீட்டிற்குள் நுழைந்தார் விசே. மக்கள் கோரஸாக ‘ஐ லவ் யூ’ சொன்னார்கள் (வணக்கம் என்பதுதான் ஐ லவ் யூவாக மாறியிருக்கிறது போல!).
“நான்தான் முதல்ல சொன்னேன்” என்று ஸ்கூல் பையன் மாதிரி பெருமையடித்த திவாகரைப் பார்த்து கூட்டம் கைத்தட்ட “இப்படி பண்ணித்தான் அவரைக் கெடுத்து வெச்சிருக்கீங்க” என்று விசே செய்த நையாண்டி உண்மையானது.

மிகையாக குறும்பு செய்கிற ஒரு குழந்தையை கண்டிக்காமல் சிரித்து கைதட்டி பாராட்டினால் அது கூடுதலாக குறும்பு செய்ய ஆரம்பித்து விடும்.
சோஷியல் மீடியாவில் அலப்பறை செய்பவர்களில் பெரும்பாலோனோர் இப்படித்தான். மக்கள் வேடிக்கை பார்க்க ஆரம்பித்து விட்டால் விசித்திரமான அலப்பறைகளை கூட்டிக் கொள்வார்கள் என்பதற்கான உதாரணம் திவாகர்.
பார்வையாளர்களுக்கு கூட போட்டியாளர்களின் பெயர்கள் பிடிபட்டு விடும் போல. அங்கேயே வாழ்கிறவர்களுக்கு சக போட்டியாளர்களின் பெயர்கள் தெரியவில்லை.
பாருவை ‘மாயா’ என்றும் திவாகரை ‘சுதாகர்’ என்றும் அழைத்துக் கொண்டிருந்தார் பிரவீன் சாந்தி, மன்னிக்க பிரவீன் காந்தி. அனைவரையும் பெயர் சொல்லி அறிமுகப்படுத்த சொன்னார் விசே. அவருக்கும் குழப்பமா என்று பார்த்தால் இல்லை. ‘பிரவீன்காந்திக்காக’ செய்யப்பட்ட திருவிளையாடல் நாடகமாம் இது.
தன் முறை வரும் போது மற்றவர்களைப் போல் எழுந்து நிற்காமல் அமர்ந்தபடியே பெயர் சொன்னதால் விசேவின் ஸ்பெஷல் கவனத்திற்கு ஆளானார் ஆதிரை.
‘மத்தவங்க எழுந்து நின்னு சொல்லும் போது, உங்களுக்கென்ன கேடு’ என்கிற மாதிரி விசே வறுத்தெடுக்க, முகம் இருண்டு போன ஆதிரை ‘பிரசண்ட் சார்’ மோடிற்கு மாறினார்.
‘நம்மள என்னவெல்லாம் செய்யப் போறானோ?’ என்கிற பீதி மற்றவர்களின் முகங்களுக்கு பரவியது.
ஒருவர் அமர்ந்து தன் பெயரைச் சொன்னால் அது அவமரியாதை என்று விசே நினைக்கிறாரா? இதே விஷயத்தை கமலாக இருந்தால் எப்படி கையாண்டிருப்பார், முந்தைய காலங்களில் எப்படி கையாண்டார் என்கிற கேள்விகள் எழுவதை தவிர்க்க முடியவில்லை.

“இந்த நிகழ்ச்சிக்கு உங்களின் பங்களிப்பு என்ன?” என்கிற கேள்வியோடு தனது பஞ்சாயத்தை ஆரம்பித்தார் விசே.
“இளைஞர்களுக்கு நம்பிக்கை தர விஷயமா நிறைய பேசியிருக்கேன். குறிப்பா பெண்களுக்கு” என்று சொல்லி தானே வலையில் விழுந்தார் பிரவீன்காந்தி.
‘பெண்களால் பளுவை இழுக்க முடியாது. பெண்களுக்கு திருமணம்தான் பாதுகாப்பு’ என்று அவர் முன்பு சொன்ன கருத்துக்கள் எல்லாம் இப்போது கிளறப்பட்டு அவருக்கு எதிரான சாட்சியங்களாக நின்றன.
“உங்களுக்குன்னு சொந்த கருத்து இருக்கலாம். ஆனா பொதுவான இடத்துல பொதுமைப்படுத்தி பேசாதீங்க” என்று பிரவீன்காந்திக்கு வலிக்காமல் குட்டு வைத்தார் விசே.
அடுத்து எழுந்த திவாகருக்கு பலத்த கைத்தட்டல். “நீங்க நடத்தின நடிப்பு அகாடமி நல்லா இருந்தது. வெளியே வந்து ஆரம்பிச்சா என்னையும் சோ்த்துக்கோங்க” என்று உண்மையா, கலாய்ப்பா என்பதே தெரியாமல் விசே பாராட்ட,
அத்தனை பற்களும் தெரியும்படி தன் டிரேட்மார்க் புன்னகையில் அதை ஏற்றுக் கொண்ட விசே “இந்த உலகமே என்னை எதிர்க்குது சார்” என்று ஆரம்பிக்க
“மத்தவங்க விளக்கம் சொல்றதையும் கேளுங்க. அவங்க பேச்சு காலியான பிறகு உங்க கருத்தை முன்வெச்சா வலிமையா இருக்கும்.” என்றெல்லாம் அட்வைஸ் செய்த விசே,
திவாகர் ‘ஐ லவ் யூ’ சார்’ என்று மீண்டும் ஆரம்பிக்க “எனக்கு உங்களை பிடிக்கும் போது நானும் சொல்றேன்” என்றார். (அப்படின்னா என்ன அர்த்தம்?!)
“ஸ்பெஷல் ரூம்ன்னு சொல்லி என்னை உள்ளே அனுப்பினாங்க. பார்த்தா பெட்ல பல்லி. பயந்தே போயிட்டேன்” என்று ‘ஹீரோயின்’தனமாக துஷார் வெள்ளந்தியாக சொல்லி ‘வீட்டோட தலைவரே இப்படி இருக்காரு’ என்று நையாண்டியாக சிரித்தார் விசே.
சைடு கேப்பில் கம்ருதீன் கொட்டாவி விட, அதைச் சரியாக கவனித்து விட்ட விசே, தானும் கொட்டாவி விட்டபடி விசாரித்தது குறும்பு.
விசே பிரேக்கில் சென்றவுடன் “இன்னாடி இது.. இந்த மனுஷன் இப்படி சிடுமூஞ்சியா இருக்காரு. நூறு நாள் இந்தாளோட எப்படி குப்பை கொட்றது” என்பது போல் புலம்பிய ஆதிரையும் அராரோவும் பரஸ்பரம் ஒருவரையொருவர் அணைத்து ஆறுதல் சொல்லிக் கொண்டார்கள்.

பிரேக் முடிந்து வந்த விசே, “எதையும் பர்சனால எடுத்துக்காதீங்க. உங்க ஆட்டம் நல்லாயிருக்கணும்.. உங்களுக்கு ஒரு புது அடையாளம் கிடைக்கணும். அது உங்க வளர்ச்சிக்கு நல்லது.. அதுக்குத்தான் இவ்ள சொல்றேன். அதுக்குப் போய் மனம் புண்படாதீங்க” என்று அடித்த கையால் மருந்தும் தடவி ஆறுதல் சொன்னார்.
“வார்த்தைகளை கவனமா பயன்படுத்துங்க. இங்க எல்லாம் ரிகார்டு ஆகுது” என்று அராரோவிற்கு தனியான எச்சரிக்கையும் கிடைத்தது.
‘தண்ணி பிடிக்கறதுக்கு சபரி மற்றும் கம்ருதீனை ஏன் தேர்ந்தெடுத்தீங்க?’ என்று விசே முன் வைத்த கேள்விக்கு ‘கம்ருதீன் நல்ல பாடி பில்டர்” என்று சுபிக்ஷா சொன்னவுடன் கெத்தாக சிரித்தார் கம்ரூதின். “பார்த்தீங்களா.. அவரைப் பத்தி பெருமையா பேசினா கொட்டாவி வரலை” என்று விசே ஊமைக்குத்தாக குத்த ‘இனிமே கொட்டாவி விடறதுக்கு கூட வாய் திறக்கக் கூடாது போல’ என்கிற மாதிரி கம்ரூதின் ஜொ்க் ஆனார்.
“தண்ணி பிடிக்கற பொறுப்புல இருந்தவங்க கொஞ்சம் அசந்து தூங்கிட்டாங்க. அது தப்புதான். ஆனா தண்ணின்றது பொதுப் பிரச்னை இல்லையா.. அது உங்களையும்தானே பாதிக்கும்.. ஏன் மத்தவங்க இதுக்கு முன்வரலை.. அவங்களுக்கு துணையா உக்காந்து பேசிட்டாவது இருந்திருக்கலாம் இல்லையா?” என்று விசே கேட்டது சரியான கேள்வி.
‘சூப்பர் டீலக்ஸ் வீடு வேலை செய்யக்கூடாதுன்னு நெனச்சோம்.. இத்தனை ஆம்பளைங்க இருக்கும் போது பெண்களை எப்படி டாங்க் இழுக்க வைக்கறதுன்னு நெனச்சேன்” என்று பிரவீன்காந்தி சொன்ன பல ஸ்டேட்மெண்ட்கள் அவருக்கே எதிராக அமைந்தன.

“நான் என்னதான் வேலை செஞ்சாலும் வெளிய தெரிய மாட்டேங்குது. ஆனா சபரி வெளிய தெரிய மாதிரி செய்யறார். அதனால பிக் பாஸ் வீட்டு சைடுல அவருக்கு சப்போர்ட் நிறைய இருக்கு. இது ரெண்டு வீட்டு பாலிட்டிக்ஸ் சார்” என்கிற மாதிரி சொல்லி மாட்டிக் கொண்டார் கம்ருதீன்.
“உங்களுக்கு உதவ உங்க வீட்டு ஆளுங்க யாராவது வந்தாங்களா.. இல்லைல்ல.. அப்புறம் ஏன் நீங்களா ஒரு சைடு சோ்த்துக்கறீங்க.. நீங்கதான் பாலிட்டிக்ஸ் பண்ற மாதிரி தெரியுது” என்று விசே பாயிண்டை எடுத்து விட்டவுடன் ஆவேசமாக கைத்தட்டி மகிழ்ந்தார் சபரி.
இதையொட்டி விசே சொன்ன உபதேசம் அருமையாது. “உங்களை தேவையில்லாம யாராவது சப்போர்ட் பண்ணா உடனே சந்தேகப்படுங்க. தவறு செஞ்சா ஒத்துக்கங்க.. இது பெரிய கிரைமா. அடுத்த முறை திருத்திக்கங்க” என்றபடி பிரேக்கில் சென்றார்.
“யார் இந்த வீட்டில் நிறைய நடிப்பது?” என்பதுதான் அடுத்த டாஸ்க். ‘ஆக்ஷன் கட்’ என்பது டாஸ்க்கின் பெயர். இதை நடிப்பு அரக்கன் திவாகரைக் கொண்டே ஆரம்பித்தது நல்ல சகுனம். யாரைச் சொல்கிறோமோ அவருடைய முகத்திற்கு நேராக சென்று கிளாப் போர்ட் அடித்து விட்டு தனது கருத்தைச் சொல்ல வேண்டும்.
இந்த டாஸ்க்கில் சொல்லி வைத்தது போல் பலரும் பாருவின் அருகே சென்று கிளாப் அடித்து, பாரு செய்த திருவிளையாடல்களைப் புட்டுப் புட்டு வைக்க “ஆஸ்கர் விருது’ பெற்றது போன்ற மகிழ்ச்சியான சேஷ்டைகளுடன் எக்ஸ்பிரஷன்களை தந்து கொண்டேயிருந்தார் பார்வதி.
“நந்தினி பிரச்சினைல அவ கத்தும் போது மத்தவங்க ஒதுங்கியிருக்க, பாரு மட்டும் கிட்ட போய் அந்த சிட்டுவேஷன்லயும் மைலேஜ் தேத்தினாங்க”
“துஷார் ‘தல’யானப்ப.. ‘வா.. வா.. தலைவா’ன்னு சந்தோஷப்பட்டுட்டு, பிறகு பிரச்சினைல லீடர் வந்து தலையிட்டப்ப ‘நீயெல்லாம் சின்னப்பய.. பேசக்கூடாது.. அப்படி ஒரமா போன்னு சொன்னாங்க.
“அவங்களுக்கு எல்லாமே கன்டென்ட்தான்.. காமிரா முன்னாடி மூஞ்சு தெரியணும்றதுக்காக எல்லா பிரச்னைலயும் மூக்கை நுழைக்கிறாங்க. அந்தப் பிரச்னைக்கே காரணமா அவங்கதான் இருக்கறாங்க”

இப்படியாக பாருவின் முகத்தின் முன்னால் கிளாப் போர்டு தேயும் அளவிற்கு புகார்கள் குவிய “எனக்கு வலிக்கலையே…” என்கிற மாதிரி ஒவ்வொன்றிற்கும் ஒழுங்கு காட்டி சமாளித்தார் பாரு. அந்த சேஷ்டைகளைப் பார்க்கும் நமக்கே டென்ஷன் ஏறும் போது விசேவிற்கு மட்டும் ஏறாதா என்ன? ஒரு கட்டத்தில் அவரே வெறுப்பாகி “இதெல்லாம் வெளியே எப்படி தெரியுது தெரியுமா.. இந்த ஷோவை டிகிரேட் பண்ணுது. அப்படி பண்றது நாகரிகம் இல்லை’ என்று எச்சரிக்க தனது முகசேஷ்டைகளை கண்ட்ரோல் செய்தார் பாரு.
FJவின் முகத்திற்கு நேராக கிளாப் அடித்த திவாகர், ‘உன்னை வெட்டிடுவேன்’ என்று இன்ஸ்டா ரீல் போடுவது போல பாடி லேங்வேஜ் செய்ய “இருங்க.. இருங்க.. திவாகர்.. உங்க திறமையை இப்படி கொட்டிட்டே இருக்காதீங்க.. நார்மலா சொல்லுங்க” என்று திவாகரின் பீறிட்டு வரும் நடிப்பு ஆர்வத்திற்கு விசே அணை போட்டு கண்ட்ரோல் செய்தது சிறப்பான குறும்பு. “என்னை தகாத வார்த்தைகள்ல திட்டினாங்க..” என்று திவாகர் சொல்ல அதற்கான காரணம் கம்ருதின் என்று தெரிய வந்தது.
“நான் அதுக்கு ஏற்கெனவே மன்னிப்பு கேட்டுட்டேன் சார்.. ஆனா பாருங்க..” என்று கம்ருதீன் பேச ஆரம்பிக்க “மன்னிப்பு கேட்டா அத்தோட விடணும்.. அதை மறுபடியும் நியாயப்படுத்தக்கூடாது. உக்காருங்க கம்ருதீன்’ என்று விசே அதிரடியாக சொல்ல ‘எனக்கு நேரம் சரியில்ல’ என்பது மாதிரி முகம் சோர்ந்து அமர்ந்தார் கம்ருதீன்.
“இந்தப் புகார்களுக்கு ஹர்ட் ஆகாதீங்க.. அதைத் திருத்திக்கப் பாருங்க.. அதான் உங்க வளர்ச்சிக்கு நல்லது. உங்களையெல்லாம் நாளைக்குப் பார்க்கிறேன்’ என்றபடி விடைபெற்றார் விசே.
“நான் நடிக்கறனா.. என்னைப் போய் அப்படி சொல்லிட்டாங்க.. இந்த கனி எழுந்திருக்கும் போதெல்லாம் கிளாப்ஸ் வருது. என்னைத் திட்டினா வெளியே ஆடியன்ஸ் குஷியாகி கைத்தட்றாங்க.. என்ன கொடுமை இது.. உண்மையா இருக்கறதுக்கு கிடைச்ச தண்டனை இது. இதுக்குத்தான் இந்த ஷோவுக்கு வரக்கூடாதுன்னு நெனச்சேன்.. என் நிலைமை இப்படியாகிப் போச்சே’ என்று பாரு அழுது புலம்பி கண்கலங்க

“இதெல்லாம் ஒரு பிரச்னையா.. அப்படித்தான் சொல்லுவாங்க வெட்டிப் பயலுக.. நீ நீயா இரு… இந்த மைசூர்பாக்கு சாப்பிட்டுப் பாரேன்.. ரொம்ப ருசியா இருக்கு” என்று கடுக்கு முடுக்கு என்று ரசித்து சாப்பிட்ட திவாகரைப் பார்த்து பாருவின் மைண்ட் வாய்ஸ் என்னவாக இருந்திருக்கும் என்பதை யூகித்துப் பார்த்தால் அது சென்சார் செய்யப்பட வேண்டிய வாக்கியமாக இருக்கிறது.
ஆக, இந்த ஷோவின் ஹீரோக்கள் வரிசையில் கனியக்கா, சபரி போன்றவர்கள் இருப்பார்கள் போலிருக்கிறது. எஃப்ஜே - ஆதிரை, துஷார் -அராரோ ஆகியோர் ரொமாண்டிக் மோடில் பயணிப்பார்கள்.
வில்லிகளின் வரிசையில் பார்வதி டாப்பில் இருக்க காமெடி மோடில் திவாகர் பல நாட்கள் தாக்குப் பிடிப்பார் என்று தெரிகிறது, பார்ப்போம்.
விசேவின் விசாரணை பாணியில் உங்களுக்குப் பிடித்த விஷயங்கள், பிடிக்காத விஷயங்களை கமெண்ட் பாக்ஸில் சொல்லுங்கள்.