செய்திகள் :

Bougainvillea Review: ஆழமான நடிப்பு, உளவியல் பார்வை, ஸ்டைலிஷ் மேக்கிங்; ஆனால் இவை மட்டும் போதுமா?

post image

இடுக்கி மாவட்டத்தில் மருத்துவராகப் பணியாற்றி வருகிறார் ராய்ஸ் தாமஸ் (குஞ்சாக்கோ போபன்). எட்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கார் விபத்து ஒன்றில், அவரது மனைவி ரீத்துவிற்கு (ஜோதிர்மயி) தலையில் பலத்த அடி படவே, அம்னீஷியா எனும் நினைவுத் திறன் இழப்பு ஏற்படுகிறது. அதனால், கணவர் ராய்ஸி மற்றும் ரேமா (ஶ்ரீந்தா) என்கிற வீட்டுப் பணியாளர் உதவியுடன் வாழ்ந்து வருகிறார்.

இந்நிலையில், தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பிரபல அரசியல்வாதியின் மகளான கல்லூரி மாணவி ஒருவர் காணாமல் போகிறார். அவ்வழக்கை விசாரிக்கும் காவல்துறை அதிகாரி டேவிட் கோஷியின் (பகத் பாசில்) சந்தேகப் பார்வை, ரீத்துவின் மீது விழவே, மொத்த விசாரணையும் அக்குடும்பத்தைச் சுற்றியே நடக்கிறது. இந்த விசாரணையால், காணாமல் போன மாணவியைப் பற்றி மட்டுமல்லாது, ரீத்து, ராய்ஸி ஆகியோரின் மர்மமான பின்னணிகளும் ஒவ்வொன்றாக வெளிவருகின்றன. இறுதியில், மர்மங்களும் முடிச்சுகளும் அவிழ்க்கப்பட்டு, குற்றவாளி கண்டுபிடிக்கப்பட்டாரா என்பதை 'ஸ்லோ பேர்ன் சஸ்பென்ஸ் த்ரில்லராக' சொல்லியிருக்கிறது இயக்குநர் அமல் நீரட்டின் 'போகெய்ன்வில்லா' திரைப்படம்.

Bougainvillea Review

நினைவுத் திறன் இழப்பால் அவதியுறும் தருணங்கள், மர்மங்களையும் குழப்பங்களையும் ஜீரணிக்க முடியாமல் திணறும் இடங்கள், தனக்கான உலகைக் கட்டமைத்துக்கொண்டு அதில் இன்புறும் காட்சிகள் என ஆழமும், நுணுக்கமும் கொண்ட ரீத்து கதாபாத்திரத்திற்கு, உயிர்ப்பான நடிப்பை வழங்கியிருக்கிறார் ஜோதிர்மயி. பத்தாண்டுகளுக்குப் பிறகு ஒரு அடிபொலி கம்பேக் சேச்சி! தன் 'வழக்கமான' மௌனம், அப்பாவித்தனத்தோடு, தேவையான இடங்களின் வேறு அவதாரங்களையும் எடுத்து, படத்திற்கு வலுசேர்த்திருக்கிறார் குஞ்சாக்கோ போபன். மிடுக்கான காவல்துறை துணை ஆணையராக வரும் பகத் பாசிலுக்குப் பெரிய வேலை இல்லை என்றாலும், குறைவில்லாத பங்களிப்பு. ஶ்ரீந்தா, வீணா நந்தகுமார், ஷரஃப் யு தீன் ஆகியோர் கொடுத்த வேலையைச் செய்திருக்கிறார்கள்.

இயக்குநர் அமல் நீரட்டின் தொழில்நுட்ப ரீதியிலான பலமான பார்வை இந்தப் படத்திலும் தொடர்கிறது. டீ எஸ்டேட், மலைகளுக்கு நடுவில் உள்ள சாலைகள், பங்களா வீடுகள் எனப் புறச்சூழலை வைத்தும், கதை நடக்கும் வீட்டிற்குள் உள்ள சின்ன சின்ன அறைகள், கதாபாத்திரங்களின் அசைவுகள், போகெய்ன்வில்லா மரங்கள் என அகங்களை வைத்தும், நேர்த்தியான பிரேம்களாலும், ஒளிகளாலும் 'சஸ்பென்ஸ் த்ரில்லருக்கான' பதைபதைப்பைக் கடத்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஆனந்த சி.சந்திரன். இயக்குநரின் திரைமொழிக்கும் விவேக் ஹர்ஷனின் படத்தொகுப்பு பொருந்திப் போகிறது என்றாலும், திரைக்கதை தவறவிட்ட சுவாரஸ்யத்தை 'கட்'களில் கொண்டு வர முயன்றிருக்கலாம். குறிப்பாக இத்தனை ஸ்லோமோஷன் காட்சிகள் எதற்கு சேட்டா?

Bougainvillea Review

சுஷின் ஷ்யாமின் அட்டகாசமான பின்னணி இசை, கதைக்கருவிற்குத் தேவையான இறுக்கம், அழுத்தம், அதிர்ச்சி என எல்லா உணர்வுகளுக்கும் குரலாக ஒளித்திருக்கிறது. ஆனாலும், சாதாரண கதவு மூடும் காட்சிகளுக்குக் கூட வஞ்சம் வைக்காமல், எல்லா காட்சிகளுக்கு வாசித்துத் தள்ளுவது கொறச்சு ஓவர் சாரே! ஜோசப் நெல்லிக்கலின் தயாரிப்பு வடிவமைப்பு, டபஸ் நாயக்கின் ஒலி வடிவமைப்பு என எல்லா தளங்களிலும் உழைப்பை உணர முடிகிறது.

மலையாள எழுத்தாளர் லாஜோ ஜோஸின் `ரூத்தின்டெ லோகம்' என்ற நாவலை அடிப்படையாக வைத்து, தன் பாணியிலான ஸ்டைலிஷ் சஸ்பென்ஸ் த்ரில்லரை கொடுக்க முயன்றிருக்கிறார் இயக்குநர் அமல் நீரட்.

முதல் பாதி முழுவதுமே நுணுக்கமான டீடெய்லிங்காலும் அடுக்கடுக்கான முடிச்சுகளாலும் நிறைந்திருக்கிறது. திரைக்கதை ஆமை வேகத்தில் நடைபோட்டாலும், சிறிது சிறிதாகக் கதாபாத்திரங்கள் ஆழம் கொள்வதும், மர்மங்கள் விரிவதும் தொடக்கத்தில் சுவாரஸ்யம் தருகிறது. போகெய்ன்வில்லா மரம், ரீத்து வரையும் ஓவியங்கள், ரீத்து கட்டமைத்து வைத்திருக்கும் தனி உலகம் என எல்லாவற்றையும் ஒவ்வொன்றோடு இணைத்த விதத்தில், லாஜோ ஜோஸ் - அமல் நீரட் எழுத்துக் கூட்டணி கவனிக்க வைக்கிறது. அதேநேரம், ஒரே பாணியில் நகரும் காட்சிகளால், இடைவேளைக்கு முன்பே சுவாரஸ்யம் இழக்க ஆரம்பித்து விடுகிறது. மிக மெதுவான திரைக்கதையும் ஒரு கட்டத்தில் பளுவாக மாறிவிடுகிறது. இவற்றைத் தாண்டி, தேவையான முடிச்சுகளையும், கேள்விகளையும் எதிர்பார்ப்புகளையும் கொடுக்கிறது இடைவேளை. இதனாலேயே இரண்டாம் பாதி திரைக்கதை அடுத்தடுத்த முடிச்சவிழ்ப்புகளால் சிறிது பரபரப்பைத் தக்கவைத்துக் கொள்கிறது.

Bougainvillea Review

ஆனால், முதற்பாதியில் பேசிக்கொண்டிருந்த மையக்கதையை விட்டுவிட்டு, இரண்டாம் பாதி திரைக்கதை டேக் டைவர்ஷன் போடுகிறது. பின்கதை, அதில் வரும் சம்பவங்கள், அதனால் மையக் கதாபாத்திரத்திற்கு என்ன உளவியல் மாற்றம் நிகழ்ந்தது என எதுவும் அழுத்தமாக விளக்கப்படாமல், வெறும் காட்சிகளாக மேம்போக்காகவே ஓடுகின்றன. அதனால், ஸ்டைலிஷ் மேக்கிங் மட்டும் துறுத்திக்கொண்டு நிற்கிறது. முதற்பாதியில் உளவியல் ரீதியாகப் பல நுணுக்கங்களைத் திரைக்கதையின் முடிச்சுகளுக்குப் பயன்படுத்தியிருந்தார்கள். ஆனால், இரண்டாம் பாதியில் அதேபோன்ற விவரணைகளுக்கானத் தேவை இருந்தும், அதைக் கையில் எடுக்காமல் வழக்கமான 'கில்லர் சஸ்பென்ஸ் த்ரில்லர், ட்விஸ்ட்' மீட்டரில் வண்டியை விட்டிருக்கிறது எழுத்துக் கூட்டணி.

பலமான தொழில்நுட்ப ஆக்கம், நடிகர்களின் ஆழமான நடிப்பு, நுணுக்கமான விவரணைகள் எனச் சில வண்ணங்கள் கவர்ந்தாலும், அழுத்தமில்லாத இரண்டாம் பாதி, ஆமை வேகத் திரைக்கதை நகர்வு, துறுத்தும் ஸ்டைலிஷ் மேக்கிங் எனப் பல வண்ணங்கள் இந்த `போகெய்ன்வில்லா'வை ரசிக்கவிடாமல் செய்கின்றன.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

`மம்மூட்டியை அமைச்சராக்குங்க சுரேஷ் கோபி' - கூட்டத்தில் ஒலித்த குரல்; மம்மூட்டியின் ரியாக்‌ஷன் என்ன?

நடிகர் சுரேஷ் கோபி பா.ஜ.க-வில் இணைந்து கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திருச்சூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்று மத்திய அமைச்சர் ஆகி உள்ளார். பல சினிமாக்களில் நடித்துக் கொடுக்கவேண்டியது உள்ளதால், த... மேலும் பார்க்க

Sushin Shyam: `ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு!' - சினிமாவிலிருந்து பிரேக் எடுக்கும் சுஷின் ஷ்யாம்!

`போகைன்வில்லா' படத்திற்குப் பிறகு ஒரு சிறிய இடைவெளி எடுத்துக் கொள்ளப்போவதாக இசையமைப்பாளர் சுஷின் ஷ்யாம் அறிவித்திருக்கிறார்.மலையாள சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் சுஷின் ஷ்யாம் டாப் இடத்தை இறுக்... மேலும் பார்க்க

Jayasurya: ``நான் வாழும் தியாகி!'' - பாலியல் வழக்கில் போலீஸிடம் ஜெயசூர்யா அளித்த விளக்கம் என்ன?

தன் மீது பொய்யான வழக்கு புனையப்பட்டுள்ளதாகவும், தான் ஒரு வாழும் தியாகி என்றும் மலையாள நடிகர் ஜெயசூர்யா பாலியல் புகார் தொடர்பான விசாரணையின்போது காவல் துறையிடம் தெரிவித்திருக்கிறார்.கேரளாவின் ஆலுவாவைச் ... மேலும் பார்க்க