Dhanush : டெல்லியில் பாலிவுட் படப்பிடிப்பு; வெளிநாட்டில் இட்லி கடை பாடல்! - தனுஷ் | Exclusive Update
Dhanush Exclusive
பாலிவுட்டில் தனுஷ் நடித்து வரும் 'தேரே இஷ்க் மெய்க்' படத்தின் ஷூட்டிங் டெல்லியில் நடைபெற்று வருகிறது. 'இட்லி கடை' படத்தை அடுத்து தனுஷ் நடிக்கும் படத்தை இயக்குநர்கள் ராஜ்குமார் பெரியசாமி, விக்னேஷ் ராஜா, அருண் மாதேஸ்வரன், தமிழரசன் பச்சமுத்து இவர்களில் யாராவது ஒருவரின் படமாக இருக்ககூடும் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்த்தனர். இந்நிலையில் அவர் இந்தியில் நடித்து வருகிறார்.

'இட்லி கடை'
நடிப்பு, இயக்கம் என தனுஷ் இரவு பகல் பாராமல், பம்பரமாக உழைத்து வருகிறார். 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' ரிலீஸுக்கு பின்னர், 'இட்லி கடை'யை இயக்கி முடித்துவிட்டார் தனுஷ். இந்த படத்தில் அவர் நடிப்பதுடன், இயக்கவும் செய்திருக்கிறார்.
அருண்விஜய், ராஜ்கிரண், சமுத்திரகனி, பிரகாஷ்ராஜ், நித்யாமெனன், ஷாலினி பாண்டே என பலரும் நடித்துள்ளனர். இதன் படப்பிடிப்பு தென்மாவட்டங்களில் நடந்து முடிந்திருக்கிறது. மொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்தாலும், இன்னம் ஒரு பாடல் படமாக்க வேண்டியிருக்கிறது. அந்த பாடலை வெளிநாட்டில் படமாக்குகின்றனர். தனுஷ், ஷாலினி பாண்டே காம்பினேஷனில் பாங்காக்கில் அந்த பாடல் படமாகலாம் என்கின்றனர்.

இதற்கிடையே தனுஷ் இந்தியில் ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் 'தேரே இஷ்க் மெய்ன்' என்ற படத்தில் நடித்து வருகிறார். ஆனந்தின் இயக்கத்தில் 'ராஞ்சனா', 'அட்ராங்கி ரே' என இரண்டு படங்களில் தனுஷ் நடித்திருக்கிறார். ஆனந்தும், தனுஷுடன் மூன்றாவது முறையாக இணைகிறார். 'தேரே இஷ்க் மெய்ன்' படத்தில் கீர்த்தி சனூன் நடித்து வருகிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.
கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் டெல்லியில் தொடங்கிய இதன் படப்பிடிப்பு மும்முரமாக நடந்து வருகிறது. தனுஷ், கிர்த்தி சனூன் காம்பினேஷனில் காதல் காட்சிகள் எடுத்து வருகின்றனர். தொடர்ந்து படப்பிடிப்பு நைட் ஷூட் ஆகவே சென்று கொண்டிருக்கிறது. தவிர டெல்லியில் தொடர்ந்து 40 நாட்கள் படப்பிடிப்பை திட்டமிட்டுள்ளனர் என்றும், இன்னும் 20 நாட்கள் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெறும் என்றும் சொல்கின்றனர்.

'தேரே இஷ்க் மெய்ன்' படத்தை அடுத்து தனுஷ் தமிழுக்கு வருகிறார். இதற்கிடையே சேகர் கம்முலா இயக்கத்தில் அவர் நடித்து வரும் 'குபேரா' ஜூனில் வெளியாகிறது. இன்னும் இரண்டு வார படப்பிடிப்பு படமாக்க வேண்டியிருக்கிறது. அதில் ராஷ்மிகா, தனுஷ் காம்பினேஷனில் டூயட் ஒன்றும் எடுக்க வேண்டியிருக்கிறது என்கின்றனர். 'குபேராவை முடித்துக் கொடுத்துவிட்டு, 'இட்லி கடை'யின் பாடல் காட்சிகளுக்காக வெளிநாடு பறக்கிறார் தனுஷ் என்கின்றனர்.!
Vikatan Play
இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்' பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்!
https://tinyurl.com/Velpari-Vikatan-Play