செய்திகள் :

Devara Review: பக்கா ஆந்திரா மீல்ஸ் உந்தி சார்... கானி காரம், சால்ட் மாத்ரம் லேது சார்!

post image

நன்றி: விகடன்இணையதளம்.

செங்கடல் என்றொரு கடல். அதன் அருகில் நான்கு மலை கிராமங்கள் இருக்கின்றன.

அந்த நான்கு கிராமங்களுக்கு ஒவ்வொரு தலைவர்கள். தேவரா (ஜூனியர் என்.டி.ஆர்), பைரா (சயீஃப் அலி கான்), குஞ்சாரா - கோரா (கலையரசன், சைன் டாம் சாக்கோ), ராயப்பா (ஶ்ரீகாந்த்). அந்தப் பகுதியில் வசிக்கும் நபர்களுக்கு தொழிலே கடல் கடந்து கப்பல்களில் சட்டவிரோதமாக வரும் பொருள்களை பத்திரமாக கொள்ளையடித்து கொடுப்பதுதான். அவர்களை வழிநடத்துகிறார்கள் தேவராவும் பைராவும். ஒரு சில சம்பவங்களால் மனமுடைந்த தேவரா, இந்தத் தொழிலை விட்டுவிடலாம்னு என்று முடிவெடுத்து மற்றவர்களையும் செங்கடலுக்குள் போகக்கூடாது என்கிறார்.

ஆனால், அந்த கூட்டத்தில் முக்கிய புள்ளிகளான பைரா மற்றும் பலருக்கு இதில் உடன்பாடில்லை. அதனால் தேவராவுக்கு எதிராக சில சதி வேலைகள் நடத்தி, கடலுக்குள் செல்ல நினைத்தவர்கள் இறக்கிறார்கள். 'என் சொல்லை மீறிப் பணத்துகாக கொள்ளையடிக்க செங்கடலுக்குள் யார் செல்ல நினைத்தாலும் அவர்களுக்கு நான் பயமாக இருப்பேன்' என்ற வாசகத்தை எழுதிவைத்துவிட்டு காணாமல் போகிறார் தேவரா. இந்தப் பகை அடுத்த தலைமுறையில் என்னவாகிறது, காணாமல் போன தேவரா என்னவானார், அவரை வெளியில் கொண்டு வர நினைக்கும் எதிராளி பைராவின் எண்ணம் நிறைவேறியதா, தேவராவின் மகன் வரா செய்வது என்ன என்பதே 'தேவரா பாகம் 1'.

'தேவரா' ஜூனியர் என்.டி.ஆர்

தேவரா - வரா (அப்பா - மகன்) டபுள் ஆக்‌ஷனில் ஜூனியர் என்.டி.ஆர். வீராதி வீரன், சூராதி சூரன் என ஊரே கொண்டாடும் பராக்ரமசாலி தேவராவாகவும், அப்பனுக்கும் புள்ளைக்கும் சம்பந்தமே இல்லை என்று சொல்லுமளவுக்கு பயந்த சுபாவம் கொண்ட மகனாகவும் கலக்கியிருக்கிறார். முதல் பாதி முழுக்க அதிரடி அப்பாவின் வீர சாகசங்கள் மட்டுமே நிரம்பியிருக்கின்றன. மாஸ், ஆக்‌ஷன் காட்சிகளில் திரையில் பறக்கும் அனலை வெளியில் உணரமுடிகிறது. ஆனாலும் 'குழாய் அடியில் உருண்டு என்ன பண்றது... கோயில் அடியிலல்ல விழணும்' என்று 'எம்.மகன்' படத்தின் வடிவேலு வசனம்தான் நினைவுக்கு வருகிறது. பின்னர் மகனாக 'நமக்கு எதுக்கு வம்பு' ஜோனில் கூட்டத்திலிருந்து வேடிக்கை பார்க்கும் அவர், குடும்பத்தை விட்டுவிட்டு காணாமல் போன அப்பா மீது கோபம் கொண்ட இளைஞனாக தன் நிதானமான நடிப்பையும் வெளிப்படுத்தி இருக்கிறார்.

இரண்டு லுக்கில் சயீஃப் அலி கான். நெகட்டிவ் ஷேட் கேரக்டர். தனக்கு கொடுக்கப்பட்ட பைரா பாத்திரத்தைக் கச்சிதமாக நடித்து கொடுத்திருக்கிறார். 'ரே சம்பேஸ்தானுரா...' என்று ஹை டெசிபலில் கத்துவது, எங்கு வந்தாலும் தன்னோடு ஒரு படையே அழைத்து வருவது, ஓவர் டோஸ் ஆக்‌ஷன் என டோலிவுட்டின் டெம்ப்ளேட் வில்லனுக்கான விஷயங்கள் எதுவும் இல்லை என்பது சிறப்பு. ஆனா, அதற்கென்று எதுவுமே இல்லை என்பதுதான் பெரிய குறை. தனியாக நின்று யோசிக்கும், முறைத்து பார்க்கும் க்ளோஸப் ஷாட்களை மட்டும் வைத்தால் வில்லனிசம் வந்துவிடுமா ? ஆக்‌ஷன், கடலுக்குள் சேஸிங், கப்பல் ஃபைட் ஆகியவை இருக்கின்றன. படம் நெடுக வில்லன் என்ன செய்கிறார் என்று கேட்டால், காணாமல் போன ஹீரோ தேவரா வெளியில் வருவதற்காக காத்திருக்கிறார் என்பதுதான் பதிலாக சொல்ல முடியும். ஒரு வேளை 'பாகம் 2'ல் நிறைய இருக்குமோ என்னவோ... ஜூனியர் என்.டி.ஆர் - சயீஃப் அலி கான் காம்பினேஷன் நன்றாக இருக்கிறது. ஆனால், கதாபாத்திர வடிவமைப்பில் பெரிய ஓட்டை விழுந்தது மைனஸ். 

'தேவரா' ஜூனியர் என்.டி.ஆர் - சயீஃப் அலி கான்

சயீஃப் அலி கானுக்கு மட்டுமல்ல ஜான்வி கபூருக்கும் தென்னிந்திய சினிமாவில் இதுதான் அறிமுகப்படம். நான்கு காட்சிகள் 'சுட்டுமல்லே' என்றொரு ரொமான்டிக் பாடல் அவ்வளவுதான் ஜான்விக்கு 'தேவரா - 1'ல் இடம். மகன் வரா கதாபாத்திரத்திற்கு ஜோடி. இரண்டாம் பாதியில்தான் மகன் ஜூனியர் என்.டி.ஆரும் ஜான்வியும் வருகிறார்கள். அந்த நான்கு காட்சிகளில் ஒன்று குளியல் காட்சி (அதுதான் இன்ட்ரோ), தோழிகளுடன் ஒரு காட்சி, ஜூனியர் என்.டி.ஆர் சண்டையிடுவதை ரசிக்கும் காட்சி, அவருடன் காதல் காட்சி... என நான்கு காட்சி. படத்தின் இடைவேளையில் வரும் விளம்பரங்களில் கூட அதிக நேரம் வருகிறார். சயீஃப் அலி கானுக்கு சொன்னதுதான் ஒரு வேளை 'பாகம் 2'ல் நிறைய இருக்குமோ என்னவோ... கலையரசன், சைன் டாம் சாக்கோ ஆகியோர் படம் முழுக்க வருகிறார்கள். இப்படியான பிரமாண்ட படத்தில் அவர்களை பார்க்க மகிழ்ச்சிதான். ஆனால் என்ன க்ளிஷேவான காட்சிகள்தான். சிங்கப்பா என்ற கேரக்டரில் பிரகாஷ்ராஜ். அவர் வழியேதான் படத்தின் கதை சொல்லப்படுகிறது. ஆனால், அவர் யாரென்று சொல்லப்படவில்லை. மீண்டும் அதேதான்... ஒரு வேளை 'பாகம் 2'ல் இருக்குமோ என்னவோ... 

'மிர்ச்சி', 'ஶ்ரீமந்துடு', 'ஜனதா கேரேஜ்', 'பரத் அனே நேனு', 'ஆச்சார்யா' என ஐந்து படங்களை இயக்கிவர் கொரடாலா சிவா. 'தேவரா 1' அவருக்கு 6வது படம். இதில் 'ஆச்சார்யா' தவிர, மற்றவை எல்லாம் ப்ளாக்பஸ்டர்கள். 'ஆச்சார்யா' படம் தோல்வியடைந்தால் இந்தப் படத்தில் கம் பேக் கொடுத்து மிரட்டுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இதன் ரிசல்ட் என்னவோ கம் மட்டும்தான் பேக் இல்லை. படம் எடுப்பதில் காட்டிய அத்தனை மெனக்கெடலும் கதையில் இருந்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். மாஸ் கமர்ஷியல் எண்டர்டெயினர் படத்திற்குத் தேவையான அத்தனை அம்சங்களையும் கையில் வைத்துக்கொண்டு, அதை மிஸ் செய்திருப்பது வருத்தம். ஒரு பாகமாக அறிவிக்கப்பட்ட படம் இரண்டு பாகமாக மாறியது. அதுதான் பிரச்னையோ என்று தோன்றுகிறது.

'தேவரா' ஜூனியர் என்.டி.ஆர் - ஜான்வி கபூர்

பிரமாண்டமாக படம் எங்கேயோ இருக்கிறது. ஆனால், கதையை கச்சிதமாக சொல்லாமல் 'பிரண்ட்ஸ்' படத்தில் விஜய், சூர்யா, வடிவேலு, சார்லி ஆகியோர் கையில் அருவா வைத்துக்கொண்டு சுற்றிக்கொண்டிருப்பார்களே அப்படி இருக்கிறது 'தேவரா 1'. ஓவரின் 5 பந்துகள் டாட் செய்துவிட்டு கடைசி பந்தில் சிங்கிள் எடுப்பதை போல நகர்கிறது, கதை சொல்லலும் திரைக்கதையும். ஜுனியர் என்.டி.ஆரின் திரை ஆளுமைக்கு இந்தக் கதை உறுதுணையாக நிற்கவில்லை. கடலுக்குள் மூழ்கி பிரமாண்ட சுறா மீனின் வாயில் கயிற்றை கட்டி அதன் மீதமர்ந்து அதனை அடக்கிக்கொண்டிருக்கிறார் ஜூனியர் என்.டி.ஆர். 'RRR' படத்தில் காட்டுக்குள் புலியுடன் சண்டை போட்ட என்.டி.ஆரை நம் கடல் சார்ந்த கதையில் சுறாவுடன் சண்டை போட வைக்கலாம் என்று இயக்குநர் நினைத்துவிட்டார் போல. சும்மா சொல்லக்கூடாது...அந்த சுறாவும் என்.டி.ஆருக்கு ஈடு கொடுத்து நடித்திருக்கிறது. வி.எஃப்.எக்ஸ் டீமுக்கு வாழ்த்துகள் !

ஒளிப்பதிவாளர் ரத்னவேலுவின் உழைப்பு இந்தக் கதையை எப்படியாவது வெற்றிப்படமாக்க முயற்சி செய்திருக்கிறது. பெரும்பாலும் இரவில் நடக்கும் காட்சிகள், கடல் பின்னணியில் கடலில் நடக்கும் காட்சிகள், அத்தனை கிராஃபிக்ஸ் காட்சிகள்... படத்தின் பிரமாண்டத்தில் ஒளிப்பதிவுக்கு பெரிய பங்கு இருக்கிறது. அப்பா ஜூனியர் என்.டி.ஆர் வரும் பீரியட் போர்ஷன், மகன் வரும் போர்ஷன் என இரண்டிலும் வெரைட்டி காட்டி தனக்கான வேலையை மிகச்சிறப்பாக செய்திருக்கிறார், ரத்னவேலு. அனிருத் இசையில் 'சுட்டுமல்லே' பாடலும் 'தேவரா' தீம் மியூசிக்கும் படத்தை எலிவேட் செய்கிறது. பின்னணி இசையில் அவ்வப்போது அவரின் பல தமிழ் படங்களின் மணம் வந்தாலும் அதில் ஜூனியர் என்.டி.ஆரை பார்க்க ஃப்ரஷாக இருக்கிறது.

'தேவரா' ஜூனியர் என்.டி.ஆர்

பெரிய கப்பல், மலை கிராமங்கள் என கலை இயக்கத்தில் தன் அனுபவத்தில் இரண்டு சாம்பிளை தூவியிருக்கிறார், சாபு சிரில். ஒரு பாகம் இருந்த படத்தை இரண்டு பாகமாக எடுக்கலாம்னு என்று ஐடியா கொடுத்ததே எடிட்டர் ஶ்ரீகர் பிரசாத்தான் என்று ஜூனியர் என்.டி.ஆர் சொல்லியிருந்தார். 'அதுதான் இரண்டு பாகமா எடுக்கப்போறமே...அதனால எடுத்த எல்லாத்தையும் எடிட் செய்யாமல் படத்துல வெச்சுடுங்க' என்று இயக்குநர் தரப்பில் சொல்லிவிட்டார்களா என்று தெரியவில்லை. எந்துக்கு  சார்... எந்துக்கு இ சினிமானி மீரு 2 பாகலுகா பிளான் சேஸாரு..? செப்பண்டி...

ஆமா...படம் ஆரம்பிக்கும்போது மும்பையில் உள்துறை அமைச்சர், ரா ஏஜென்ஸியில் இருக்கும் முக்கிய புள்ளிகள், காவல்துறை எல்லோரும் சேர்ந்து எத்தி என்றொருவரை கண்டுபிடிக்க வேண்டும் என்று சொல்வார்கள். அப்படி எத்தி தேடிதான் போலீஸ் ஆந்திராவுக்கு வருவார்கள், இவரை போய் பாருங்க, அவரை போய் பாருங்கன்னு சொல்லி அலையும்போது, பிரகாஷ் ராஜை சந்திப்பார்கள். அவர் 'தேவரா' கதையை சொல்ல ஆரம்பித்துவிடுவார். ஃப்ளாஷ் பேக்கிற்கு உள்ளேயே ஃப்ளாஷ்பேக் வைத்து கதை சொல்லி முடியும்போது ஒரு லீட் வைத்து படம் முடிகிறது. இதில் இவர்கள் தேடி வந்த எத்தி பற்றி ஒன்றுமே இருக்காது. வந்த வேலையை மறந்து இவர் சொல்லும் கதையை கேட்க ஆரம்பித்துவிட்டார்கள் போல... எத்தி யார், படம் ஆரம்பிக்கும் அந்தக் கேரக்டரையே மறந்துவிட்டார்களே... மீண்டும் அதேதான்... ஒரு வேளை 'பாகம் 2'ல் இருக்குமோ என்னவோ... 

'தேவரா' ஜூனியர் என்.டி.ஆர்

விளம்பரத்தையும் போர்டையும் பார்த்து, 'இன்னைக்கு ஒரு புடி இருக்கு...சூப்பரான காரமான ஆந்திரா மீல்ஸ் சாப்பிடப்போறோம்' என்று ஆசை ஆசையாய் ஹோட்டலுக்குள் வந்தமர்ந்த நம்மிடம், 'சார் நீக்கு பக்காவான ஆந்திரா மீல்ஸ் உந்தி சார்... கானி காரம், சால்ட் மாத்ரம் லேது சார்' என்று சொன்னது போல... பக்கா மாஸ் என்டர்டெயினிங் கமர்ஷியல் படத்துக்கான கதை, அசத்தலான காஸ்டிங், அட்டகாசமான டெக்னிக்கல் டீம், அருமையான வி.எஃப்.எக்ஸ் என அத்தனை பாசிட்டிவான விஷயங்கள் இருந்தாலும் உப்பு, காரம் இல்லாத சுமாரான ஆந்திரா மீல்ஸாக வந்து ஏமாற்றமளித்திருக்கிறது 'தேவரா 1'. 

பாலய்யா வஸ்தாவய்யா 4 : `ஆட்டமு தேரோட்டமு' - பிறந்த நாளுக்குக் குவிந்த கூட்டம்; சாட்டை எடுத்த பாலய்யா

ஒரு 'பாலய்யாஜோக்' ஆந்திரா பக்கம் காலேஜ் அளவில் பாப்புலர்.*"ஒருவேளை பாலய்யா இப்ப பிறக்காம 150 வருஷத்துக்கு முன்னாடி பிறந்திருந்தா என்ன ஆகியிருக்கும்?"**"இந்திய சுதந்திரத்துக்காக வெள்ளைக்காரங்க நம்மக்கி... மேலும் பார்க்க

பாலய்யா வஸ்தாவய்யா 3: ஒரு விக்குக்கு இத்தனை அக்கப்போரா? - போலீஸையே சுற்றலில் விட்ட பாலய்யா

அது ஒரு ஏப்ரல் மாதத்தின் உச்சந்தலையில் உளி வைத்து அடிக்கும் வெயில் பொழுது...ஹைதராபாத் ஜூப்லி ஹில்ஸ் பகுதியில் இருக்கும் பாலய்யாவின் வீடு பரபரப்பில் இருந்தது. காவல்துறை வாகனங்களும், அவரது தனியார் பாதுக... மேலும் பார்க்க

Allu Arjun: 1600 கி.மீ சைக்கிள் பயணம்; அல்லு அர்ஜுனைக் காண வந்த உ.பி ரசிகர்

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அல்லு அர்ஜுன்.இவரது நடிப்பில் வெளியான 'புஷ்பா’ படம் ஹிட் ஆனதைத் தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். இப்படம் டிசம்பர் 6 ஆம் தேதி... மேலும் பார்க்க

பாலய்யா வஸ்தாவய்யா 2: `சூரியனுக்கு முன் உணவு' -MGR பெரியப்பா, சிவாஜி சித்தப்பா - சென்னையில் விருந்து

வணக்கம் மக்களே... 'பாலய்யா வஸ்தாவய்யா' தொடருக்குக் கலவையான கமென்ட்டுகளும் ரகளையான ரியாக்‌ஷன்களுமாய் திக்குமுக்காட வைத்துவிட்டீர்கள்.பலர், "செம சூப்பரு...ஃபுல் ஸ்கேனிங் ரிப்போர்ட் கொடு தல!" என்று வாழ்த... மேலும் பார்க்க